இம கிரி மத்தில் புயங்க வெம் பணி
கயிறு அது சுற்றித் தரங்க(ம்) ஒள் கடல் இமையவர் பற்றிக் கடைந்த அன்று எழு நஞ்சு போலே
இரு குழை தத்திப் புரண்டு வந்து ஒரு குமிழையும் எற்றி
கரும்பு எனும் சிலை ரதி பதி வெற்றிச் சரங்கள் அஞ்சையும் விஞ்சி நீடு
சமரம் மிகுத்துப் பரந்த செம் கயல் விழியினில்
மெத்தத் ததும்பி விஞ்சிய தமனிய(ம்) வெற்புக்கு இசைந்த வம்பு அணி கொங்கை மீதே
தனி மனம் வைத்துத் தளர்ந்து வண்டு அமர் குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ
சத தளம் வைத்துச் சிவந்த நின் கழல் தந்திடாயோ
அமரர் துதிக்கப் புரந்தரன் தொழ எழுபது வர்க்கக் குரங்கு கொண்டு
எறி அலையை அடைத்துக் கடந்து சென்று எதிர் முந்து போரில்
அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்றப் புயங்கள் சிந்திட
அழகிய கொத்துச் சிரங்கள் ஒன்பதும் ஒன்று(ம்) மாளக் கமல மலர்க்கைச் சரம் துரந்தவர் மருமக
மட்டு உக்க கொன்றை அம் தொடை கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும்
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர
குறத் தத்தைப் பின் திரிந்து அவள் கடின தனத்தில் கலந்து இலங்கிய தம்பிரானே.
இமயமலையாகிய (மந்தரம்) என்னும் மத்தில் வாசுகி என்னும் கொடிய பாம்பை கயிறாகச் சுற்றி, அலை வீசும் ஒளி பொருந்திய கடலை தேவர்கள் பற்றிக் கடைந்த நாளில் எழுந்த ஆலகால விஷம் போல், இரண்டு காதின் குண்டலங்கள் மீது பாய்ந்து புரண்டு வந்தும், ஒரு குமிழம்பூப் போன்ற மூக்கைத் தாக்கியும், கரும்பாகிய வில்லை ஏந்திய, ரதியின் கணவனான மன்மதனின் வெற்றிப் பாணங்கள் ஐந்தின் வேகத்தையும் செயலாற்றும் திறமையையும் வென்று மேம்படுவதாய், போர் நிறைந்ததாய், அகன்றுள்ளதான செவ்விய கயல் மீன் போன்ற கண்களிலும், மிகவும் பூரித்து மேலெழுந்துள்ள, பொன்மலைக்குச் சமானமானதும், அதற்குத் தகுந்த கச்சு அணிந்ததுமான மார்பகங்களின் மேலும், தனியாக மனத்தை வைத்துச் சோர்வுற்று, வண்டுகள் விரும்பிச் சேரும் கூந்தலை உடைய மாதர்கள் தரும் பொய்யான இன்பத்துக்குக் கலக்கம் அடைதலை ஒழித்து, நூறு இதழ்கள் உள்ள தாமரை மலரை வைத்து நான் பூஜிக்க உனது சிவந்த திருவடிகளை அடியேனுக்குத் தந்தருள மாட்டாயோ? தேவர்கள் துதி செய்ய, இந்திரன் தொழுது வணங்க, எழுபது வகையான குரங்குப் படையைக் கொண்டு, அலை வீசும் கடலை அணையிட்டு, அதைத் தாண்டி இலங்கைக்குச் சென்று, எதிரில் முனைந்து வந்த போரில் அரக்கர்களின் அரசன் ராவணனுடைய மிக்க வல்லமை கொண்ட இருபது தோள்களும் அற்று விழவும், அழகாய் கொத்தாக இருந்த பத்துத் தலைகளும் மாண்டு விழவும், தாமரை மலர் போன்ற திருக்கரத்தால் அம்பைச் செலுத்திய ராமனின் மருகனே, தேன் சொட்டும் அழகிய கொன்றை மாலை, மாசு இல்லாத நிகரற்ற தும்பை மாலை, சந்திரன், கங்கை இவைகளைச் சடையில் சூடியுள்ள கடவுளாகிய சிவபெருமானது இடது பாகத்தில் உறையும் பார்வதி தேவி பெற்றெடுத்த குமரனே, குறக் கிளியாகிய வள்ளியின் பின்னே நாடித்திரிந்து, அவளுடைய வன்மை கொண்ட மார்பகங்களில் அணைந்து விளங்கிய பெருமாளே.
