மற்றவரோடு பகிர்ந்து உண்ணும் நினைவு ஒரு தினையளவும் இல்லாதவன் யான், இரக்கமே இல்லாதவன் யான், உனது திருத்தலங்களாகிய திருவண்ணாமலை, திருத்தணிகை, பழநிமலை, சுவாமிமலை, திருச்செங்கோடு, மற்றும் பல மலைகளைப் பாடி போற்றுகின்ற திறம் இல்லாதவன் யான், வஞ்சனையும் மாறுபாடும் நிறைந்த பேச்சையே பேசப் பழகியவன் யான், அழகற்றவன் யான், நற்குலம் அற்றவன் யான், நற்குணம் அற்றவன் யான், பக்தி இல்லாதவன் யான், பெருந்தன்மை இல்லாதவன் யான், எவ்விதப் பெருமையும் இல்லாதவன் யான், குயவனுடைய சக்கரம் சுழலும் ஒரு சுழற்சி வேகத்திற்குள் எழுபது சுற்று வரும் மனச் சுழற்சி கொண்டு அலை பாய்ந்து வேதனைப்படும் கோணல் புத்தி உடையவன் யான், உள்ளம் உருகல், வாய்விட்டு அழுதல், உடல் வணங்குதல் இம்மூன்றின் நினைப்பு கிடையாத ஆணவத் திமிர் உள்ளவன் யான், நல்ல தன்மை அற்றவன் யான், அருளற்றவன் யான், பொருளற்றவன் யான், திருட்டுப்புத்தி உள்ளவன் யான், அறிவில்லாதவன் யான், நற்கதி இல்லாதவன் யான், தலை எழுத்தும் நன்றாக இல்லாதவன் யான், நற்செய்கைகள் செய்யும் உணர்ச்சி இல்லாதவன் யான், இத்தகைய யான் சிவபதம் அடையக் கூடிய ஒரு நாளும் உண்டோ? (இதன் பிறகு திருமாலைப் பற்றிய விவரமான வர்ணனை வருகிறது) மகர மீன்கள் உள்ள கடல் (அம்பின் வேகம் தாங்காமல்) ஓலமிட, அரக்கன் ராவணனின் பத்து கிரீடங்களும் இருபது திண்ணிய புயமலைகளும் அற்றுப் போய் கீழே விழுமாறு ஒரு பாணத்தைத் தெரிந்து செலுத்திய மேகவண்ண ராமனும், குரு நாட்டைச் சேர்ந்த மன்னர்களாகிய பாண்டவர்க்குத் தூதனாகச் சென்ற கண்ணனும், தடாகத்தில் மதயானை கஜேந்திரன்ஆதிமூலமே என ஓலமிட வந்துதவிய வரதராஜனும், இரண்டு திண்மையான மருத மரங்களைச் சாடி முறித்த கண்ணனும், குழந்தை பிரகலாதனது குதலைச் சொற்களாக வந்த ஓம் நமோ நாராயணாய என்னும் வேதமொழியினை இகழ்ந்த இரணியனது உடலை நகத்தின் நுனி கொண்டு பிளந்த ஒப்பற்ற வலிமை வாய்ந்த நரசிம்ம மூர்த்தியும் சக்ராயுதத்தை ஏந்தியவனும், மரகதப் பச்சை மாமலைபோல் மேனியை உடையவனும், நெருப்பைக் கக்குகின்ற காளிங்கன் என்ற பாம்பின் தலையுச்சியில் நடனம் செய்த கண்ணனும் ஆகிய விஷ்ணு மூர்த்தி திருமாலின் அழகிய மருமகனே, உள்ளம் உருகும் அடியாரின் நல்வினை, தீவினை ஆகிய இருவினை இருளை விலக்க உதயமாகும் ஞான சூரியனே, பனிக்கிரணங்கள் உடைய சந்திரன் சுற்றி வருகின்ற இந்த உலகத்தை ஒரே நொடியில் சுற்றிவந்த பெருமாளே.
