பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன்
ப்ரபுத் தனங்கள் பண்பு எ(ண்)ணு(ம்) நாணும் பிழைக்க ஒன்றிலன்
சிலைக் கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம் தனை ஆரத் திருக் கை கொண்டு அணைந்திடச் செல்கின்ற
நின் திறத்தை அன்புடன் தெளியாதே சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன்
துடுக்குடனும் செருக்குடனும் பேசும் பயனற்றவனாகிய என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ
தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்ற நின்று அடியோடும் தடக் கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறித்த கண்டன்
எண் திசையோரும் சுருக்கம் இன்றி நின்ற அருக்கன் இந்திரன்
துணைச் செய்கின்ற நின் பத(ம்) மேவும் சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும்
துதிக்கும் உம்பர் தம் பெருமாளே.
நிரம்ப மனம் மகிழ்ச்சி உற்று உருகும் அன்பு இல்லாதவன் நான். பெருந்தன்மைக் குணங்கள், நற்குணங்கள், மதிக்கத் தக்க கூச்சம் முதலியவற்றுள், நான் உய்யும் வகைக்கு, ஒன்றும் இல்லாதவன். வேல் ஏந்திய கைகளுடன் திரியும் வேடர்களின் வள்ளிமலையில் தோன்றி வளர்ந்த வள்ளியின் மார்பினை மனம் நிறையத் திருக் கைகளைக் கொண்டு தழுவச் சென்ற உன்னுடைய மேன்மைக் குணத்தை அன்புடன் நான் தெளிந்து உணராமல், கோபக் குணமே நிரம்பி, எனது கோணலான புத்தி மாறி என்றைக்கு நற்புத்தியை நான் அடைவேனோ? செருக்குடன் அன்று போய், அருள் கண்ணோக்கம் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்த கயிலாய மலையை அடிவாரத்தில் நின்று அடியோடு தன் பெரிய கைகளால் பெயர்த்து எடுத்தவனாகிய ராவணனுடைய தலைகளைத் துண்டித்த வீரனாகிய திருமாலும், எட்டுத் திக்குகளில் உள்ளவர்களும், சுருக்கம் இல்லாமல் விரிந்த கிரணங்களை வீசும் சூரியனும், இந்திரனும், துணையாய் உதவுகின்ற உனது திருவடிகளை விரும்பி நிற்பவர்களான உன் அன்பில் முழுகியுள்ள அடியார்களும், மூன்று உலகத்தோரும், போற்றித் துதிக்கும் தேவர்களின் பெருமாளே.
பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன் ... நிரம்ப மனம் மகிழ்ச்சி உற்று உருகும் அன்பு இல்லாதவன் நான். ப்ரபுத் தனங்கள் பண்பு எ(ண்)ணு(ம்) நாணும் பிழைக்க ஒன்றிலன் ... பெருந்தன்மைக் குணங்கள், நற்குணங்கள், மதிக்கத் தக்க கூச்சம் முதலியவற்றுள், நான் உய்யும் வகைக்கு, ஒன்றும் இல்லாதவன். சிலைக் கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம் தனை ஆரத் திருக் கை கொண்டு அணைந்திடச் செல்கின்ற ... வேல் ஏந்திய கைகளுடன் திரியும் வேடர்களின் வள்ளிமலையில் தோன்றி வளர்ந்த வள்ளியின் மார்பினை மனம் நிறையத் திருக் கைகளைக் கொண்டு தழுவச் சென்ற நின் திறத்தை அன்புடன் தெளியாதே சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் ... உன்னுடைய மேன்மைக் குணத்தை அன்புடன் நான் தெளிந்து உணராமல், கோபக் குணமே நிரம்பி, துடுக்குடனும் செருக்குடனும் பேசும் பயனற்றவனாகிய என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ ... எனது கோணலான புத்தி மாறி என்றைக்கு நற்புத்தியை நான் அடைவேனோ? தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்ற நின்று அடியோடும் தடக் கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறித்த கண்டன் ... செருக்குடன் அன்று போய், அருள் கண்ணோக்கம் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்த கயிலாய மலையை அடிவாரத்தில் நின்று அடியோடு தன் பெரிய கைகளால் பெயர்த்து எடுத்தவனாகிய ராவணனுடைய தலைகளைத் துண்டித்த வீரனாகிய திருமாலும், எண் திசையோரும் சுருக்கம் இன்றி நின்ற அருக்கன் இந்திரன் ... எட்டுத் திக்குகளில் உள்ளவர்களும், சுருக்கம் இல்லாமல் விரிந்த கிரணங்களை வீசும் சூரியனும், இந்திரனும், துணைச் செய்கின்ற நின் பத(ம்) மேவும் சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் ... துணையாய் உதவுகின்ற உனது திருவடிகளை விரும்பி நிற்பவர்களான உன் அன்பில் முழுகியுள்ள அடியார்களும், மூன்று உலகத்தோரும், துதிக்கும் உம்பர் தம் பெருமாளே. ... போற்றித் துதிக்கும் தேவர்களின் பெருமாளே.