ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்ட நிலத்திலே, நல்வினை, தீவினை என்ற வேர்களில் ஊன்றிக்கொண்டு, துன்பம் என்ற முளைகள் முளைக்க வளர்ந்து, பொய்த் தோற்ற உணர்ச்சிகள் என்ற கிளைகள் செழிப்புற்றுப் பெருத்து, காமம் என்ற தளிர்கள் துளிர்விட்டு, அஞ்ஞானம் என்ற இலைகள் செழிப்புடன் தழைத்து மிகப் பெரிதாகி, கேடு என்னும் பூ மொட்டுக்கள் அரும்புவிட்டு, இறப்பு என்னும் பழம் பழுத்து, கடைசியில் முறிந்து அழிந்து போகின்ற உடல் என்னும் மாமரத்தின் அருமையான நிழல் அதன் பண்பிழந்து வீழ்ந்து போக, (உடல் என்னும் நிழல் தரும் மாமரக்) குடை அழிந்து போகும் முன்னரே இனிமைதரும் ஒப்பற்ற உபதேச மொழியை அருள்வாயாக. தவறான வழியையே பேசிய தக்ஷன் அமைத்த யாகசாலைக்குச் சென்ற சந்திரன், சூரியன், தேவர்கள், வஜ்ராயுதப் படையாளியான இந்திரன், திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரமன், சக்கரமும் சங்கும் ஏந்தின திருக்கைகளை உடைய திருமால், இவர்களின் பராக்கிரமம் மறைந்தொடுங்க, அவர்களை எதிர்த்து அடக்கிய வீர உக்ர மூர்த்தியாம் சிவபிரானின் மகனே, அழகான தோகைக் கூட்டத்தை உடைய எழிலான மயிலின் மீதேறி, எட்டு மலைகளையும் வெற்றி கொண்டு வலம் வந்த வேலனே, வலிமை வாய்ந்த அசுரர்களின் சேனை அழிபட்டு முறியும்படியாக மிகவும் பலமாகத் தாக்கி அவர்களை வெட்டி அழித்து, தேவர்களைச் சிறையினின்றும் மீண்டும் வருமாறு செய்த பெருமாளே.
எழுபிறவி நீர்நிலத்தில் ... ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்ட நிலத்திலே, இருவினைகள் வேர்பிடித்து ... நல்வினை, தீவினை என்ற வேர்களில் ஊன்றிக்கொண்டு, இடர்முளைகளேமுளைத்து வளர் ... துன்பம் என்ற முளைகள் முளைக்க வளர்ந்து, மாயை எனும் உலவையே பணைத்து ... பொய்த் தோற்ற உணர்ச்சிகள் என்ற கிளைகள் செழிப்புற்றுப் பெருத்து, விரககுழையே குழைத்து ... காமம் என்ற தளிர்கள் துளிர்விட்டு, இருளிலைகளே தழைத்து மிகநீளும் ... அஞ்ஞானம் என்ற இலைகள் செழிப்புடன் தழைத்து மிகப் பெரிதாகி, இழவுநனையேபிடித்து ... கேடு என்னும் பூ மொட்டுக்கள் அரும்புவிட்டு, மரணபழமே பழுத்து ... இறப்பு என்னும் பழம் பழுத்து, இடியுமுடல் மாமரத்தின் ... கடைசியில் முறிந்து அழிந்து போகின்ற உடல் என்னும் மாமரத்தின் அருநீழல் இசையில்விழ ... அருமையான நிழல் அதன் பண்பிழந்து வீழ்ந்து போக, ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு ... (உடல் என்னும் நிழல் தரும் மாமரக்) குடை அழிந்து போகும் முன்னரே இனியதொரு போதகத்தை யருள்வாயே ... இனிமைதரும் ஒப்பற்ற உபதேச மொழியை அருள்வாயாக. வழுவுநெறி பேசு தக்கன் ... தவறான வழியையே பேசிய தக்ஷன் இசையு மக சாலையுற்ற ... அமைத்த யாகசாலைக்குச் சென்ற மதியிரவி தேவர் வஜ்ரபடையாளி ... சந்திரன், சூரியன், தேவர்கள், வஜ்ராயுதப் படையாளியான இந்திரன், மலர்கமல யோனி ... திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரமன், சக்ர வளைமருவு பாணி ... சக்கரமும் சங்கும் ஏந்தின திருக்கைகளை உடைய திருமால், விக்ர மறைய ... இவர்களின் பராக்கிரமம் மறைந்தொடுங்க, எதிர் வீரவுக்ரர் புதல்வோனே ... அவர்களை எதிர்த்து அடக்கிய வீர உக்ர மூர்த்தியாம் சிவபிரானின் மகனே, அழகிய கலாபகற்றை விகடமயி லேறி ... அழகான தோகைக் கூட்டத்தை உடைய எழிலான மயிலின் மீதேறி, எட்டு அசலமிசை வாகையிட்டு வரும்வேலா ... எட்டு மலைகளையும் வெற்றி கொண்டு வலம் வந்த வேலனே, அடலசுரர் சேனைகெட்டு ... வலிமை வாய்ந்த அசுரர்களின் சேனை அழிபட்டு முறியமிக மோதிவெட்டி ... முறியும்படியாக மிகவும் பலமாகத் தாக்கி அவர்களை வெட்டி அழித்து, அமரர்சிறை மீளவிட்ட பெருமாளே. ... தேவர்களைச் சிறையினின்றும் மீண்டும் வருமாறு செய்த பெருமாளே.