பகிர நினைவொரு தினையள விலுமிலி ... மற்றவரோடு பகிர்ந்து உண்ணும் நினைவு ஒரு தினையளவும் இல்லாதவன் யான், கருணை யிலி ... இரக்கமே இல்லாதவன் யான், உனது அருணையொடு தணியல் பழநிமலை குருமலை பணிமலை பலமலை பாடி ... உனது திருத்தலங்களாகிய திருவண்ணாமலை, திருத்தணிகை, பழநிமலை, சுவாமிமலை, திருச்செங்கோடு, மற்றும் பல மலைகளைப் பாடி பரவு மிடறிலி ... போற்றுகின்ற திறம் இல்லாதவன் யான், படிறுகொ டிடறுசொல் பழகி ... வஞ்சனையும் மாறுபாடும் நிறைந்த பேச்சையே பேசப் பழகியவன் யான், அழகிலி குலமிலி நலமிலி ... அழகற்றவன் யான், நற்குலம் அற்றவன் யான், நற்குணம் அற்றவன் யான், பதிமை யிலி பவுஷதுமிலி ... பக்தி இல்லாதவன் யான், பெருந்தன்மை இல்லாதவன் யான், மகிமையிலி ... எவ்விதப் பெருமையும் இல்லாதவன் யான், குலாலன் திகிரி வருமொரு செலவினில் ... குயவனுடைய சக்கரம் சுழலும் ஒரு சுழற்சி வேகத்திற்குள் எழுபது செலவு வருமன பவுரிகொடு ... எழுபது சுற்று வரும் மனச் சுழற்சி கொண்டு அலமரு திருகன் ... அலை பாய்ந்து வேதனைப்படும் கோணல் புத்தி உடையவன் யான், உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத திமிரன் ... உள்ளம் உருகல், வாய்விட்டு அழுதல், உடல் வணங்குதல் இம்மூன்றின் நினைப்பு கிடையாத ஆணவத் திமிர் உள்ளவன் யான், இயல்பிலி யருளிலி பொருளிலி ... நல்ல தன்மை அற்றவன் யான், அருளற்றவன் யான், பொருளற்றவன் யான், திருடன் மதியிலி ... திருட்டுப்புத்தி உள்ளவன் யான், அறிவில்லாதவன் யான், கதியிலி விதியிலி ... நற்கதி இல்லாதவன் யான், தலை எழுத்தும் நன்றாக இல்லாதவன் யான், செயலில் உணர்விலி ... நற்செய்கைகள் செய்யும் உணர்ச்சி இல்லாதவன் யான், சிவபத மடைவதும் ஒருநாளே ... இத்தகைய யான் சிவபதம் அடையக் கூடிய ஒரு நாளும் உண்டோ? (இதன் பிறகு திருமாலைப் பற்றிய விவரமான வர்ணனை வருகிறது) மகர சலநிதி முறையிட ... மகர மீன்கள் உள்ள கடல் (அம்பின் வேகம் தாங்காமல்) ஓலமிட, நிசிசரன் மகுடம் ஒருபதும் இருபது திரள்புய வரையும் ... அரக்கன் ராவணனின் பத்து கிரீடங்களும் இருபது திண்ணிய புயமலைகளும் அறவொரு கணைதெரி புயல் ... அற்றுப் போய் கீழே விழுமாறு ஒரு பாணத்தைத் தெரிந்து செலுத்திய மேகவண்ண ராமனும், குரு ந்ருபதூதன் ... குரு நாட்டைச் சேர்ந்த மன்னர்களாகிய பாண்டவர்க்குத் தூதனாகச் சென்ற கண்ணனும், மடுவில் மதகரி முதலென வுதவிய வரதன் ... தடாகத்தில் மதயானை கஜேந்திரன்ஆதிமூலமே என ஓலமிட வந்துதவிய வரதராஜனும், இருதிறல் மருதொடு பொருதவன் ... இரண்டு திண்மையான மருத மரங்களைச் சாடி முறித்த கண்ணனும், மதலை குதலையின் மறைமொழி யிகழ் ... குழந்தை பிரகலாதனது குதலைச் சொற்களாக வந்த ஓம் நமோ நாராயணாய என்னும் வேதமொழியினை இகழ்ந்த இரணியனாகம் உகிரின் நுதிகொடு வகிரும் ஒரு அடல் அரி ... இரணியனது உடலை நகத்தின் நுனி கொண்டு பிளந்த ஒப்பற்ற வலிமை வாய்ந்த நரசிம்ம மூர்த்தியும் திகிரி தர மரகதகிரி ... சக்ராயுதத்தை ஏந்தியவனும், மரகதப் பச்சை மாமலைபோல் மேனியை உடையவனும், எரியுமிழ் உரக சுடிகையில் நடநவில் ... நெருப்பைக் கக்குகின்ற காளிங்கன் என்ற பாம்பின் தலையுச்சியில் நடனம் செய்த கண்ணனும் அரிதிரு மருகோனே ... ஆகிய விஷ்ணு மூர்த்தி திருமாலின் அழகிய மருமகனே, உருகும் அடியவர் இருவினை யிருள்பொரும் ... உள்ளம் உருகும் அடியாரின் நல்வினை, தீவினை ஆகிய இருவினை இருளை விலக்க உதய தினகர ... உதயமாகும் ஞான சூரியனே, இமகரன் வலம்வரும் உலக முழுது ... பனிக்கிரணங்கள் உடைய சந்திரன் சுற்றி வருகின்ற இந்த உலகத்தை ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே. ... ஒரே நொடியில் சுற்றிவந்த பெருமாளே.