பத்தித் தரளக் கொத்து ஒளிர் வரி பட்டப் புளகச் செப்பு இள முலை பட்டு இட்டு
எதிர் கட்டுப் பரதவர் உயர் தாளப் பத்மத்தியர் அற்புக் கடுகடு கண் சத்தியர்
மெத்தத் திரவிய பட்சத்தியர் இக்குச் சிலை உருவு இலி சேரும் சித்தத் தருணர்க்குக் கனி அதரப் புத்தமுதத்தைத் தரும்
அவர் சித்ரக் கிரணப் பொட்டு இடு பிறை நுதலார் தம் தெட்டில் படு கட்டக் கனவிய பட்சத்து அருள் அற்று
உற்று உனது அடி சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது தவிராதோ
மத்தப் பிரமத்தக் கய முகனைக் குத்தி மிதித்துக் கழுதுகள் மட்டிட்ட இரத்தக் குருதியில் விளையாட
மற்றைப் பதினெட்டுக் கண வகை சத்திக்க நடிக்கப் பல பல வர்க்கத் தலை தத்தப் பொரு படை உடையோனே
முத்திப் பரமத்தைக் கருதிய சித்தத்தினில் முற்றத் தவ முனி முற்பட்டு உழை பெற்றுத் தரு குற மகள் மேல் மால் முற்றத் திரி வெற்றிக் குருபர
முற்பட்ட முரட்டுப் புலவனை முட்டைப் பெயர் செப்பிக் கவி பெறு பெருமாளே.
வரிசையாய் அமைந்த முத்துமாலைகளின் கூட்டம் ஒளி வீசுவதும், ரேகைகள் விளங்குவதும், புளகாங்கிதம் கொண்டதும், செப்புக் குடம் போன்றதுமான இளம் மார்பகங்களின் மீது பட்டு ஆடையை அணிந்து, முற்புறத்தில் கச்சை முடிந்து, பரத நாட்டியத்தில் வல்லவர்களுடைய சிறந்த தாளத்துக்கு இணையான தாமரை மொட்டுப் போன்ற மார்பை உடையவர்கள். (ஒரு சமயத்தில்) அன்பையும் (இன்னொரு சமயம்) சினக் குறிப்பையும் காட்டும் வேல் போன்ற கண்களை உடையவர்கள். மிகவும் பொருள் மீது ஆசை வைத்துள்ளவர்கள். கரும்பு வில்லை உடைய, உருவம் இல்லாத மன்மதனுடைய காம சேஷ்டைகள் சேர்ந்துள்ள உள்ளத்தை உடைய இளம் வாலிபர்களுக்கு கொவ்வைப் பழம் போன்ற வாயிதழ் அமுதத்தைத் தருபவர்கள். அவர்கள் அழகிய ஒளி வீசும் பொட்டை இட்டுள்ள பிறைச் சந்திரன் போன்ற நெற்றியை உடைய விலைமாதர்கள். அவர்களின் வஞ்சனை வலையில் படுகின்ற, கஷ்டமான, மிகுந்த ஆசை என்னும் மகிழ்ச்சி நீங்கி, உனது திருவடியில் சரணடைந்து மனதை நிறுத்தினால், உலகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு இடையிலே புகுந்து அலைச்சல் உறுவது தொலையாதோ? செருக்கையும் மதி மயக்கத்தையும் உடைய யானை முகம் கொண்ட தாரகாசுரனது உடலைக் குத்தியும், மிதித்தும், பேய்கள் அளவில்லாத ரத்தச் சிவப்பில் விளையாடவும், மற்றும் பதினெட்டு கண வகைகளும் ஒலி செய்து நடனமாட, பல வகையான ஜீவ ராசிகளின் தலைகள் சிதறுண்டு விழும்படியாக சண்டை செய்த வேலாயுதத்தை உடையவனே, முக்தி என்னும் மேலான பொருளைப் பெற நினைத்த உள்ளத்தோடு, முதிர்ந்த தவ நிலையில் இருந்த சிவ முனிவரின் (உருவில் வந்த திருமாலின்) முன்னிலையில் நின்று லக்ஷ்மியாகிய பெண் மான் பெற்றுத் தந்த குற மகளாகிய வள்ளியின் மேல் ஆசை நிரம்பக் கொண்டு, (வள்ளி இருந்த தினைப் புனத்தில்) திரிந்த வெற்றி வீரனாகிய குரு மூர்த்தியே, எதிர்ப்பட்ட பிடிவாதம் பிடித்த பொய்யாமொழி என்னும் புலவனை முட்டை என்ற பெயர் என்று சொல்லி, அந்தப் புலவனைத் தம் மீது பாடவைத்த பெருமாளே.
