வினைத் திரளுக்கு இருப்பு என வித்தகப் படவில்
சல(ம்) பிலம் இட்டு இசைக்கும் மிடல் குடிற்கு இடை புக்கு இடும் மாய
விளைப் பகுதிப் பயப்பு அளவுற்று அமைத்தது எனக் கருத்து அமைவில்
சகப் பொருள் மெய்க்கு உறப் பருகக் கருதாதே
எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எத்தலத்து உளர் எச்சமர்த்தர் என
புறத்து உரை இட்டு இகழ்ச்சியின் உற்று இளையாது
உன் எழில் கமலத்து இணைக் கழலைத் தமிழ்ச் சுவை இட்டு இறப்பு அற எய்த்திட
கருணைத் திறத்து என வைத்து அருள்வாயே
சினத்தை மிகுத்து அனைத்து உலகத் திசைக் கருதிக் கடல் பரவித் திடத்தொடு அதிர்த்து எதிர்த்திடல் உற்றிடு சூரன்
சிரத்துடன் மற் புயத்து அகலத்தினில் குருதிக் கடல் பெருகச் சிறப்பு மிகத் திறத்தொடு உகைத்திடும் வேலா
கனத்த மருப்பு இனக் கரி நல் கலைத் திரள் கற்புடைக் கிளி உள் கருத்து உருக
தினைக்குள் இசைத்து இசை பாடி கனிக் குதலைச் சிறுக் குயிலை
கதித்த மறக் குலப் பதியில் களிப்பொடு கைப் பிடித்த மணப் பெருமாளே.
வினைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாகும் அதிசயமான ஓடத்தில் நீர் கொண்ட குகை வைத்துக் கட்டப்பட்டுள்ள, வலிமை மிக்க உடலினுள் புகுந்துள்ள இந்த மாயம், விளையும் (வாழ் நாள்) பாகம் பயப்படும் கணக்காக அமைக்கப்பட்டதென்ற கருத்தின் நினைவில் உலகத்தில் உள்ள பொருள்களின் மெய்ம்மைக்கு ஏற்ப அனுபவிப்பதற்கு எண்ணாமல், எனக்கு எதிராக நிகரென்று சொல்ல வல்லவர் எந்தப் பூமியில் இருக்கின்றார்கள், எந்தச் சாமர்த்தியசாலிகள் உள்ளார்கள் என்று வெளியே கர்வமாகப் பேசி, பிறரை இகழ்ச்சி கூறியே நான் இளைத்துப் போகாமல், உனது அழகிய தாமரை போன்ற இரண்டு திருவடிகளை தமிழ்ச் சுவை பொருந்தும்படி வாழ்த்தி, நான் சாகாத நிலையைப் பெற்றிட, உனது கருணை வழியில் என்னைச் சேர்ப்பித்து அருள் புரிவாயாக. கோபம் மிகுந்து, உலகின் எல்லாத் திசைகளையும் வெல்லக் கருதி, தன் அதிகாரத்தைக் கடல் அளவும் பரப்பி, வலிமையுடன் யாவரையும் நடுங்கச் செய்து எதிர்த்தவனாகிய சூரனுடைய தலையினின்றும், மல் யுத்தத்துக்கு ஏற்ற அகலமான மார்பிலிருந்தும், ரத்தம் கடல் போல் பெருகி ஓடும்படியாக, புகழ் மிகுந்த சாமர்த்தியத்துடன் வேலைச் செலுத்திய தலைவனே, கனமான தந்தங்களை உடைய யானைக் கூட்டமும், அழகிய மான் கூட்டமும், சொல்லுவதைக் கற்க வல்ல கிளிக் கூட்டமும் தத்தம் உள்ளம் உருக, தினைப்புனத்தில் பொருந்திய முறையில் பண் அமைத்து ராகங்களைப் பாடியவளாகிய, பழச் சுவையையும் மழலை மொழியையும் கொண்ட சிறிய குயில் போன்ற வள்ளியை, அங்கு இருந்த வேடர் கூட்டத்தினர்களின் ஊரில் மகிழ்ச்சியுடன் கரங்களைப் பற்றிய மணவாளப் பெருமாளே.
