தோடு பொரு(ம்) மைக் கண் ஆட
வடிவுற்றது ஓர் தனம் அசைத்து இளைஞோர் தம் தோள் வலி மனத்து வாள் வலி உழக்கு தோகையர் மயக்கில் உழலாதே
பாடல் இசை மிக்க ஆடல் கொ(ண்)டு பத்தியோடு நினை பத்தர் பெரு வாழ்வே
பாவ வினை அற்று நாம(ம்) நினை புத்தி பாரில் அருள்கைக்கு வர வேணும்
ஆடல் அழகு ஒக்க ஆடும் மயில் எற்றி ஆண்மையுடன் நிற்கு(ம்) முருகோனே
ஆதி அரனுக்கு வேத மொழி முற்றிய ஆர்வம் விளைவித்த அறிவோனே
வேடை மயல் உற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே.
காதில் அணியும் தோடுகளைத் தாக்கும், மை பூசிய, கண்கள் அசைய, அழகுள்ள, ஒப்பற்ற மார்பகங்களை அசைத்து இளைஞர்களுடைய தோள் வலிமையையும் மனத்தின் ஒளி வாய்ந்த வலிமையையும் கலக்குகின்ற மயில் போன்ற மாதர்களின் காம மயக்கத்தில் நான் அலைவுறாமல், பாடல், இசை, மிகுந்த ஆடல் இவைகளைக் கொண்டு பக்தியுடன் உன்னை நினைக்கின்ற பக்தர்களின் பெரிய செல்வமே, என் பாவ வினைகள் தொலைந்து போய், உனது திரு நாமங்களையே நினைக்கும்படியான புத்தியை இந்தப் பூமியில் எனக்குத் தந்தருள வரவேணும். ஆடலின் அழகான தாளத்துக்கு ஏற்ப நடனம் செய்யும் மயிலை வேகமாகச் செலுத்தி வீரத்துடன் நிற்கும் முருகனே, ஆதி மூர்த்தியாகிய சிவ பெருமானுக்கு வேதங்களை முழுவதுமாய் உபதேசித்து, மகிழ்ச்சியை ஊட்டிய அறிஞனே, காம நோய் மோகம் கொண்டு, வேடர்கள் பெண்ணாகிய வள்ளிக்கு காவல் வேலையாளாக நின்ற வெற்றி வீரனே, முன்பு அசுரர்கள் இட்ட தேவர்களின் சிறையை வெட்டி, அவர்கள் மீளும்படி விடுவித்த பெருமாளே.
தோடு பொரு(ம்) மைக் கண் ஆட ... காதில் அணியும் தோடுகளைத் தாக்கும், மை பூசிய, கண்கள் அசைய, வடிவுற்றது ஓர் தனம் அசைத்து இளைஞோர் தம் தோள் வலி மனத்து வாள் வலி உழக்கு தோகையர் மயக்கில் உழலாதே ... அழகுள்ள, ஒப்பற்ற மார்பகங்களை அசைத்து இளைஞர்களுடைய தோள் வலிமையையும் மனத்தின் ஒளி வாய்ந்த வலிமையையும் கலக்குகின்ற மயில் போன்ற மாதர்களின் காம மயக்கத்தில் நான் அலைவுறாமல், பாடல் இசை மிக்க ஆடல் கொ(ண்)டு பத்தியோடு நினை பத்தர் பெரு வாழ்வே ... பாடல், இசை, மிகுந்த ஆடல் இவைகளைக் கொண்டு பக்தியுடன் உன்னை நினைக்கின்ற பக்தர்களின் பெரிய செல்வமே, பாவ வினை அற்று நாம(ம்) நினை புத்தி பாரில் அருள்கைக்கு வர வேணும் ... என் பாவ வினைகள் தொலைந்து போய், உனது திரு நாமங்களையே நினைக்கும்படியான புத்தியை இந்தப் பூமியில் எனக்குத் தந்தருள வரவேணும். ஆடல் அழகு ஒக்க ஆடும் மயில் எற்றி ஆண்மையுடன் நிற்கு(ம்) முருகோனே ... ஆடலின் அழகான தாளத்துக்கு ஏற்ப நடனம் செய்யும் மயிலை வேகமாகச் செலுத்தி வீரத்துடன் நிற்கும் முருகனே, ஆதி அரனுக்கு வேத மொழி முற்றிய ஆர்வம் விளைவித்த அறிவோனே ... ஆதி மூர்த்தியாகிய சிவ பெருமானுக்கு வேதங்களை முழுவதுமாய் உபதேசித்து, மகிழ்ச்சியை ஊட்டிய அறிஞனே, வேடை மயல் உற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா ... காம நோய் மோகம் கொண்டு, வேடர்கள் பெண்ணாகிய வள்ளிக்கு காவல் வேலையாளாக நின்ற வெற்றி வீரனே, மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே. ... முன்பு அசுரர்கள் இட்ட தேவர்களின் சிறையை வெட்டி, அவர்கள் மீளும்படி விடுவித்த பெருமாளே.