அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய அரிய மோன மேகோயி ...... லெனமேவி அசைய வேக்ரி யாபீட மிசைபு காம காஞான அறிவி னாத ராமோத ...... மலர்தூவிச் சகல வேத னாதீத சகல வாச காதீத சகல மாக்ரி யாதீத ...... சிவரூப சகல சாத காதீத சகல வாச னாதீத தனுவை நாடி மாபூசை ...... புரிவேனோ விகட தார சூதான நிகள பாத போதூள விரக ராக போதார ...... சுரர்கால விபுத மாலி காநீல முகப டாக மாயூர விமல வ்யாப காசீல ...... கவிநோத ககன கூட பாடீர தவள சோபி தாளான கவன பூத ராரூட ...... சதகோடி களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய
மோனமே கோயில் என மேவி
அசையவே க்ரியா பீடம் மிசை புகா
மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி
சகல வேதன(ம்) அதீத சகல வாசக(ம்) அதீத
சகல மா க்ரிய அதீத சிவரூப
சகல சாதக அதீத சகல வாசன அதீத
தனுவை நாடி மா பூசை புரிவேனோ
விகட தார சூதான நிகள பாத போதூள
விரகர் ராக போதார் அசுரர் கால
விபுத மாலிகா நீல முக படாகம் மாயூர
விமல வ்யாபகா சீல அக விநோத
ககன கூடம் பாடீரம் தவள சோபித ஆளான
கவனம் பூதரம் ஆரூட
சத கோடி களப காம வீர்
வீசு கரம் முக ஆர வேல் வீர
கருணை மேருவே தேவர் பெருமாளே.
இவ்வளவு அகலம், இவ்வளவு நீளம் என்ற அளவைகளாலும், எவராலும் ஆராய்வதற்கு முடியாத மெளன நிலையே திருக்கோயிலாக அடைந்து இருந்து விளக்கம் தருவதற்காகவே, கிரியை மார்க்கத்தை அனுஷ்டித்து, அதனைப் பூஜிக்கத் தகுந்த பீடத்தின் மேல் ஏற்றி, சிறந்த மெய்யுணர்வான ஞானத்துடன், அன்பு, மகிழ்ச்சி எனப்படும் மலர்களைத் தூவி, எவ்வகையான அறிவுகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான சொற்களுக்கும் அப்பாற்பட்டதான, எவ்வகையான சிறந்த கிரியைகளுக்கும் மேம்பட்டதான, சிவ ரூபமான, எவ்விதமான அளவைகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான நறுமணத்துக்கும் மேம்பட்டதான புருவ நடுவில் உள்ள ஒரு குறியைக் குறித்து நின்று, சிறந்த பூஜையைச் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? மாறுபாடுள்ள, வஞ்சகம் நிறைந்த பந்தத்தில் வீழ்வதனை அழியும்படித் தூள் படுத்துபவனே, காம நோயுடன் கூடிய மோகத்தை அனுபவிப்பதிலேயே பொழுது போக்குபவர்களாகிய அசுரர்களுக்கு நமனாய் நின்று அவர்களை அழித்தவனே, தேவதாரு மலரின் மாலையை அணிந்தவனே, நீல நிறப் போர்வை போன்ற உடலைக் கொண்டதான மயில் வாகனனே, பரிசுத்தமானவனே, எங்கும் நிறைந்திருப்பவனே, நற்குண உள்ளத்தவனே, அற்புத மூர்த்தியே, விண்ணுலகில் உள்ள, சந்தனம் அணிந்துள்ள, வெண்ணிற அழகை உடையதாய், (இந்திரனின்) ஏவலைப் புரிவதாய், வேகத்துடன் செல்லக் கூடிய, மலை போன்ற (ஐராவதம் என்ற) யானையின் மேல் எழுந்தருளி, வஜ்ராயுதத்தை ஏந்தும் இந்திரன் மனம் கலந்து விரும்பும் வீரனே, கதிரொளியை வீசுகின்ற திருமுகங்களை உடையவனே, கடப்ப மாலை அணிந்தவனே, வேல் வீரனே, மேரு மலையை ஒத்த கருணை உடையவனே, தேவர்களின் பெருமாளே.
அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய ... இவ்வளவு அகலம், இவ்வளவு நீளம் என்ற அளவைகளாலும், எவராலும் ஆராய்வதற்கு முடியாத மோனமே கோயில் என மேவி ... மெளன நிலையே திருக்கோயிலாக அடைந்து இருந்து அசையவே க்ரியா பீடம் மிசை புகா ... விளக்கம் தருவதற்காகவே, கிரியை மார்க்கத்தை அனுஷ்டித்து, அதனைப் பூஜிக்கத் தகுந்த பீடத்தின் மேல் ஏற்றி, மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி ... சிறந்த மெய்யுணர்வான ஞானத்துடன், அன்பு, மகிழ்ச்சி எனப்படும் மலர்களைத் தூவி, சகல வேதன(ம்) அதீத சகல வாசக(ம்) அதீத ... எவ்வகையான அறிவுகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான சொற்களுக்கும் அப்பாற்பட்டதான, சகல மா க்ரிய அதீத சிவரூப ... எவ்வகையான சிறந்த கிரியைகளுக்கும் மேம்பட்டதான, சிவ ரூபமான, சகல சாதக அதீத சகல வாசன அதீத ... எவ்விதமான அளவைகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான நறுமணத்துக்கும் மேம்பட்டதான தனுவை நாடி மா பூசை புரிவேனோ ... புருவ நடுவில் உள்ள ஒரு குறியைக் குறித்து நின்று, சிறந்த பூஜையைச் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? விகட தார சூதான நிகள பாத போதூள ... மாறுபாடுள்ள, வஞ்சகம் நிறைந்த பந்தத்தில் வீழ்வதனை அழியும்படித் தூள் படுத்துபவனே, விரகர் ராக போதார் அசுரர் கால ... காம நோயுடன் கூடிய மோகத்தை அனுபவிப்பதிலேயே பொழுது போக்குபவர்களாகிய அசுரர்களுக்கு நமனாய் நின்று அவர்களை அழித்தவனே, விபுத மாலிகா நீல முக படாகம் மாயூர ... தேவதாரு மலரின் மாலையை அணிந்தவனே, நீல நிறப் போர்வை போன்ற உடலைக் கொண்டதான மயில் வாகனனே, விமல வ்யாபகா சீல அக விநோத ... பரிசுத்தமானவனே, எங்கும் நிறைந்திருப்பவனே, நற்குண உள்ளத்தவனே, அற்புத மூர்த்தியே, ககன கூடம் பாடீரம் தவள சோபித ஆளான ... விண்ணுலகில் உள்ள, சந்தனம் அணிந்துள்ள, வெண்ணிற அழகை உடையதாய், (இந்திரனின்) ஏவலைப் புரிவதாய், கவனம் பூதரம் ஆரூட ... வேகத்துடன் செல்லக் கூடிய, மலை போன்ற (ஐராவதம் என்ற) யானையின் மேல் எழுந்தருளி, சத கோடி களப காம வீர் ... வஜ்ராயுதத்தை ஏந்தும் இந்திரன் மனம் கலந்து விரும்பும் வீரனே, வீசு கரம் முக ஆர வேல் வீர ... கதிரொளியை வீசுகின்ற திருமுகங்களை உடையவனே, கடப்ப மாலை அணிந்தவனே, வேல் வீரனே, கருணை மேருவே தேவர் பெருமாளே. ... மேரு மலையை ஒத்த கருணை உடையவனே, தேவர்களின் பெருமாளே.