நான் வசிக்கும் வீடும், நான் கொஞ்சிப் பழகும் குழந்தைகளும், என்னைச் சுற்றி அமைந்த உறவினரும், என் மனதிற்கு உகந்த ஊரும், என் மனைவி முதலிய பெண்களும், எனது இளமையும், செல்வம் நிறைந்து விரிந்து பரந்த எனது நாடும், இந்நாட்டின் மலைகளும் நிலைத்திருக்கும் என்றெண்ணி நான் மகிழாமல் ஒளிதரும் விளக்குகளை ஏற்றி உன்னை வழிபட எனக்கு நீ அருள்வாயாக. குருந்த மரத்தில் ஏறியவனும் மேகவண்ணனுமான திருமாலின் மருமகனே, குரங்குகள் உலாவும் குன்றாகிய வள்ளிமலையில் வாசம் செய்யும் குறமகள் வள்ளியின் மணவாளனே, திருத்தமான முறையில் வேதத்தை இன்பமான தமிழ்மொழியில் தேவாரமாக உலகோர் அறியத் தந்தருளிய (சம்பந்தப்) புலவனே, செம்மை வாய்ந்த திருவடியும் அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமாளே.
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரும் உறுகேளும் ... நான் வசிக்கும் வீடும், நான் கொஞ்சிப் பழகும் குழந்தைகளும், என்னைச் சுற்றி அமைந்த உறவினரும், இசைந்த வூரும் பெண்டிரும் இளமையும் ... என் மனதிற்கு உகந்த ஊரும், என் மனைவி முதலிய பெண்களும், எனது இளமையும், வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நிலையென மகிழாதே ... செல்வம் நிறைந்து விரிந்து பரந்த எனது நாடும், இந்நாட்டின் மலைகளும் நிலைத்திருக்கும் என்றெண்ணி நான் மகிழாமல் விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே ... ஒளிதரும் விளக்குகளை ஏற்றி உன்னை வழிபட எனக்கு நீ அருள்வாயாக. குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே ... குருந்த மரத்தில் ஏறியவனும் மேகவண்ணனுமான திருமாலின் மருமகனே, குரங்குலாவுங் குன்றுறை குறமகள் மணவாளா ... குரங்குகள் உலாவும் குன்றாகிய வள்ளிமலையில் வாசம் செய்யும் குறமகள் வள்ளியின் மணவாளனே, திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே ... திருத்தமான முறையில் வேதத்தை இன்பமான தமிழ்மொழியில் தேவாரமாக உலகோர் அறியத் தந்தருளிய (சம்பந்தப்) புலவனே, சிவந்த காலுந் தண்டையும் அழகிய பெருமாளே. ... செம்மை வாய்ந்த திருவடியும் அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமாளே.