சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1125   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1008 )  

அரிய வஞ்சகர்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தந்தன தனனா தனதன
     தந்தன தனனா தனதன
          தனன தந்தன தனனா தனதன ...... தனதான

அரிய வஞ்சக ரறவே கொடியவர்
     அவலர் வன்கண ரினியா ரவகுணர்
          அசட ரன்பில ரவமே திரிபவர் ...... அதிமோக
அலையில் மண்டிய வழியே யொழுகியர்
     வினைநி ரம்பிடு பவமே செறிபவர்
          அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் ...... நரகேற
உரிய சஞ்சல மதியா னதுபெறு
     மனஇ டும்பர்க ளிடமே தெனஅவர்
          உபய அங்கமு நிலையா கிடவொரு ...... கவியாலே
உலக முண்டவர் மதனா ரிமையவர்
     தருவெ னும்படி மொழியா வவர்தர
          உளது கொண்டுயி ரவமே விடுவது ...... தவிராதோ
கரிய கொந்தள மலையா ளிருதன
     அமுது ணுங்குரு பரனே திரைபடு
          கடல டும்படி கணையே வியஅரி ...... மருகோனே
கருணை கொண்டொரு குறமா மகளிடை
     கலவி தங்கிய குமரா மயில்மிசை
          கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு ...... மிளையோனே
திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து
     பொதுந டம்புரி யரனா ரிடமுறை
          சிவைச வுந்தரி யுமையா ளருளிய ...... புதல்வோனே
சிகர வெண்கரி அயிரா வதமிசை
     வருபு ரந்தர னமரா பதியவர்
          சிறைவி டும்படி வடிவேல் விடவல ...... பெருமாளே.
Easy Version:
அரிய வஞ்சகர் அறவே கொடியவர்
அவலர் வன்கணர் இனியார் அவகுணர்
அசடர் அன்பிலர் அவமே திரிபவர்
அதிமோக அலையில் மண்டிய வழியே ஒழுகியர்
வினை நிரம்பிடு பவமே செறிபவர்
அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள்
நரகு ஏற உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள்
இடம் ஏது என அவர் உபய அங்கமும் நிலையாகிட ஒரு
கவியாலே
உலகம் உண்டவர் மதனார் இமையவர் தரு எனும்படி
மொழியா
அவர் தர உளது கொண்டு உயிர் அவமே விடுவது
தவிராதோ
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு
பரனே
திரை படு கடல் அடும்படி கணை ஏவிய அரி மருகோனே
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய
குமரா
மயில் மிசை கடுகி எண் திசை நொடியே வலம் வரும்
இளையோனே
திரி புரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம் புரி
அரனார் இடம் உறை
சிவை சவுந்தரி உமையாள் அருளிய புதல்வோனே
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமரா பதி
அவர்
சிறை விடும்படி வடிவேல் விடவல பெருமாளே.
Add (additional) Audio/Video Link

அரிய வஞ்சகர் அறவே கொடியவர் ... வஞ்சகத்தில் அருமையாகத்
தேர்ந்த மிகவும் பொல்லாதவர்கள்,
அவலர் வன்கணர் இனியார் அவகுணர் ... வீணாக பொழுது
போக்குபவர், இரக்கம் இல்லாதவர்கள், இன்பம் தரும் வகையில் பேச
வல்லவர்கள், துர்க்குணம் உடையவர்,
அசடர் அன்பிலர் அவமே திரிபவர் ... மூடர், அன்பு இல்லாதவர்கள்,
கேடு தரும் வழியில் திரிபவர்,
அதிமோக அலையில் மண்டிய வழியே ஒழுகியர் ... மிகவும் காமம்
என்னும் கடலலையில் மோசமான வழியையே பின்பற்றுபவர்,
வினை நிரம்பிடு பவமே செறிபவர் ... தீவினை மிக்கு நிரம்பும்
பாபமே பொருந்தியவர்கள்,
அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள் ... கருணையை
அடியோடு விட்டவருடைய இடத்தையே தமது இருப்பிடமாகக்
கொண்டு வாழும் அறிவீனர்கள்,
நரகு ஏற உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் ...
நரகத்திலே வீழுதற்கே உரித்தான குழப்பம் கொண்ட அறிவைப்
பெற்றுள்ள அகந்தை நெஞ்சினர்கள்,
இடம் ஏது என அவர் உபய அங்கமும் நிலையாகிட ஒரு
கவியாலே
... இத்தகையோர் இருக்கும் இடம் எது என்று வினவிச்
சென்று, அவருடைய உடலும் அங்கமும் (சாங்கமும் உபாங்கமும்)
என்றும் நிலைத்திருக்கும்படியாக ஒரு பாடல் அமைத்து,
உலகம் உண்டவர் மதனார் இமையவர் தரு எனும்படி
மொழியா
... அவரை உலகத்தை உண்ட திருமாலே என்றும், மன்மதனே
என்றும், தேவலோகத்து கற்பக மரம் இவரே என்றும் இவ்வாறு வர்ணித்து,
அவர் தர உளது கொண்டு உயிர் அவமே விடுவது
தவிராதோ
... அவர் தரக் கூடிய பொருளைப் பெற்று உயிரை வீணாக
இழக்கின்ற இத்தகைய இழிதொழில் என்னை விட்டு நீங்காதோ?
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு
பரனே
... கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய மலை மகள்
பார்வதியின் இருமுலையிலும் பாலமுதத்தை உண்ட குரு மூர்த்தியே,
திரை படு கடல் அடும்படி கணை ஏவிய அரி மருகோனே ...
அலை வீசும் கடல் வெந்து அழியும்படி அம்பைச் செலுத்திய ராமனாம்
திருமாலின் மருகோனே,
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய
குமரா
... அருள் நிரம்பி ஒப்பற்ற, சிறந்த குறப் பெண்ணான
வள்ளியிடத்தே கலந்து மணம் பொருந்தின குமரனே,
மயில் மிசை கடுகி எண் திசை நொடியே வலம் வரும்
இளையோனே
... மயிலின் மீது வேகமாக எட்டுத் திசைகளையும் ஒரு
நொடிப் பொழுதில் வலம் வந்த இளையோனே,
திரி புரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம் புரி
அரனார் இடம் உறை
... திரிபுரங்களையும் நெருப்புச் சிரிப்பால்
எரித்து, அம்பலத்தில் நடனம் செய்யும் சிவபெருமானது இடப் பக்கத்தில்
உறையும்
சிவை சவுந்தரி உமையாள் அருளிய புதல்வோனே ...
சிவாம்பிகை, அழகிய பார்வதி பெற்று அருளிய குழந்தையே.
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமரா பதி
அவர்
... மலை போன்ற வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மீது
ஏறிவரும் இந்திரனும், தேவர் உலகில் வாழ்ந்திருந்த தேவர்களும்
சிறை விடும்படி வடிவேல் விடவல பெருமாளே. ...
சிறையினின்று மீளும்படி கூரிய வேலைச் செலுத்திய பெருமாளே.

Similar songs:

1125 - அரிய வஞ்சகர் (பொதுப்பாடல்கள்)

தனன தந்தன தனனா தனதன
     தந்தன தனனா தனதன
          தனன தந்தன தனனா தனதன ...... தனதான

Songs from this thalam பொதுப்பாடல்கள்

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song