வினைத் திரளுக்கு இருப்பு என வித்தகப் படவில் ... வினைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாகும் அதிசயமான ஓடத்தில் சல(ம்) பிலம் இட்டு இசைக்கும் மிடல் குடிற்கு இடை புக்கு இடும் மாய ... நீர் கொண்ட குகை வைத்துக் கட்டப்பட்டுள்ள, வலிமை மிக்க உடலினுள் புகுந்துள்ள இந்த மாயம், விளைப் பகுதிப் பயப்பு அளவுற்று அமைத்தது எனக் கருத்து அமைவில் ... விளையும் (வாழ் நாள்) பாகம் பயப்படும் கணக்காக அமைக்கப்பட்டதென்ற கருத்தின் நினைவில் சகப் பொருள் மெய்க்கு உறப் பருகக் கருதாதே ... உலகத்தில் உள்ள பொருள்களின் மெய்ம்மைக்கு ஏற்ப அனுபவிப்பதற்கு எண்ணாமல், எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எத்தலத்து உளர் எச்சமர்த்தர் என ... எனக்கு எதிராக நிகரென்று சொல்ல வல்லவர் எந்தப் பூமியில் இருக்கின்றார்கள், எந்தச் சாமர்த்தியசாலிகள் உள்ளார்கள் என்று புறத்து உரை இட்டு இகழ்ச்சியின் உற்று இளையாது ... வெளியே கர்வமாகப் பேசி, பிறரை இகழ்ச்சி கூறியே நான் இளைத்துப் போகாமல், உன் எழில் கமலத்து இணைக் கழலைத் தமிழ்ச் சுவை இட்டு இறப்பு அற எய்த்திட ... உனது அழகிய தாமரை போன்ற இரண்டு திருவடிகளை தமிழ்ச் சுவை பொருந்தும்படி வாழ்த்தி, நான் சாகாத நிலையைப் பெற்றிட, கருணைத் திறத்து என வைத்து அருள்வாயே ... உனது கருணை வழியில் என்னைச் சேர்ப்பித்து அருள் புரிவாயாக. சினத்தை மிகுத்து அனைத்து உலகத் திசைக் கருதிக் கடல் பரவித் திடத்தொடு அதிர்த்து எதிர்த்திடல் உற்றிடு சூரன் ... கோபம் மிகுந்து, உலகின் எல்லாத் திசைகளையும் வெல்லக் கருதி, தன் அதிகாரத்தைக் கடல் அளவும் பரப்பி, வலிமையுடன் யாவரையும் நடுங்கச் செய்து எதிர்த்தவனாகிய சூரனுடைய சிரத்துடன் மற் புயத்து அகலத்தினில் குருதிக் கடல் பெருகச் சிறப்பு மிகத் திறத்தொடு உகைத்திடும் வேலா ... தலையினின்றும், மல் யுத்தத்துக்கு ஏற்ற அகலமான மார்பிலிருந்தும், ரத்தம் கடல் போல் பெருகி ஓடும்படியாக, புகழ் மிகுந்த சாமர்த்தியத்துடன் வேலைச் செலுத்திய தலைவனே, கனத்த மருப்பு இனக் கரி நல் கலைத் திரள் கற்புடைக் கிளி உள் கருத்து உருக ... கனமான தந்தங்களை உடைய யானைக் கூட்டமும், அழகிய மான் கூட்டமும், சொல்லுவதைக் கற்க வல்ல கிளிக் கூட்டமும் தத்தம் உள்ளம் உருக, தினைக்குள் இசைத்து இசை பாடி கனிக் குதலைச் சிறுக் குயிலை ... தினைப்புனத்தில் பொருந்திய முறையில் பண் அமைத்து ராகங்களைப் பாடியவளாகிய, பழச் சுவையையும் மழலை மொழியையும் கொண்ட சிறிய குயில் போன்ற வள்ளியை, கதித்த மறக் குலப் பதியில் களிப்பொடு கைப் பிடித்த மணப் பெருமாளே. ... அங்கு இருந்த வேடர் கூட்டத்தினர்களின் ஊரில் மகிழ்ச்சியுடன் கரங்களைப் பற்றிய மணவாளப் பெருமாளே.