குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம்
ஒரு கோடி குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது
கொடிய இரு வினை எனும் அளறு போக
உதறி விதறிய கரண(ம்) மரண(ம்) அற விரணம் அற
உருகி உரை பருகி அநுதின(ம்) ஞான உணர்வு விழி பெற
உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள் புரிவாயே
சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என
உரக பிலம் ஏழும் செக தலமு(ம்) நிகர் சிகரி பலவு(ம்) ந(ல்)ல கெச புயக திசையும் உடன் உருக வரும்
கடை நாளில் கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என
முடிவில் ககன முகடு அதில் ஓடும் கலப கக(ம்) மயில் கடவி
நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே.
சிதறுண்டு நெறி தவறிய ஆழமில்லாத சிற்றறிவைக் கொண்டு, கொதித்துப் பேசியும், எதிர்க் கூச்சலிட்டும் மிக்க பேரொலியை எழுப்புகின்ற பர சமயங்களைப் பற்றிய ஒரு கோடிக் கணக்கான குருடர்களுக்கும் தெரிவதற்கு அரிதான ஒப்பற்ற பொருளை நான் தெரிந்து கொள்ளுமாறு ஓடிக்கொண்டே இருக்கும் மனம், பொல்லாத நல் வினை, தீ வினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி, உதறித் தள்ளி பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கும், இறப்பும் நீங்கவும், எனக்குள் இருக்கும் பகை ஒழியவும், (மேற்சொன்ன) மனம் உருகி உனது புகழைப் பாடி அனுபவித்து நாள்தோறும் ஞான உணர்ச்சி கொண்ட கண்களைப் பெற, உன்னுடைய கஸ்தூரி மணம் கமழும் தாமரை மலர் போன்ற திருவடி இணையை இனி நான் உணர்ந்து உய்ய அருள் புரிவாயாக. கதிர்கள் விரிய ஆகாயம் முழுவதும் விளக்கம் கொள்ளும் நட்சத்திரக் கூட்டங்கள் சிறிய தீப்பொறிகள் போல உருக, நாக லோகம் பாதாள லோகம் முதலிய ஏழு உலகங்களும், ஒளி வீசும் பல மலைகளும், நல்ல எட்டுத் திக்கு யானைகளும் (அஷ்ட திக்கஜங்கள்), நாகங்களும் ஒன்றுபட்டு கூடவே உருகித் தோன்றுகின்ற யுக முடிவான அந்தக் கடைசி நாளில், ஒலித்து எழுகின்ற கடல்களை உண்டு வடவா முகாக்கினி எழுப்புகின்ற கரிய நிறப் புகை என்று சொல்லும்படி, (போரின்) இறுதியில் ஆகாய உச்சியில் ஓடுகின்ற தோகைப் பட்சியான மயிலைச் செலுத்தி, (இவ்வாறாக) அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை என்னும் நால் வகைச் சேனைகளுடன் சண்டை செய்த பெருமாளே.
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ... சிதறுண்டு நெறி தவறிய ஆழமில்லாத சிற்றறிவைக் கொண்டு, கொதித்துப் பேசியும், எதிர்க் கூச்சலிட்டும் மிக்க பேரொலியை எழுப்புகின்ற பர சமயங்களைப் பற்றிய ஒரு கோடி குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது ... ஒரு கோடிக் கணக்கான குருடர்களுக்கும் தெரிவதற்கு அரிதான ஒப்பற்ற பொருளை நான் தெரிந்து கொள்ளுமாறு ஓடிக்கொண்டே இருக்கும் மனம், கொடிய இரு வினை எனும் அளறு போக ... பொல்லாத நல் வினை, தீ வினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி, உதறி விதறிய கரண(ம்) மரண(ம்) அற விரணம் அற ... உதறித் தள்ளி பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கும், இறப்பும் நீங்கவும், எனக்குள் இருக்கும் பகை ஒழியவும், உருகி உரை பருகி அநுதின(ம்) ஞான உணர்வு விழி பெற ... (மேற்சொன்ன) மனம் உருகி உனது புகழைப் பாடி அனுபவித்து நாள்தோறும் ஞான உணர்ச்சி கொண்ட கண்களைப் பெற, உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள் புரிவாயே ... உன்னுடைய கஸ்தூரி மணம் கமழும் தாமரை மலர் போன்ற திருவடி இணையை இனி நான் உணர்ந்து உய்ய அருள் புரிவாயாக. சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என ... கதிர்கள் விரிய ஆகாயம் முழுவதும் விளக்கம் கொள்ளும் நட்சத்திரக் கூட்டங்கள் சிறிய தீப்பொறிகள் போல உருக, உரக பிலம் ஏழும் செக தலமு(ம்) நிகர் சிகரி பலவு(ம்) ந(ல்)ல கெச புயக திசையும் உடன் உருக வரும் ... நாக லோகம் பாதாள லோகம் முதலிய ஏழு உலகங்களும், ஒளி வீசும் பல மலைகளும், நல்ல எட்டுத் திக்கு யானைகளும் (அஷ்ட திக்கஜங்கள்), நாகங்களும் ஒன்றுபட்டு கூடவே உருகித் தோன்றுகின்ற கடை நாளில் கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என ... யுக முடிவான அந்தக் கடைசி நாளில், ஒலித்து எழுகின்ற கடல்களை உண்டு வடவா முகாக்கினி எழுப்புகின்ற கரிய நிறப் புகை என்று சொல்லும்படி, முடிவில் ககன முகடு அதில் ஓடும் கலப கக(ம்) மயில் கடவி ... (போரின்) இறுதியில் ஆகாய உச்சியில் ஓடுகின்ற தோகைப் பட்சியான மயிலைச் செலுத்தி, நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே. ... (இவ்வாறாக) அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை என்னும் நால் வகைச் சேனைகளுடன் சண்டை செய்த பெருமாளே.