உரைத்த பற்றுடன் அடிகள் பணித்திட்டு இருத்தி மெத்தென இள நகையும் சற்று உமிழ்த்த அடைக்கலம் என எதிர் கும்பிட்டு அணை மேல் வீழ்ந்து
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து உனக்கு எனக்கு என உருகி முயங்கிட்டு உளம் வேறாய்
அருக்கியத்து அனை எனும் அவசம் பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து அறப் பிதற்றிட அமளி கலங்கித் தடுமாறி
அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு அடுத்து அகப்படு கலவியில் நொந்து எய்த்திடலாமோ
தரைக் கடல் புகு நிருதர் தயங்கச் சளப்படத் தட முடிகள் பிடுங்கித் தகர்த்து ஒலித்து எழு மலையொடு துண்டப் பிறை சூடி தனுக்கிரித் திரிதர
எதிரும் கொக்கினைப் பதைத்து உடல் அலறிட வஞ்சத் தருக்கு அடக்கிய சமர் பொரு துங்கத் தனி வேலா
பருப்பத ப்ரிய குறுமுனி வந்தித்து இருக்கும் உத்தம நிருதர் கலங்கப் படைப் பெலத்தொடு பழய க்ரவுஞ்சக் கிரி சாடிப் படர்ப் பறைக் குருகு உடல் உதிரம் குக்குடக் கொடிக்கு இடு குமர
கொடுங்கல் பதத்து உறுத்து உகு பசிய சிகண்டிப் பெருமாளே.
சொற்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆசையுடன் அடிகளில் வணங்கி, மெத்தென்ற அணையில் இருக்கச் செய்து புன்சிரிப்பும் கொஞ்சம் வெளிக்காட்ட, உனக்கு அடைக்கலம் என்று அந்தப் பொது மகளை எதிர் வணங்கி படுக்கையில் அவள் மேல் விழுந்து, அணிந்துள்ள அழகிய ஆடை நீங்கிய பெண்குறியைப் பரிசித்துத் தீண்டி, அவளை எடுத்து, அணைத்து, வாயிதழ் பெருகி ஊறும் அமுதத்தை அனுபவித்து, உனக்கு என்ன வேண்டும், எனக்கு இன்னதைக் கொடு என்று மனம் ஒன்றுபட்டு தழுவிப் புணர்ந்திட்டு, அறிவு கலங்கி, தேவர்கள், அதிதிகள் ஆகியோருக்குச் செய்யும் உபசாரத்தை நிகர்க்கும் என்று சொல்லும்படி (அவ்வளவு மரியாதையுடன்) தன் வசம் இழந்து, அறுத்து ஒதுக்கப்பட்ட நக நுனியால் கீறுபட்டு, மிகவும் பிதற்றலான பேச்சுக்களைப் பேசி, படுக்கையும் கலைந்து போகத் தடுமாற்றம் அடைந்து, அனுபவித்து திளைத்து, இரண்டு கண்களும் சிவக்க தளர்ந்து, இன்பகரமாகப் பேசும் (அந்த விலைமாதர்களின்) உடல் இன்பத்துக்கு ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும் புணர்ச்சியினால் மனமும் உடலும் நொந்து நான் இளைப்புறலாமோ? தரையிலும் கடலிலும் புகுந்த அசுரர்கள் கலக்கமுற்று துன்பப்பட, அவர்களுடைய பெரிய தலைகளைப் பறித்து நொறுக்கி, கூச்சலிட்டு எழுந்த ஏழு மலைகளுடன் பிறைச் சந்திரனைச் சூடியுள்ள சிவபெருமானுக்கு வில்லாயிருந்த மேரு மலையும் சுழற்சியுற, எதிர்த்து வந்த மாமரமாகிய சூரன் உடல் பதைப்புற்று கூச்சலிட, வஞ்ச எண்ணத்தையும் செருக்கையும் அடக்கிய போரைப் புரிந்த பரிசுத்தமான ஒப்பற்ற வேலாயுதனே, மலைகள் மீது விருப்பம் கொண்டவனே, அகத்தியர் வணங்கிப் போற்றுகின்ற உத்தமனே, அசுரர்கள் கலக்கம் கொள்ள படையின் பலத்துடன் பழையதாய் நிற்கும் கிரெளஞ்ச மலையைத் தகர்த்து, படர்ந்துள்ள இறகுகளை உடைய அந்தக் கிரவுஞ்சனுடைய உடலில் உள்ள இரத்தத்தை கொடியாகிய கோழிக்குத் தந்த குமரனே, முரட்டுத் தன்மை உள்ள மலை இடத்தே தங்கி அங்கிருந்து பறக்கும் பச்சை நிறமான மயிலை வாகனமாக உடைய பெருமாளே.
