விட்ட புழுகு பனி நீர் கத்தூரி மொய்த்த பரிமள படீரச் சேறு மிக்க முலையை விலை கூறி
காசுக்கு அளவே தான் மெத்த விரியு(ம்) மலர் சேர் கற்பூர மெத்தை மிசை கலவி ஆசைப்பாடு விற்கு மகளிர் சுருள் ஓலைக் கோலக் குழையோடே முட்டி
இலகு குமிழ் தாவிக் காமன் விட்ட பகழி தனை ஓடிச் சாடி மொய்க்கும் அளி அதனை வேலைச் சேலைக் கயல் மீனை முக்கி யமனை அட மீறிச் சீறும்
மைக் கண் விழி வலையிலே பட்டு ஓடி முட்ட வினையன் மருள் ஆகிப் போகக் கடவேனோ
செட்டி எனும் ஒர் திரு நாமக்கார வெற்றி அயில் தொடு ப்ரதாபக்கார
திக்கை உலகை வலமாகப் போகிக் கணம் மீளும் சித்ர குல கலப வாசிக்கார தத்து மகர சல கோபக்கார
செச்சை புனையும் மணவாளக் கோலத் திருமார்பா துட்ட நிருதர் பதி சூறைக்கார செப்பும் அமரர் பதி காவற்கார
துப்பு முக பட கபோல தான களிறு ஊரும் சொர்க்க கன தளம் விநோதக்கார
முத்தி விதரண உதாரக்கார சுத்த மறவர் மகள் வேளைக்கார பெருமாளே.
விட்டுக் கலந்த புனுகு சட்டம், பன்னீர், கஸ்தூரி இவைகள் சேர்ந்த நறு மணம் உள்ள சந்தனச் சேறு நிரம்ப அப்பியுள்ள மார்பகத்தை விலை பேசி விற்று, கிடைத்த பொருளுக்குத் தக்கவாறு, நன்றாக விரிக்கப்பட்ட மலர் தூவினதும், கற்பூர மணம் கொண்டதுமான மெத்தைப் படுக்கையின் மீது புணர்ச்சி ஆசை விருப்பத்தை விற்கின்ற பொது மகளிர் (அணிந்துள்ள) சுருண்ட காதோலையையும் அழகிய குண்டலங்களையும் தாக்கி, விளங்கும் குமிழம் பூ போன்ற மூக்கைத் தாண்டி மன்மதன் எய்த மலர்ப் பாணங்களை ஓடும்படி மோதி, நெருங்கி மொய்க்கும் வண்டையும், வேலாயுதத்தையும், சேல் மீனையும், கயல் மீனையும் (தனக்கு இணையாகாமையால்) கீழ்ப்படச் செய்து, யமனும் வருந்தும்படி (கொல்லும் திறத்தில்) மேம்பட்டுச் சீறி விளங்குவதும், மை பூசிய கண் பார்வை என்னும் வலையில் சிக்கி அந்தப் புன்னெறியில் ஓடி முட்டிக் கொள்ளும் தீவினைகளுக்கு ஈடான நான் மயக்க அறிவு கொண்டவனாய் அழியக் கடவேனோ? செட்டி என்கிற அழகிய பெயரைக் கொண்டவனே, வெற்றி வேலைச் செலுத்தும் புகழைக் கொண்டவனே, (எட்டுத்) திசையளவும் உலகத்தை வலம் வந்து ஒரு கணப் பொழுதில் மீண்டு வந்த, அழகிய கற்றையாகிய தோகை நிறைந்த, குதிரையாகிய மயிலை உடையவனே, அலை புரளுவதும் மகர மீன்களைக் கொண்டதுமான கடலைக் கோபித்தவனே, வெட்சி மாலையை அணிந்துள்ள மணவாளக் கோலத்தனாகிய திரு மார்பனே, துஷ்டனாகிய அசுரர்கள் தலைவனான சூரனைச் சூறை ஆடியவனே, (உன்னைப்) புகழ்ந்து நின்ற தேவேந்திரனுக்கு காவற்காரனாய் உதவியவனே, பொலிவு உள்ள முகத்தில் மேலணியும், அலங்காரத் துணியைக் கொண்டதும், கன்ன மதத்தைக் கொண்டதுமான (ஐராவதம்) என்னும் யானையின் மீது உலா வரும் இந்திரனுடைய விண்ணுலகில் உள்ள பெருத்த சேனைகள் வியக்கும் தேவ சேனாதிபதியே, முக்திப் பேற்றை அளிக்கும் கொடைத் திறம் கொண்டவனே, பரிசுத்தமான வேடர்களின் மகளாகிய வள்ளியின் காவற் பணியை தக்க வேளையில் பூண்ட பெருமாளே.
