வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்;
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே!
|
1
|
நிருத்தனார், நீள் சடை மதியொடு பாம்பு அணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
அருத்தனார்; அழகு அமர் மங்கை ஓர்பாகமாப்
பொருத்தனார், கழல் இணை போற்றுதல் பொருளதே.
|
2
|
பண்ணின் ஆர் அருமறை பாடினார், நெற்றி ஓர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
விண்ணின் ஆர் விரிபுனல் மேவினார், சடைமுடி
அண்ணலார், எம்மை ஆள் உடைய எம் அடிகளே
|
3
|
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது; பல் பலி
உணங்கல் ஓடு உண்கலன்; உறைவது காட்டு இடை
கணங்கள் கூடித் தொழுது ஏத்து காட்டுப்பள்ளி
நிணம் கொள் சூலப்படை நிமலர் தம் நீர்மையே!
|
4
|
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரிக்
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி, அங்கு
அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே
|
5
|
Go to top |
வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம் முன்
ஓதினார், உமை ஒரு கூறனார், ஒண்குழைக்
காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நாதனார்; திருவடி நாளும் நின்று ஏத்துமே!
|
6
|
மையின் ஆர் மிடறனார், மான் மழு ஏந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
தையல் ஓர்பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார்; அடி தொழ, அல்லல் ஒன்று இல்லையே.
|
7
|
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின் ஆர்
மலைதனால் வல் அரக்கன் வலி வாட்டினான்,
கலைதனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி
தலைதனால் வணங்கிட, தவம் அது ஆகுமே.
|
8
|
செங்கண் மால், திகழ்தரு மலர் உறை திசைமுகன்,
தம் கையால்-தொழுது எழ, தழல் உரு ஆயினான்-
கங்கை ஆர் சடையினான்-கருது காட்டுப்பள்ளி
அம் கையால் தொழுமவர்க்கு, அல்லல் ஒன்று இல்லையே.
|
9
|
போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள்
வாதினால் உரை அவை மெய் அல; வைகலும்,
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
ஏரினால்-தொழுது எழ, இன்பம் வந்து எய்துமே.
|
10
|
Go to top |
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்-
அருமறை அவை வல அணி கொள் சம்பந்தன்-சொல்,
கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி
பரவிய தமிழ் சொல, பறையும், மெய்ப் பாவமே.
|
11
|