உரைத்த பற்றுடன் அடிகள் பணித்திட்டு இருத்தி மெத்தென இள நகையும் சற்று உமிழ்த்த அடைக்கலம் என எதிர் கும்பிட்டு அணை மேல் வீழ்ந்து ... சொற்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆசையுடன் அடிகளில் வணங்கி, மெத்தென்ற அணையில் இருக்கச் செய்து புன்சிரிப்பும் கொஞ்சம் வெளிக்காட்ட, உனக்கு அடைக்கலம் என்று அந்தப் பொது மகளை எதிர் வணங்கி படுக்கையில் அவள் மேல் விழுந்து, உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து உனக்கு எனக்கு என உருகி முயங்கிட்டு உளம் வேறாய் ... அணிந்துள்ள அழகிய ஆடை நீங்கிய பெண்குறியைப் பரிசித்துத் தீண்டி, அவளை எடுத்து, அணைத்து, வாயிதழ் பெருகி ஊறும் அமுதத்தை அனுபவித்து, உனக்கு என்ன வேண்டும், எனக்கு இன்னதைக் கொடு என்று மனம் ஒன்றுபட்டு தழுவிப் புணர்ந்திட்டு, அறிவு கலங்கி, அருக்கியத்து அனை எனும் அவசம் பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து அறப் பிதற்றிட அமளி கலங்கித் தடுமாறி ... தேவர்கள், அதிதிகள் ஆகியோருக்குச் செய்யும் உபசாரத்தை நிகர்க்கும் என்று சொல்லும்படி (அவ்வளவு மரியாதையுடன்) தன் வசம் இழந்து, அறுத்து ஒதுக்கப்பட்ட நக நுனியால் கீறுபட்டு, மிகவும் பிதற்றலான பேச்சுக்களைப் பேசி, படுக்கையும் கலைந்து போகத் தடுமாற்றம் அடைந்து, அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு அடுத்து அகப்படு கலவியில் நொந்து எய்த்திடலாமோ ... அனுபவித்து திளைத்து, இரண்டு கண்களும் சிவக்க தளர்ந்து, இன்பகரமாகப் பேசும் (அந்த விலைமாதர்களின்) உடல் இன்பத்துக்கு ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும் புணர்ச்சியினால் மனமும் உடலும் நொந்து நான் இளைப்புறலாமோ? தரைக் கடல் புகு நிருதர் தயங்கச் சளப்படத் தட முடிகள் பிடுங்கித் தகர்த்து ஒலித்து எழு மலையொடு துண்டப் பிறை சூடி தனுக்கிரித் திரிதர ... தரையிலும் கடலிலும் புகுந்த அசுரர்கள் கலக்கமுற்று துன்பப்பட, அவர்களுடைய பெரிய தலைகளைப் பறித்து நொறுக்கி, கூச்சலிட்டு எழுந்த ஏழு மலைகளுடன் பிறைச் சந்திரனைச் சூடியுள்ள சிவபெருமானுக்கு வில்லாயிருந்த மேரு மலையும் சுழற்சியுற, எதிரும் கொக்கினைப் பதைத்து உடல் அலறிட வஞ்சத் தருக்கு அடக்கிய சமர் பொரு துங்கத் தனி வேலா ... எதிர்த்து வந்த மாமரமாகிய சூரன் உடல் பதைப்புற்று கூச்சலிட, வஞ்ச எண்ணத்தையும் செருக்கையும் அடக்கிய போரைப் புரிந்த பரிசுத்தமான ஒப்பற்ற வேலாயுதனே, பருப்பத ப்ரிய குறுமுனி வந்தித்து இருக்கும் உத்தம நிருதர் கலங்கப் படைப் பெலத்தொடு பழய க்ரவுஞ்சக் கிரி சாடிப் படர்ப் பறைக் குருகு உடல் உதிரம் குக்குடக் கொடிக்கு இடு குமர ... மலைகள் மீது விருப்பம் கொண்டவனே, அகத்தியர் வணங்கிப் போற்றுகின்ற உத்தமனே, அசுரர்கள் கலக்கம் கொள்ள படையின் பலத்துடன் பழையதாய் நிற்கும் கிரெளஞ்ச மலையைத் தகர்த்து, படர்ந்துள்ள இறகுகளை உடைய அந்தக் கிரவுஞ்சனுடைய உடலில் உள்ள இரத்தத்தை கொடியாகிய கோழிக்குத் தந்த குமரனே, கொடுங்கல் பதத்து உறுத்து உகு பசிய சிகண்டிப் பெருமாளே. ... முரட்டுத் தன்மை உள்ள மலை இடத்தே தங்கி அங்கிருந்து பறக்கும் பச்சை நிறமான மயிலை வாகனமாக உடைய பெருமாளே.