விட்ட புழுகு பனி நீர் கத்தூரி மொய்த்த பரிமள படீரச் சேறு மிக்க முலையை விலை கூறி ... விட்டுக் கலந்த புனுகு சட்டம், பன்னீர், கஸ்தூரி இவைகள் சேர்ந்த நறு மணம் உள்ள சந்தனச் சேறு நிரம்ப அப்பியுள்ள மார்பகத்தை விலை பேசி விற்று, காசுக்கு அளவே தான் மெத்த விரியு(ம்) மலர் சேர் கற்பூர மெத்தை மிசை கலவி ஆசைப்பாடு விற்கு மகளிர் சுருள் ஓலைக் கோலக் குழையோடே முட்டி ... கிடைத்த பொருளுக்குத் தக்கவாறு, நன்றாக விரிக்கப்பட்ட மலர் தூவினதும், கற்பூர மணம் கொண்டதுமான மெத்தைப் படுக்கையின் மீது புணர்ச்சி ஆசை விருப்பத்தை விற்கின்ற பொது மகளிர் (அணிந்துள்ள) சுருண்ட காதோலையையும் அழகிய குண்டலங்களையும் தாக்கி, இலகு குமிழ் தாவிக் காமன் விட்ட பகழி தனை ஓடிச் சாடி மொய்க்கும் அளி அதனை வேலைச் சேலைக் கயல் மீனை முக்கி யமனை அட மீறிச் சீறும் ... விளங்கும் குமிழம் பூ போன்ற மூக்கைத் தாண்டி மன்மதன் எய்த மலர்ப் பாணங்களை ஓடும்படி மோதி, நெருங்கி மொய்க்கும் வண்டையும், வேலாயுதத்தையும், சேல் மீனையும், கயல் மீனையும் (தனக்கு இணையாகாமையால்) கீழ்ப்படச் செய்து, யமனும் வருந்தும்படி (கொல்லும் திறத்தில்) மேம்பட்டுச் சீறி விளங்குவதும், மைக் கண் விழி வலையிலே பட்டு ஓடி முட்ட வினையன் மருள் ஆகிப் போகக் கடவேனோ ... மை பூசிய கண் பார்வை என்னும் வலையில் சிக்கி அந்தப் புன்னெறியில் ஓடி முட்டிக் கொள்ளும் தீவினைகளுக்கு ஈடான நான் மயக்க அறிவு கொண்டவனாய் அழியக் கடவேனோ? செட்டி எனும் ஒர் திரு நாமக்கார வெற்றி அயில் தொடு ப்ரதாபக்கார ... செட்டி என்கிற அழகிய பெயரைக் கொண்டவனே, வெற்றி வேலைச் செலுத்தும் புகழைக் கொண்டவனே, திக்கை உலகை வலமாகப் போகிக் கணம் மீளும் சித்ர குல கலப வாசிக்கார தத்து மகர சல கோபக்கார ... (எட்டுத்) திசையளவும் உலகத்தை வலம் வந்து ஒரு கணப் பொழுதில் மீண்டு வந்த, அழகிய கற்றையாகிய தோகை நிறைந்த, குதிரையாகிய மயிலை உடையவனே, அலை புரளுவதும் மகர மீன்களைக் கொண்டதுமான கடலைக் கோபித்தவனே, செச்சை புனையும் மணவாளக் கோலத் திருமார்பா துட்ட நிருதர் பதி சூறைக்கார செப்பும் அமரர் பதி காவற்கார ... வெட்சி மாலையை அணிந்துள்ள மணவாளக் கோலத்தனாகிய திரு மார்பனே, துஷ்டனாகிய அசுரர்கள் தலைவனான சூரனைச் சூறை ஆடியவனே, (உன்னைப்) புகழ்ந்து நின்ற தேவேந்திரனுக்கு காவற்காரனாய் உதவியவனே, துப்பு முக பட கபோல தான களிறு ஊரும் சொர்க்க கன தளம் விநோதக்கார ... பொலிவு உள்ள முகத்தில் மேலணியும், அலங்காரத் துணியைக் கொண்டதும், கன்ன மதத்தைக் கொண்டதுமான (ஐராவதம்) என்னும் யானையின் மீது உலா வரும் இந்திரனுடைய விண்ணுலகில் உள்ள பெருத்த சேனைகள் வியக்கும் தேவ சேனாதிபதியே, முத்தி விதரண உதாரக்கார சுத்த மறவர் மகள் வேளைக்கார பெருமாளே. ... முக்திப் பேற்றை அளிக்கும் கொடைத் திறம் கொண்டவனே, பரிசுத்தமான வேடர்களின் மகளாகிய வள்ளியின் காவற் பணியை தக்க வேளையில் பூண்ட பெருமாளே.