நரம்புகளாலும், தோலாலும், நீராலும் ஆகியுள்ள பலவித வாயில்களை (நவத் துவாரங்களை) உடைய குடிசையாகிய இந்த உடலினுள் அறிவு வாய்ந்தவானாக வாழ்கின்ற காலத்தில், உயிர் போதலுற்று இறந்து போகும் சமயம் நாயும் பேயும் என் உடலைச் சூழுதற்கான காலம் வருமுன்பாக, ஆத்திமாலைகள் நிறைந்த பன்னிரண்டு தோள்களை உடையவனே, உன்னைச் சார்ந்தவர்களுக்கு நல்ல பெரு வாழ்வே, சற்றும் தாமதியாமல் நாயனைய அடியேன் என் நாவைக்கொண்டு உன் திருவடிகளைப் பாடும் வலிமைத்திறலைத் தருவாயாக. ஏழுலகங்களையும் தன் ஒப்பற்ற முயற்சியால் காத்து ஆளுகின்ற திருமாலும், தூய்மையான பாடல்கள் உள்ள வேதத்தை ஓதும் பிரமனும், வெட்டவெளிப் பாழிலும், வானிலும், மண்ணிலும் பரவி நிற்கும் பாதத்தினை நாடமுடியாத சிறப்பினை உடையவரும், பார்வதி தேவியுடன் வாழ்பவரும், பெரிய ரிஷபத்தை வாகனமாக உடையவரும், பொன்னிறச் சடை உடையவருமான ஈசர் சிவபிரானுடைய குமாரனே, செவ்வேளே, அழகனே, தலைவனே, தெய்வமே, தேவர்களின் பெருமாளே.