மின் உலாவிய சடையினர், விடையினர், மிளிர்தரும்
அரவோடும்
பன் உலாவிய மறைஒலி நாவினர், கறை அணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றை அம்தாரினர், புகழ் மிகு
கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட, வீடு ஆமே.
|
1
|
நீர் உலாவிய சடை இடை அரவொடு, மதி, சிரம்
நிரைமாலை,
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை
ஆர்க்க,
ஏர் உலாவிய இறைவனது உறைவு இடம் எழில் திகழ்
கீழ்வேளூர்
சீர் உலாவிய சிந்தை செய்து அணைபவர் பிணியொடு
வினை போமே.
|
2
|
வெண் நிலா மிகு விரிசடை அரவொடும், வெள் எருக்கு,
அலர்மத்தம்,
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வு உறு
கீழ்வேளூர்,
பெண் நிலாவிய பாகனை, பெருந்திருக்கோயில்
எம்பெருமானை,
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில்
உள்ளாரே.
|
3
|
சேடு உலாவிய கங்கையைச் சடை இடைத் தொங்கவைத்து
அழகு ஆக
நாடு உலாவிய பலி கொளும் நாதனார், நலம் மிகு
கீழ்வேளூர்ப்
பீடு உலாவிய பெருமையர், பெருந்திருக்கோயிலுள் பிரியாது
நீடு உலாவிய நிமலனைப் பணிபவர் நிலை மிகப்
பெறுவாரே.
|
4
|
துன்று வார்சடைச் சுடர் மதி, நகுதலை, வடம் அணி
சிரமாலை,
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு
கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக்கோயிலின் நிமலனை,
நினைவோடும்
சென்று உலாவி நின்று, ஏத்த வல்லார் வினை தேய்வது
திணம் ஆமே.
|
5
|
Go to top |
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை, கூத்தனை,
மகிழ்ந்து உள்கித்
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு
கீழ்வேளூர்
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக்கோயில்
மன்னும்
முத்து உலாவிய வித்தினை, ஏத்துமின்! முடுகிய இடர்
போமே.
|
6
|
பிறை நிலாவிய சடை இடைப் பின்னலும் வன்னியும் துன்
ஆரும்
கறை நிலாவிய கண்டர், எண்தோளினர், காதல் செய்
கீழ்வேளூர்
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில்
மன்னும்
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை
போமே.
|
7
|
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும்,
அரக்கன்தன்
தலை எலாம் நெரிந்து அலறிட, ஊன்றினான் உறைதரு
கீழ்வேளூர்
கலை நிலாவிய நாவினர் காதல் செய் பெருந்திருக்கோயிலுள
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய, வல்வினை
போமே.
|
8
|
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு
ஒண்ணாப்
பஞ்சு உலாவிய மெல் அடிப் பார்ப்பதி பாகனை,
பரிவோடும்
செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு உலாவிய கண்டனை, நணுகுமின்! நடலைகள்
நணுகாவே.
|
9
|
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள்,
சீவரத்தார்,
வீறு இலாத வெஞ்சொல் பல விரும்பன் மின்! சுரும்பு
அமர் கீழ்வேளூர்
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெருந்திருக்கோயில்
மன்னு
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணுமின்! தவம்
ஆமே.
|
10
|
Go to top |
குருண்ட வார் குழல் சடை உடைக் குழகனை, அழகு அமர்
கீழ்வேளூர்த்
திரண்ட மா மறையவர் தொழும் பெருந்திருக்கோயில்
எம்பெருமானை,
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன்
சம்பந்தன்
தெருண்ட பாடல் வல்லார் அவர், சிவகதி பெறுவது திடம்
ஆமே.
|
11
|