திருவையாறு - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி வடதிசைப் பெருந்தலங்களாக வழியில் உள்ள திருப்பருப்பதம் முதலான தலங்களைத் தரிசித்துக்கொண்டு அடியார்களை விடுத்துத் தனியே இரவுபகலாய், காடுமேடு, மலை, மணல் பரப்புக்களில் நடந்துசென்றார். கால்களால் நடக்கலற்றாது கைகளால் தாவிச் சென்றார். கைகளும் மணிக்கட்டு வரை தேய்ந்தன. மார்பினால் உந்திச் சென்றார். என்புகளும் தேய்ந்து முறிந்தன. எப்படியும் கயிலைநாதனைக் கண்டு இன்புற வேண்டும் என்ற வேட்கையால் புரண்டு புரண்டு சென்று உடலுறுப்புக்கள் முழுதும் தேய்ந்து ஓரிடத்தில் செயலற்றுத் தங்கிக் கிடந்தார். பெருமான் ஒரு முனிவர் வேடம் பூண்டு எதிரே நின்று, திருக்கயிலை மானிடர் சென்றடைதற்கு எளிதோ? திரும்பிச் செல்லும், இதுவே தக்கது என்று கூற அப்பரும், என்னை ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என்று உறுதி மொழிந்தார். முனிவராய் வந்த பெருமான் மறைந்து அசரீரியாய் நாவினுக்கரசனே! எழுந்திரு என்று கூறினன். அப்பொழுதே உடல் நலம் பெற்று நாவுக்கரசர் எழுந்து பணிந்து அண்ணலே, கயிலையில் நின்திருக்கோலம் நண்ணி நான்தொழ நயந்தருள்புரி எனப் பணிந்தார். பெருமான் மீண்டும் அசரீரியாய் இத் தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் காட்சியைக் காண்க என்று கூறினன். அவ்வாறே அப்பரும் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே அத்தடாகத்தில் மூழ்கி எழுந்தனர். திருவையாற்றில் உள்ள தடாகத்தில் திருநாவுக்கரசர் எழுந்தார். ஐயாற்றிறைவரை வணங்கப் புகுமளவில் அங்குள்ள உயிர்கள் அனைத்தும் சத்தியும் சிவமுமாம் காட்சிகளைக் காட்டின. அப்பெருங் கோயில் கயிலைங்கிரியாய்க் காட்சி அளித்தது. திருமால், பிரமன், இந்திரன் முதலானோர் போற்ற வேதம் முழங்க, விண்ணவர், சித்தர் வித்யாதரர்களுடன் மாதவர் முனிவர் போன்ற இறைவன் அம்பிகையோடு எழுந்தருளியிருக்கும் அருட்காட்சி கண்டு ஆனந்தக் கூத்தாடினார்; பாடினார்; பல்வகைப் பாமாலைகளாலும் போற்றிப் பரவிப் புகழ்ந்து மகிழ்ந்தார். பெருமான் கயிலைக் காட்சியை மறைத்தருளினான். திரு நாவுக்கரசர் திகைத்து இதுவும் இறைவன் திருவருளே என்று எண்ணித் தெளிந்து மாதர்ப் பிறைக்கண்ணியானை என்ற திருப்பதிகம் பாடித் தொழுதார்.
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.
போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன்,
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி,
துறை இளம் பல்மலர் தூவி, தோளைக் குளிரத் தொழுவேன்,
அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது,
சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டுஅறியாதன கண்டேன்!
கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி,
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது,
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடி,
பெரும் புலர்காலை எழுந்து, பெறு மலர் கொய்யா வருவேன்.
அருங் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது,
கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி,
பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன்,
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது,
நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி,
எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன்,
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது,
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்;
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி,
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன்,
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது,
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!