குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலாப் பல என்பினாலும்
கொடிய நோய்க்கு இடம் எனவு(ம்) நாட்டிய குடிலில் ஏற்று உயிர் என்று கூறும்
வடிவு இலாப் புலம் அதனை நா(ட்)டிடு மறலி ஆள் பொர வந்திடா முன்
மதியும் மூத்து உனது அடிகள் ஏத்திட மறுவு இலாப் பொருள் தந்திடாதோ
கடிய காட்டகம் உறையும் வேட்டுவர் கருத ஒணா கணி வெங்கை ஆகி
கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால் புணர் கந்த வேளே
முடுகி மேல் பொரும் அசுரார் ஆர்ப்பு எழ முடிய வேல் கொடு வென்ற வீரா
முடிவு இலாத் திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் தம்பிரானே.
குடலையும், நீரையும், கொழுப்பையும், மலத்தையும் வைத்து, ஒரு குறைவும் இல்லாதனவுமான பல எலும்புகளாலும் பொல்லாத நோய்களுக்கு இருப்பிடம் என்னும்படி ஏற்படுத்தப்பட்ட குடிசையாகிய உடலில் ஏற்றப்பட்ட உயிர் என்று சொல்லப்படும் உருவம் இல்லாததான ஒரு நுண்மையான பொருளை நாடி வருகின்ற யமதூதர்கள் போரிட வருவதற்கு முன்பு, (என்) அறிவும் முதிர்ச்சி அடைந்து உனது திருவடிகளை நான் போற்றிப் பணிய, குற்றமில்லாத உண்மைப் பொருளை எனக்கு உதவி செய்யலாகாதோ? கொடிய காட்டிடையே வாசம் செய்யும் வேடர்களுக்கு (இந்த விதமாக வந்தது என்று) எண்ண முடியாதபடி, கணி என்று சொல்லப்படும் வேங்கை மரமாகி, மூங்கில் போன்ற தோள்களை உடைய குறக்குல மயிலாகிய வள்ளியை விரும்பி, சிறந்த களவியல் வழியாக அணைந்த கந்த வேளே, விரைவில் எதிர் வந்து மேல் விழுந்து சண்டை செய்யும் அசுரர்களின் பேரொலி எழ, அவர்கள் யாவரையும் வேல் கொண்டு வெற்றி கொண்ட வீரனே, முடிவே இல்லாத உன் விசுவ ரூபத்தை தரிசித்த பழங் கடவுளர்களாகிய அயன், அரி, பிரமன் என்னும் மூவர்க்கும் தம்பிரானே.
குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலாப் பல என்பினாலும் ... குடலையும், நீரையும், கொழுப்பையும், மலத்தையும் வைத்து, ஒரு குறைவும் இல்லாதனவுமான பல எலும்புகளாலும் கொடிய நோய்க்கு இடம் எனவு(ம்) நாட்டிய குடிலில் ஏற்று உயிர் என்று கூறும் ... பொல்லாத நோய்களுக்கு இருப்பிடம் என்னும்படி ஏற்படுத்தப்பட்ட குடிசையாகிய உடலில் ஏற்றப்பட்ட உயிர் என்று சொல்லப்படும் வடிவு இலாப் புலம் அதனை நா(ட்)டிடு மறலி ஆள் பொர வந்திடா முன் ... உருவம் இல்லாததான ஒரு நுண்மையான பொருளை நாடி வருகின்ற யமதூதர்கள் போரிட வருவதற்கு முன்பு, மதியும் மூத்து உனது அடிகள் ஏத்திட மறுவு இலாப் பொருள் தந்திடாதோ ... (என்) அறிவும் முதிர்ச்சி அடைந்து உனது திருவடிகளை நான் போற்றிப் பணிய, குற்றமில்லாத உண்மைப் பொருளை எனக்கு உதவி செய்யலாகாதோ? கடிய காட்டகம் உறையும் வேட்டுவர் கருத ஒணா கணி வெங்கை ஆகி ... கொடிய காட்டிடையே வாசம் செய்யும் வேடர்களுக்கு (இந்த விதமாக வந்தது என்று) எண்ண முடியாதபடி, கணி என்று சொல்லப்படும் வேங்கை மரமாகி, கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால் புணர் கந்த வேளே ... மூங்கில் போன்ற தோள்களை உடைய குறக்குல மயிலாகிய வள்ளியை விரும்பி, சிறந்த களவியல் வழியாக அணைந்த கந்த வேளே, முடுகி மேல் பொரும் அசுரார் ஆர்ப்பு எழ முடிய வேல் கொடு வென்ற வீரா ... விரைவில் எதிர் வந்து மேல் விழுந்து சண்டை செய்யும் அசுரர்களின் பேரொலி எழ, அவர்கள் யாவரையும் வேல் கொண்டு வெற்றி கொண்ட வீரனே, முடிவு இலாத் திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் தம்பிரானே. ... முடிவே இல்லாத உன் விசுவ ரூபத்தை தரிசித்த பழங் கடவுளர்களாகிய அயன், அரி, பிரமன் என்னும் மூவர்க்கும் தம்பிரானே.