அளக நிரை குலைய விழி குவிய வளை கலகலென
அமுத மொழி பதறி எழ அணி ஆரம் அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள
மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் உளம் உருக வரு
கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம் வரும் உன் உபய நறு மலர் அடியை அருள்வாயே
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன்
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜய மகள் கொழுநன் மருக
அமர் முடுகி வரு நிருதேசர் தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடிவேலா
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ
சகல கலை முழுதும் வல பெருமாளே.
கூந்தலின் வரிசை கலைந்து போக, கண்கள் குவிய, வளைகள் கலகலவென்று ஒலிக்க, அமுதம் போன்ற மொழிகள் பதறுதலுடன் பெருக, அணிந்துள்ள முத்து மாலையானது அழகு ஒழுகுவதும், பூரிப்பதுமான மார்பின் மீது அசைய, இடுப்பு நெகிழ, மிகவும் காம இன்ப ரச நிலை பெருக, அதிக மோகத்துடன் மனம் உருகும்படிச் செய்கின்ற புணர்ச்சியைத் தருகின்ற விலைமாதர்களின் கொடியது என்று சொல்லத்தக்க சூழ்ச்சியில் என் புத்தி அழிந்து போகாமல், மயிலின் மீது ஏறி உலகம் முழுவதும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த உனது இரண்டு நறு மணம் வீசும் மலர்ப் பாதங்களை அருள்வாயாக. வளைந்ததாக உள்ள அலை கடல் வற்றிப் போகும்படி செலுத்திய அம்பைக் கொண்டவனும், அடியார்களுக்கு வரங்களைத் தருபவனுமான திருமால், இரண்டு மருத மரங்களைத் தகர்த்து (கண்ணனாக) அருள் பாலித்த அழகன், கோடுகளை உடைய (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் துயில்கின்ற வரதன், விஜயலக்ஷ்மியின் கணவனாகிய திருமாலின் மருகனே, போர்க்களத்தில் விரைந்து வந்து சண்டை செய்த அசுரத் தலைவனின் சேனைகள் சிதற, (கிரெளஞ்ச) மலை தூள்பட, அசுரர்பதியாகிய சூரனுடைய தலை சிதறி விழ, நெருப்பு பெருகி எழ, விரைவில் செலுத்திய கூரிய வேலனே, முத்து மாலையும் மணி மாலையும் விளங்கும் குறவர் குலத்து அழகிய மகளான வள்ளியின் கணவனே, எல்லாக் கலைகளிலும் முற்றும் வல்ல பெருமாளே.
அளக நிரை குலைய விழி குவிய வளை கலகலென ... கூந்தலின் வரிசை கலைந்து போக, கண்கள் குவிய, வளைகள் கலகலவென்று ஒலிக்க, அமுத மொழி பதறி எழ அணி ஆரம் அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள ... அமுதம் போன்ற மொழிகள் பதறுதலுடன் பெருக, அணிந்துள்ள முத்து மாலையானது அழகு ஒழுகுவதும், பூரிப்பதுமான மார்பின் மீது அசைய, இடுப்பு நெகிழ, மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் உளம் உருக வரு ... மிகவும் காம இன்ப ரச நிலை பெருக, அதிக மோகத்துடன் மனம் உருகும்படிச் செய்கின்ற கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே ... புணர்ச்சியைத் தருகின்ற விலைமாதர்களின் கொடியது என்று சொல்லத்தக்க சூழ்ச்சியில் என் புத்தி அழிந்து போகாமல், உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம் வரும் உன் உபய நறு மலர் அடியை அருள்வாயே ... மயிலின் மீது ஏறி உலகம் முழுவதும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த உனது இரண்டு நறு மணம் வீசும் மலர்ப் பாதங்களை அருள்வாயாக. வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் ... வளைந்ததாக உள்ள அலை கடல் வற்றிப் போகும்படி செலுத்திய அம்பைக் கொண்டவனும், அடியார்களுக்கு வரங்களைத் தருபவனுமான திருமால், இரண்டு மருத மரங்களைத் தகர்த்து (கண்ணனாக) அருள் பாலித்த அழகன், வரி அரவின் மிசை துயிலும் வரத ஜய மகள் கொழுநன் மருக ... கோடுகளை உடைய (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் துயில்கின்ற வரதன், விஜயலக்ஷ்மியின் கணவனாகிய திருமாலின் மருகனே, அமர் முடுகி வரு நிருதேசர் தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடிவேலா ... போர்க்களத்தில் விரைந்து வந்து சண்டை செய்த அசுரத் தலைவனின் சேனைகள் சிதற, (கிரெளஞ்ச) மலை தூள்பட, அசுரர்பதியாகிய சூரனுடைய தலை சிதறி விழ, நெருப்பு பெருகி எழ, விரைவில் செலுத்திய கூரிய வேலனே, தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ ... முத்து மாலையும் மணி மாலையும் விளங்கும் குறவர் குலத்து அழகிய மகளான வள்ளியின் கணவனே, சகல கலை முழுதும் வல பெருமாளே. ... எல்லாக் கலைகளிலும் முற்றும் வல்ல பெருமாளே.