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி ... இமயமலையாகிய (மந்தரம்) என்னும் மத்தில் வாசுகி என்னும் கொடிய பாம்பை கயிறு அது சுற்றித் தரங்க(ம்) ஒள் கடல் இமையவர் பற்றிக் கடைந்த அன்று எழு நஞ்சு போலே ... கயிறாகச் சுற்றி, அலை வீசும் ஒளி பொருந்திய கடலை தேவர்கள் பற்றிக் கடைந்த நாளில் எழுந்த ஆலகால விஷம் போல், இரு குழை தத்திப் புரண்டு வந்து ஒரு குமிழையும் எற்றி ... இரண்டு காதின் குண்டலங்கள் மீது பாய்ந்து புரண்டு வந்தும், ஒரு குமிழம்பூப் போன்ற மூக்கைத் தாக்கியும், கரும்பு எனும் சிலை ரதி பதி வெற்றிச் சரங்கள் அஞ்சையும் விஞ்சி நீடு ... கரும்பாகிய வில்லை ஏந்திய, ரதியின் கணவனான மன்மதனின் வெற்றிப் பாணங்கள் ஐந்தின் வேகத்தையும் செயலாற்றும் திறமையையும் வென்று மேம்படுவதாய், சமரம் மிகுத்துப் பரந்த செம் கயல் விழியினில் ... போர் நிறைந்ததாய், அகன்றுள்ளதான செவ்விய கயல் மீன் போன்ற கண்களிலும், மெத்தத் ததும்பி விஞ்சிய தமனிய(ம்) வெற்புக்கு இசைந்த வம்பு அணி கொங்கை மீதே ... மிகவும் பூரித்து மேலெழுந்துள்ள, பொன்மலைக்குச் சமானமானதும், அதற்குத் தகுந்த கச்சு அணிந்ததுமான மார்பகங்களின் மேலும், தனி மனம் வைத்துத் தளர்ந்து வண்டு அமர் குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ ... தனியாக மனத்தை வைத்துச் சோர்வுற்று, வண்டுகள் விரும்பிச் சேரும் கூந்தலை உடைய மாதர்கள் தரும் பொய்யான இன்பத்துக்குக் கலக்கம் அடைதலை ஒழித்து, சத தளம் வைத்துச் சிவந்த நின் கழல் தந்திடாயோ ... நூறு இதழ்கள் உள்ள தாமரை மலரை வைத்து நான் பூஜிக்க உனது சிவந்த திருவடிகளை அடியேனுக்குத் தந்தருள மாட்டாயோ? அமரர் துதிக்கப் புரந்தரன் தொழ எழுபது வர்க்கக் குரங்கு கொண்டு ... தேவர்கள் துதி செய்ய, இந்திரன் தொழுது வணங்க, எழுபது வகையான குரங்குப் படையைக் கொண்டு, எறி அலையை அடைத்துக் கடந்து சென்று எதிர் முந்து போரில் ... அலை வீசும் கடலை அணையிட்டு, அதைத் தாண்டி இலங்கைக்குச் சென்று, எதிரில் முனைந்து வந்த போரில் அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்றப் புயங்கள் சிந்திட ... அரக்கர்களின் அரசன் ராவணனுடைய மிக்க வல்லமை கொண்ட இருபது தோள்களும் அற்று விழவும், அழகிய கொத்துச் சிரங்கள் ஒன்பதும் ஒன்று(ம்) மாளக் கமல மலர்க்கைச் சரம் துரந்தவர் மருமக ... அழகாய் கொத்தாக இருந்த பத்துத் தலைகளும் மாண்டு விழவும், தாமரை மலர் போன்ற திருக்கரத்தால் அம்பைச் செலுத்திய ராமனின் மருகனே, மட்டு உக்க கொன்றை அம் தொடை கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும் ... தேன் சொட்டும் அழகிய கொன்றை மாலை, மாசு இல்லாத நிகரற்ற தும்பை மாலை, சந்திரன், கங்கை இவைகளைச் சடையில் சூடியுள்ள கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர ... கடவுளாகிய சிவபெருமானது இடது பாகத்தில் உறையும் பார்வதி தேவி பெற்றெடுத்த குமரனே, குறத் தத்தைப் பின் திரிந்து அவள் கடின தனத்தில் கலந்து இலங்கிய தம்பிரானே. ... குறக் கிளியாகிய வள்ளியின் பின்னே நாடித்திரிந்து, அவளுடைய வன்மை கொண்ட மார்பகங்களில் அணைந்து விளங்கிய பெருமாளே.