பூசல் தரும் கயலும் பொருந்திய வாச நறும் குழலும் துலங்கிய பூரண கும்பம் எனும் தனங்களும் மட மாதர்
போகம் அடங்கலையும் புணர்ந்து அநுராகம் விளைந்து வரும் பெரும் பிழை போய் அகலும்படி ஒன்றை அன்புற நினையாதே
ஆசை எனும்படியும் தனங்களும் ஓகை நடந்திடவும் தினங்களும் ஆருடனும் பகை கொண்டு நின்று உற நடமாடி ஆடிய பம்பர(ம்) முன் சுழன்று
எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற ஆவி அகன்று விடும் பயம் கெட அருள்வாயே
வாசவன் அன்பு விளங்க நின்ற அசுரேசர் குலங்கள் அடங்கலும் கெட வானவர் நின்று தியங்குகின்றது ஒர் குறை தீர வாரி அதிர்ந்து பயந்து நின்றிட
மேரு அடங்க இடிந்து சென்றிட வாகை புனைந்து ஒரு வென்றி கொண்டு அருள் இளையோனே
வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக முயங்க அநங்கனும் பொர வேடை எனும்படி சிந்தை நொந்திட
அடைவாக வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன வேலின் உ(ள்)ளங்கள் கலங்கி இன்புற வேளை எனும்படி சென்று இறைஞ்சிய பெருமாளே.
சண்டை செய்யும் கயல் மீன் போன்ற கண்களையும், பொருந்தியுள்ள நறு மணம் வீசும் கூந்தலையும், விளக்கமுறும் பூரண குடம் என்று சொல்லத்தக்க மார்பகங்களும் கொண்ட இளம் பெண்களின் காம சுகம் முழுமையும் அனுபவித்து ஆசைநிரம்பி வர, அதனால் ஏற்படும் பெரும் பிழைகள் நீங்கிப் போகுமாறு, அந்த ஒப்பற்ற பரம் பொருளை அன்புடன் நினைக்காமல், ஆசை எப்படி எப்படி போகின்றதோ அப்படி அப்படியே என்னுடைய செல்வமும் மகிழ்ச்சியும் செல்லவும், எல்லாருடனும் பகைமை பூண்டு நிற்கும்படி இவ்வுலகில் உலவி, சுற்றுகின்ற பம்பரம்போலச் சுழன்று, எதிரே ஓடி விழுதலைக் காண்பது போன்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பட, அதாவது உயிர் உடலை விட்டு நீங்கும் (இறப்பு என்னும்) பயம் ஒழிய அருள் புரிவாயாக. இந்திரனுடைய அன்பு விளக்கம் உற, இருந்த அசுரர் தலைவர்களுடைய கூட்டங்கள் எல்லாம் அழிபட, தேவர்கள் நின்று கலக்கம் கொண்டிருந்த அந்த ஒரு பெரிய குறை நீங்க, கடல் அதிர்ச்சியும் அச்சமும் உற்று நிற்க, மேரு மலை முழுவதும் இடிந்து போக, வெற்றி மாலையை அணிந்து ஒப்பற்ற வெற்றியைக் கொண்டருளிய இளையவனே, வீசிய தென்றலுடன் மாலைப் பொழுதும் பகைமை காட்டும்படியாக அமைய, மன்மதனும் சண்டை செய்ய, காம நோய் என்னும்படியாக மனம் நொந்து வருந்த, அதற்கு ஏற்ப, வேடர்களின் செழிப்பான தினைப் புனத்தில் இருந்த வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் மை பூசப்பட்ட வேல் போன்ற கண்ணால் இருவர் மனங்களும் கலங்கி, இன்பம் பெற வேண்டி இதுதான் தக்க சமயம் என்ற குறிப்புடன் வள்ளியிடம் சென்று வணங்கிய பெருமாளே.
பூசல் தரும் கயலும் பொருந்திய வாச நறும் குழலும் துலங்கிய பூரண கும்பம் எனும் தனங்களும் மட மாதர் ... சண்டை செய்யும் கயல் மீன் போன்ற கண்களையும், பொருந்தியுள்ள நறு மணம் வீசும் கூந்தலையும், விளக்கமுறும் பூரண குடம் என்று சொல்லத்தக்க மார்பகங்களும் கொண்ட இளம் பெண்களின் போகம் அடங்கலையும் புணர்ந்து அநுராகம் விளைந்து வரும் பெரும் பிழை போய் அகலும்படி ஒன்றை அன்புற நினையாதே ... காம சுகம் முழுமையும் அனுபவித்து ஆசைநிரம்பி வர, அதனால் ஏற்படும் பெரும் பிழைகள் நீங்கிப் போகுமாறு, அந்த ஒப்பற்ற பரம் பொருளை அன்புடன் நினைக்காமல், ஆசை எனும்படியும் தனங்களும் ஓகை நடந்திடவும் தினங்களும் ஆருடனும் பகை கொண்டு நின்று உற நடமாடி ஆடிய பம்பர(ம்) முன் சுழன்று ... ஆசை எப்படி எப்படி போகின்றதோ அப்படி அப்படியே என்னுடைய செல்வமும் மகிழ்ச்சியும் செல்லவும், எல்லாருடனும் பகைமை பூண்டு நிற்கும்படி இவ்வுலகில் உலவி, சுற்றுகின்ற பம்பரம்போலச் சுழன்று, எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற ஆவி அகன்று விடும் பயம் கெட அருள்வாயே ... எதிரே ஓடி விழுதலைக் காண்பது போன்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பட, அதாவது உயிர் உடலை விட்டு நீங்கும் (இறப்பு என்னும்) பயம் ஒழிய அருள் புரிவாயாக. வாசவன் அன்பு விளங்க நின்ற அசுரேசர் குலங்கள் அடங்கலும் கெட வானவர் நின்று தியங்குகின்றது ஒர் குறை தீர வாரி அதிர்ந்து பயந்து நின்றிட ... இந்திரனுடைய அன்பு விளக்கம் உற, இருந்த அசுரர் தலைவர்களுடைய கூட்டங்கள் எல்லாம் அழிபட, தேவர்கள் நின்று கலக்கம் கொண்டிருந்த அந்த ஒரு பெரிய குறை நீங்க, கடல் அதிர்ச்சியும் அச்சமும் உற்று நிற்க, மேரு அடங்க இடிந்து சென்றிட வாகை புனைந்து ஒரு வென்றி கொண்டு அருள் இளையோனே ... மேரு மலை முழுவதும் இடிந்து போக, வெற்றி மாலையை அணிந்து ஒப்பற்ற வெற்றியைக் கொண்டருளிய இளையவனே, வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக முயங்க அநங்கனும் பொர வேடை எனும்படி சிந்தை நொந்திட ... வீசிய தென்றலுடன் மாலைப் பொழுதும் பகைமை காட்டும்படியாக அமைய, மன்மதனும் சண்டை செய்ய, காம நோய் என்னும்படியாக மனம் நொந்து வருந்த, அடைவாக வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன வேலின் உ(ள்)ளங்கள் கலங்கி இன்புற வேளை எனும்படி சென்று இறைஞ்சிய பெருமாளே. ... அதற்கு ஏற்ப, வேடர்களின் செழிப்பான தினைப் புனத்தில் இருந்த வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் மை பூசப்பட்ட வேல் போன்ற கண்ணால் இருவர் மனங்களும் கலங்கி, இன்பம் பெற வேண்டி இதுதான் தக்க சமயம் என்ற குறிப்புடன் வள்ளியிடம் சென்று வணங்கிய பெருமாளே.