மைச்சுனமார் மா மனைச்சியு(ம்) மாதாவு(ம்) மக்களும் மாறாத துயர் கூர
மட்டு இலது ஓர் தீயில் இக் குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக
மதி மாய நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு(ம்) நெட்டு அளவாம் வாதை அணுகா முன்
நெக்கு உருகா ஞானம் உற்று உன தாள் ஓதி நித்தலும் வாழ்மாறு தருவாயே
நச்சு அணை மேல் வாழும் அச்சுதன் நால் வேதன் நல் தவர் நாட விடை ஏறி நல் புதல்வா
சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா
ஞாலம் மிக வாழப் பச்செனு நீள் தோகை மெய்ப்பரி ஊர் பாக
பத்தியது ஆம் ஆறு முக நாளும் பக்ஷமும் மேலாய்
ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே.
மைத்துனர்களும், சிறந்த மனைவியும், தாயும், குழந்தைகளும் நீங்காத துயரம் மிக அடைய, குறைவில்லாது (நன்கு எரியும்) ஒரு நெருப்பில் இந்த உடம்பையே வேகும்படி வைத்துவிட்டு, அவரவர்களின் வீட்டுக்குச் செல்ல, அறிவு கலங்கும்படி உறுதியாக ஒரு நாளைக் குறிப்பிட்டு, (அந்த நாளில் யமன்) தனது தூதர்களை அனுப்பும், பெரும் அளவுக்குப் பட வேண்டிய வேதனைகள் என்னை நெருங்குவதற்கு முன்பாக, மனம் நெகிழ்ந்து உருகி, ஞான நிலையை அடைந்து, உனது திருவடிகளை வணங்கி நாள் தோறும் நான் வாழும் பொருட்டு அருள் புரிவாயாக. விஷம் கொண்ட பாம்பணையின் மேல் துயில் கொள்ளும் திருமால், நான்கு வேதங்களிலும் சிறந்த பிரமன், நல்ல தவசிகள் ஆகியோர்கள் தேடி நிற்க, ரிஷப வாகனத்தில் ஏறி விளங்கும் சிவபெருமானுடைய சிறப்புள்ள புதல்வனே, சூரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல துணைவனே, உலகோர் சிறப்பாக வாழும்படி, பச்சையான ஒளி வீசும் தோகையைக் கொண்ட உடலை உடைய குதிரையாகிய மயிலைச் செலுத்தும் பாகனே, வரிசையாயுள்ள ஆறு திருமுகங்களிலும் நாள் தோறும் அன்பு மேற் கொண்டவனே, (சரவணபவ என்ற) ஆறெழுத்துக்கு உரியவனே, உலகெல்லாம் வலம் வந்த திருவடிகளை உடையவனே, உன்னைப் பக்தியுடன் போற்றிப்பணியும் தேவர்களின் பெருமாளே.
மைச்சுனமார் மா மனைச்சியு(ம்) மாதாவு(ம்) மக்களும் மாறாத துயர் கூர ... மைத்துனர்களும், சிறந்த மனைவியும், தாயும், குழந்தைகளும் நீங்காத துயரம் மிக அடைய, மட்டு இலது ஓர் தீயில் இக் குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக ... குறைவில்லாது (நன்கு எரியும்) ஒரு நெருப்பில் இந்த உடம்பையே வேகும்படி வைத்துவிட்டு, அவரவர்களின் வீட்டுக்குச் செல்ல, மதி மாய நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு(ம்) நெட்டு அளவாம் வாதை அணுகா முன் ... அறிவு கலங்கும்படி உறுதியாக ஒரு நாளைக் குறிப்பிட்டு, (அந்த நாளில் யமன்) தனது தூதர்களை அனுப்பும், பெரும் அளவுக்குப் பட வேண்டிய வேதனைகள் என்னை நெருங்குவதற்கு முன்பாக, நெக்கு உருகா ஞானம் உற்று உன தாள் ஓதி நித்தலும் வாழ்மாறு தருவாயே ... மனம் நெகிழ்ந்து உருகி, ஞான நிலையை அடைந்து, உனது திருவடிகளை வணங்கி நாள் தோறும் நான் வாழும் பொருட்டு அருள் புரிவாயாக. நச்சு அணை மேல் வாழும் அச்சுதன் நால் வேதன் நல் தவர் நாட விடை ஏறி நல் புதல்வா ... விஷம் கொண்ட பாம்பணையின் மேல் துயில் கொள்ளும் திருமால், நான்கு வேதங்களிலும் சிறந்த பிரமன், நல்ல தவசிகள் ஆகியோர்கள் தேடி நிற்க, ரிஷப வாகனத்தில் ஏறி விளங்கும் சிவபெருமானுடைய சிறப்புள்ள புதல்வனே, சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ... சூரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல துணைவனே, ஞாலம் மிக வாழப் பச்செனு நீள் தோகை மெய்ப்பரி ஊர் பாக ... உலகோர் சிறப்பாக வாழும்படி, பச்சையான ஒளி வீசும் தோகையைக் கொண்ட உடலை உடைய குதிரையாகிய மயிலைச் செலுத்தும் பாகனே, பத்தியது ஆம் ஆறு முக நாளும் பக்ஷமும் மேலாய் ... வரிசையாயுள்ள ஆறு திருமுகங்களிலும் நாள் தோறும் அன்பு மேற் கொண்டவனே, ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே. ... (சரவணபவ என்ற) ஆறெழுத்துக்கு உரியவனே, உலகெல்லாம் வலம் வந்த திருவடிகளை உடையவனே, உன்னைப் பக்தியுடன் போற்றிப்பணியும் தேவர்களின் பெருமாளே.