பத்தித் தரளக் கொத்து ஒளிர் வரி பட்டப் புளகச் செப்பு இள முலை பட்டு இட்டு ... வரிசையாய் அமைந்த முத்துமாலைகளின் கூட்டம் ஒளி வீசுவதும், ரேகைகள் விளங்குவதும், புளகாங்கிதம் கொண்டதும், செப்புக் குடம் போன்றதுமான இளம் மார்பகங்களின் மீது பட்டு ஆடையை அணிந்து, எதிர் கட்டுப் பரதவர் உயர் தாளப் பத்மத்தியர் அற்புக் கடுகடு கண் சத்தியர் ... முற்புறத்தில் கச்சை முடிந்து, பரத நாட்டியத்தில் வல்லவர்களுடைய சிறந்த தாளத்துக்கு இணையான தாமரை மொட்டுப் போன்ற மார்பை உடையவர்கள். (ஒரு சமயத்தில்) அன்பையும் (இன்னொரு சமயம்) சினக் குறிப்பையும் காட்டும் வேல் போன்ற கண்களை உடையவர்கள். மெத்தத் திரவிய பட்சத்தியர் இக்குச் சிலை உருவு இலி சேரும் சித்தத் தருணர்க்குக் கனி அதரப் புத்தமுதத்தைத் தரும் ... மிகவும் பொருள் மீது ஆசை வைத்துள்ளவர்கள். கரும்பு வில்லை உடைய, உருவம் இல்லாத மன்மதனுடைய காம சேஷ்டைகள் சேர்ந்துள்ள உள்ளத்தை உடைய இளம் வாலிபர்களுக்கு கொவ்வைப் பழம் போன்ற வாயிதழ் அமுதத்தைத் தருபவர்கள். அவர் சித்ரக் கிரணப் பொட்டு இடு பிறை நுதலார் தம் தெட்டில் படு கட்டக் கனவிய பட்சத்து அருள் அற்று ... அவர்கள் அழகிய ஒளி வீசும் பொட்டை இட்டுள்ள பிறைச் சந்திரன் போன்ற நெற்றியை உடைய விலைமாதர்கள். அவர்களின் வஞ்சனை வலையில் படுகின்ற, கஷ்டமான, மிகுந்த ஆசை என்னும் மகிழ்ச்சி நீங்கி, உற்று உனது அடி சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது தவிராதோ ... உனது திருவடியில் சரணடைந்து மனதை நிறுத்தினால், உலகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு இடையிலே புகுந்து அலைச்சல் உறுவது தொலையாதோ? மத்தப் பிரமத்தக் கய முகனைக் குத்தி மிதித்துக் கழுதுகள் மட்டிட்ட இரத்தக் குருதியில் விளையாட ... செருக்கையும் மதி மயக்கத்தையும் உடைய யானை முகம் கொண்ட தாரகாசுரனது உடலைக் குத்தியும், மிதித்தும், பேய்கள் அளவில்லாத ரத்தச் சிவப்பில் விளையாடவும், மற்றைப் பதினெட்டுக் கண வகை சத்திக்க நடிக்கப் பல பல வர்க்கத் தலை தத்தப் பொரு படை உடையோனே ... மற்றும் பதினெட்டு கண வகைகளும் ஒலி செய்து நடனமாட, பல வகையான ஜீவ ராசிகளின் தலைகள் சிதறுண்டு விழும்படியாக சண்டை செய்த வேலாயுதத்தை உடையவனே, முத்திப் பரமத்தைக் கருதிய சித்தத்தினில் முற்றத் தவ முனி முற்பட்டு உழை பெற்றுத் தரு குற மகள் மேல் மால் முற்றத் திரி வெற்றிக் குருபர ... முக்தி என்னும் மேலான பொருளைப் பெற நினைத்த உள்ளத்தோடு, முதிர்ந்த தவ நிலையில் இருந்த சிவ முனிவரின் (உருவில் வந்த திருமாலின்) முன்னிலையில் நின்று லக்ஷ்மியாகிய பெண் மான் பெற்றுத் தந்த குற மகளாகிய வள்ளியின் மேல் ஆசை நிரம்பக் கொண்டு, (வள்ளி இருந்த தினைப் புனத்தில்) திரிந்த வெற்றி வீரனாகிய குரு மூர்த்தியே, முற்பட்ட முரட்டுப் புலவனை முட்டைப் பெயர் செப்பிக் கவி பெறு பெருமாளே. ... எதிர்ப்பட்ட பிடிவாதம் பிடித்த பொய்யாமொழி என்னும் புலவனை முட்டை என்ற பெயர் என்று சொல்லி, அந்தப் புலவனைத் தம் மீது பாடவைத்த பெருமாளே.