சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்! மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி, பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே.
|
1
|
கருது நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது மருத வானவர் வைகும் இடம், மற வேடுவர் பொருது, சாத்தொடு, பூசல் அறா புனவாயிலே.
|
2
|
தொக்கு ஆய மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! நக்கான், நமை ஆள் உடையான், நவிலும்(ம்) இடம் அக்கோடு அரவு ஆர்த்த பிரான் அடிக்கு அன்பராய்ப் புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே.
|
3
|
வற்கென்று இருத்தி கண்டாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம்; அதுவே புகல் கல்குன்றும், தூறும், கடு வெளியும், கடல் கானல் வாய்ப் புற்கென்று தோன்றிடும் எம் பெருமான் புனவாயிலே.
|
4
|
நில்லாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! நல்லான் நமை ஆள் உடையான் நவிலும்(ம்) இடம் வில் வாய்க் கணை வேட்டுவர் ஆட்ட, வெகுண்டு போய்ப் புல் வாய்க் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.
|
5
|
Go to top |
மறவல் நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறித் தன் பேடையைப் புறவம் கூப்பிடப் பொன் புனம் சூழ் புனவாயிலே.
|
6
|
ஏசு அற்று நீ நினை, என்னொடு சூள் அறு, வைகலும்! பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி தேசத்து அடியவர் வந்து இருபோதும் வணங்கிடப் பூசல்-துடி பூசல் அறா புனவாயிலே.
|
7
|
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே தெள்ளி மா மணி தீவிழிக்கும்(ம்) இடம் செந் தறை கள்ளி வற்றி, புல் தீந்து, வெங் கானம் கழிக்கவே, புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.
|
8
|
எற்றே, நினை! என்னொடும் சூள் அறு, வைகலும்! மற்று ஏதும் வேண்டா, வல்வினை ஆயின மாய்ந்து அற; கல்-தூறு கார்க் காட்டு இடை மேய்ந்த கார்க்கோழி போயப் புற்று ஏறி, கூ கூ என அழைக்கும் புனவாயிலே.
|
9
|
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை அடியார் அடியன்-நாவல் ஊரன்-உரைத்தன மடியாது கற்று இவை ஏத்த வல்லார், வினை மாய்ந்து போய்க் குடி ஆக, பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, குற்றமே.
|
10
|
Go to top |