பட்டு ஆடைக்கே பச்சை ஓலைக் காதுக்கே
பத்தித் தன மா கும்பக்கே நிட்டூரப் பார்வைக்கே பட்டு
ஆசைப்பட்டு உறவாடி ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசு உற்றே
முற்றத் தடுமாறும் ஒட்டாரப் பாவிக்கே
மிக்காம் உன் தாள் கிட்டத் தகுமோதான்
கள் தாவிப் போது உள் தாவிப் பூகக் காவிற் புக்கு அளிபாடும்
கற்பு ஊர் நற்சார் அக் காழித் தோய் கத்தா
சத்தித் தகவோடே முட்டாகக் கூரிட்டு
ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா
முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.
பட்டுப் புடைவைக்கும், பசும்பொன்னிலான தோட்டினை அணிந்துள்ள காதுக்கும், ஒழுங்காக உள்ள அழகிய கும்பங்களைப் போன்ற மார்பகங்களுக்கும், கொடுமையைக் காட்டும் பார்வைக்கும் அகப்பட்டு, (விலைமாதரிடம்) ஆசைப்பட்டு உறவு பூண்டு கலந்து களித்து, ஆகாதவர்கள், நண்பர்கள் முதலிய அனைத்து வட்டாரங்களிலும் பழிப்புக்கு ஆளாகி, அடியோடு தடுமாறுகின்ற, பிடிவாதம் நிறைந்த பாவியாகிய எனக்கு, மேலானதாகிய உனது திருவடி கிடைக்கும்படியான தகுதி உண்டோ? மதுவை நாடி அலைந்து மலர்களின் உள்ளே பாய்ந்து, கமுக மரச் சோலைக்குள்ளே புகுந்து வண்டுகள் பாடுகின்ற சிறந்த முறைமை வாய்ந்த நன்மைகள் நிறைந்த அந்தச் சீகாழித் தலத்தை அடைந்து வீற்றிருக்கும் கர்த்தனே, இச்சா சக்தியின் அம்சம் பொருந்தியுள்ள வள்ளியின் முன்னே எதிர்ப்பட வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாகி தினைப்புனத்தில் உள்ள பயிர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பேயே அந்த வள்ளியைக் கவர்ந்து கொண்ட குமரேசனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.
பட்டு ஆடைக்கே பச்சை ஓலைக் காதுக்கே ... பட்டுப் புடைவைக்கும், பசும்பொன்னிலான தோட்டினை அணிந்துள்ள காதுக்கும், பத்தித் தன மா கும்பக்கே நிட்டூரப் பார்வைக்கே பட்டு ... ஒழுங்காக உள்ள அழகிய கும்பங்களைப் போன்ற மார்பகங்களுக்கும், கொடுமையைக் காட்டும் பார்வைக்கும் அகப்பட்டு, ஆசைப்பட்டு உறவாடி ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசு உற்றே ... (விலைமாதரிடம்) ஆசைப்பட்டு உறவு பூண்டு கலந்து களித்து, ஆகாதவர்கள், நண்பர்கள் முதலிய அனைத்து வட்டாரங்களிலும் பழிப்புக்கு ஆளாகி, முற்றத் தடுமாறும் ஒட்டாரப் பாவிக்கே ... அடியோடு தடுமாறுகின்ற, பிடிவாதம் நிறைந்த பாவியாகிய எனக்கு, மிக்காம் உன் தாள் கிட்டத் தகுமோதான் ... மேலானதாகிய உனது திருவடி கிடைக்கும்படியான தகுதி உண்டோ? கள் தாவிப் போது உள் தாவிப் பூகக் காவிற் புக்கு அளிபாடும் ... மதுவை நாடி அலைந்து மலர்களின் உள்ளே பாய்ந்து, கமுக மரச் சோலைக்குள்ளே புகுந்து வண்டுகள் பாடுகின்ற கற்பு ஊர் நற்சார் அக் காழித் தோய் கத்தா ... சிறந்த முறைமை வாய்ந்த நன்மைகள் நிறைந்த அந்தச் சீகாழித் தலத்தை அடைந்து வீற்றிருக்கும் கர்த்தனே, சத்தித் தகவோடே முட்டாகக் கூரிட்டு ... இச்சா சக்தியின் அம்சம் பொருந்தியுள்ள வள்ளியின் முன்னே எதிர்ப்பட வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாகி ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா ... தினைப்புனத்தில் உள்ள பயிர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பேயே அந்த வள்ளியைக் கவர்ந்து கொண்ட குமரேசனே, முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ... முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.