ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலைத் தீது எனா
நல் தவத்து அணைவோர் தம் நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கம் இட்டு ஓயு(ம்) நாய் ஒப்பவர்க்கு இளையாதே
நீல மேனிக் குலத் தோகை மேல் உற்று நிட்டூர சூர் கெட்டு உகப் பொரும் வேலா
நேசமாய் நித்த(ம்) நின் தாளை நீள் அச்சம் அற்று ஓத நீதிப் பொருள் தர வேணும்
கோல வாரிக்கு இடைக் கோப அராவில் படுத்தானும் வேதக் குலத்து அயனாரும்
கூறும் வானப் புவிக்கு ஊறு தீரக் குறிப்பு ஓதுறா நிற்ப அக் கொடிதான காலன் மார்பு உற்று உதைத்தானும்
ஓர் கற்பு உடைக் கோதை காமக் கடற்கு இடை மூழ்க
காவி சேர் கொத்தலரப் பாணம் ஏய் வித்தகக் காம வேள் மைத்துனப் பெருமாளே.
உலகத்துடனே ஒத்து வாழுங்கள் மக்களே என்னும் நல்ல உபதேசத்தை கெட்டது என்று கருதி, நல்ல தவ நிலையில் பொருந்திய பெரியோர்களின் பேச்சின் ஒலியும், அவர்கள் சொன்ன புத்திமதியின் உண்மைக் கருத்தும் பின்னிட்டு ஓடும்படித் (தங்கள் கூச்சலில் அடங்க) அவர்களுடன் வாது பேசி, ஓய்ந்து போகும் நாய் போன்ற அறிவிலிகளிடம் அவர்கள் வாதுக்குத் தோற்றுப் போகாமல், நீல உருவம் விளங்கும், அடர்ந்த பீலிகளை உடைய, மயிலின் மேல் ஏறி, கொடுமையாளனான சூரன் அழிந்து சிதறும்படி சண்டை செய்யும் வேலனே, அன்புடன் நாள் தோறும் உனது திருவடிகளை நெடுநேரம் அஞ்சுதல் இல்லாமல் போற்றுதற்கு உரிய தர்ம சாஸ்திரப் பொருளை நீ எனக்குத் தர வேண்டும். அழகிய கடலின் மத்தியில் கோபம் நிறைந்த ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்துள்ள திருமாலும், வேதம் ஓதும் குலத்துப் பிரமனும், புகழப்படுகின்ற வானத்திலும் பூமியிலும் உள்ளோருக்கு கெடுதல் வரா வழிக்கு ஒரு குறிப்பை போதித்துக் காட்டுவதற்காக, அந்தக் கொடியவனான யமனுடைய மார்பில் படும்படி உதைத்த சிவபெருமானும் ஆகிய இம்மூவரும், ஒவ்வொரு கற்பு வாய்ந்த பெண்ணுடன் (முறையே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என்ற பெண்களுடன்) கூடி ஆசைக் கடலின் இடையே முழுகும்படி, நீலோற்பலத்தின் கொத்தான மலர்ப் பாணத்தை எய்த வல்லமை படைத்த மன்மதனின் மைத்துனப் பெருமாளே.
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலைத் தீது எனா ... உலகத்துடனே ஒத்து வாழுங்கள் மக்களே என்னும் நல்ல உபதேசத்தை கெட்டது என்று கருதி, நல் தவத்து அணைவோர் தம் நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கம் இட்டு ஓயு(ம்) நாய் ஒப்பவர்க்கு இளையாதே ... நல்ல தவ நிலையில் பொருந்திய பெரியோர்களின் பேச்சின் ஒலியும், அவர்கள் சொன்ன புத்திமதியின் உண்மைக் கருத்தும் பின்னிட்டு ஓடும்படித் (தங்கள் கூச்சலில் அடங்க) அவர்களுடன் வாது பேசி, ஓய்ந்து போகும் நாய் போன்ற அறிவிலிகளிடம் அவர்கள் வாதுக்குத் தோற்றுப் போகாமல், நீல மேனிக் குலத் தோகை மேல் உற்று நிட்டூர சூர் கெட்டு உகப் பொரும் வேலா ... நீல உருவம் விளங்கும், அடர்ந்த பீலிகளை உடைய, மயிலின் மேல் ஏறி, கொடுமையாளனான சூரன் அழிந்து சிதறும்படி சண்டை செய்யும் வேலனே, நேசமாய் நித்த(ம்) நின் தாளை நீள் அச்சம் அற்று ஓத நீதிப் பொருள் தர வேணும் ... அன்புடன் நாள் தோறும் உனது திருவடிகளை நெடுநேரம் அஞ்சுதல் இல்லாமல் போற்றுதற்கு உரிய தர்ம சாஸ்திரப் பொருளை நீ எனக்குத் தர வேண்டும். கோல வாரிக்கு இடைக் கோப அராவில் படுத்தானும் வேதக் குலத்து அயனாரும் ... அழகிய கடலின் மத்தியில் கோபம் நிறைந்த ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்துள்ள திருமாலும், வேதம் ஓதும் குலத்துப் பிரமனும், கூறும் வானப் புவிக்கு ஊறு தீரக் குறிப்பு ஓதுறா நிற்ப அக் கொடிதான காலன் மார்பு உற்று உதைத்தானும் ... புகழப்படுகின்ற வானத்திலும் பூமியிலும் உள்ளோருக்கு கெடுதல் வரா வழிக்கு ஒரு குறிப்பை போதித்துக் காட்டுவதற்காக, அந்தக் கொடியவனான யமனுடைய மார்பில் படும்படி உதைத்த சிவபெருமானும் ஆகிய இம்மூவரும், ஓர் கற்பு உடைக் கோதை காமக் கடற்கு இடை மூழ்க ... ஒவ்வொரு கற்பு வாய்ந்த பெண்ணுடன் (முறையே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என்ற பெண்களுடன்) கூடி ஆசைக் கடலின் இடையே முழுகும்படி, காவி சேர் கொத்தலரப் பாணம் ஏய் வித்தகக் காம வேள் மைத்துனப் பெருமாளே. ... நீலோற்பலத்தின் கொத்தான மலர்ப் பாணத்தை எய்த வல்லமை படைத்த மன்மதனின் மைத்துனப் பெருமாளே.