பூசல் வந்து இரு தோடு ஆர் காதொடு மோதிடும் கயல் மானார் மானம் இல் போக மங்கையர் கோடா கோடிய மனது ஆனார்
பூர குங்கும தூள் ஆமோத படீர சண்பக மாலால் லாளித(ம்) பூதரங்களின் மீதே மூழ்கிய அநுராக ஆசை என்கிற பாராவாரமும் ஏறுகின்றிலன்
நானா பேத அநேக தந்த்ர க்ரியா வேத ஆகம கலை ஆய ஆழியும் கரை காணேன் நூபுர பாத பங்கயம் ஓதேன் நேசிலன்
ஆயினும் குரு நாதா நீ அருள் புரிவாயே
வாசவன் பதி பாழாகாமல் நிசாசரன் குலம் வாழாதே அடி மாள வன் கிரி கூறாய்
நீறு எழு நெடு நேமி மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோ கோ என மா முறிந்திட நீள் வேல் ஏவிய இளையோனே
வீசு தென்றலும் வேள் பூ வாளியும் மீறுகின்றமை ஆமோ காம விடாய் கெடும்படி காவாய் ஆவியை என
ஏனல் மீது சென்று உறவாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால் கொடு வேடை கொண்ட பிரானே வானவர் பெருமாளே.
சண்டைக்கு எழுந்தது என்று சொல்லும்படி இரண்டு தோடுகள் அணிந்த காதுகளுடன் மோதுகின்ற கயல் மீன் போன்ற கண்களை உடைய மாதர்கள் மானமே இல்லாமல் (உடலால்) போகம் கொடுக்கும் வேசிகள். கோடிக் கணக்கான மனத்தைக் கொண்டவர்கள். பச்சைக் கற்பூரம், குங்குமம் இவைகளின் பொடி, மிக்க மகிழ்ச்சி தரும் சந்தனம், சண்பகம் இவைகள் கொண்டு மோகத்தால அழகு செய்யப்பட்ட மலை போன்ற மார்பகங்களின் மேலே முழுகிய காமப் பற்று என்னும் ஆசையாகிய கடலைத் தாண்டி கரை ஏறாதவன் நான். பலவிதப்பட்ட அனேகமான சாஸ்திர மந்திரங்களைக் கூறும் வேத ஆகம கலைகளாகிய கடலின் கரையையும் காணாதவன். உனது சிலம்பணிந்த தாமரைத் திருவடிகள் ஓதிப் போற்றுகின்றேன் இல்லை. அன்பு சிறிதும் இல்லாதவன். இருந்த போதிலும் குரு நாதனே, நீ அருள் புரிவாயாக. இந்திரனுடைய தலைநகர் (அமராவதி) பாழாகாதபடியும், அசுரர்கள் கூட்டம் வாழாமல் அடியோடு மாண்டு போகவும், வலிமை வாய்ந்த கிரவுஞ்ச மலை இரண்டாய் பிளவுபடவும், நீண்ட சக்ரவாள கிரி பொடிபடவும், திருமால் பெற்ற பிரமனும் அலைகள் வீசும் தெளிந்த கடலும் கோகோகோ என்று அஞ்சி அரற்றவும், (சூரனாகிய) மாமரம் முறிந்திடவும், நீண்ட வேலாயுதத்தைச் செலுத்திய இளையவனே, வீசுகின்ற தென்றல் காற்றும் மன்மத வேளின் மலர்ப் பாணங்களும் என் பொறுமைக்கு அப்பாற்பட்டு வாட்டுதல் நன்றோ? இந்தக் காம தாகம் ஒழியும்படி என்னுடைய ஆவியைக் காத்தருள்க என்று கூறிக்கொண்டு, தினைப் புனம் உள்ள அந்த இடத்துக்குச் சென்று (வள்ளியுடன்) உறவாடி, வேடர்கள் மகளாகிய அவளது மார்பின் மேல் மோகம் பூண்டு விருப்பம் கொண்டவனே, தேவர்களின் பெருமாளே.
பூசல் வந்து இரு தோடு ஆர் காதொடு மோதிடும் கயல் மானார் மானம் இல் போக மங்கையர் கோடா கோடிய மனது ஆனார் ... சண்டைக்கு எழுந்தது என்று சொல்லும்படி இரண்டு தோடுகள் அணிந்த காதுகளுடன் மோதுகின்ற கயல் மீன் போன்ற கண்களை உடைய மாதர்கள் மானமே இல்லாமல் (உடலால்) போகம் கொடுக்கும் வேசிகள். கோடிக் கணக்கான மனத்தைக் கொண்டவர்கள். பூர குங்கும தூள் ஆமோத படீர சண்பக மாலால் லாளித(ம்) பூதரங்களின் மீதே மூழ்கிய அநுராக ஆசை என்கிற பாராவாரமும் ஏறுகின்றிலன் ... பச்சைக் கற்பூரம், குங்குமம் இவைகளின் பொடி, மிக்க மகிழ்ச்சி தரும் சந்தனம், சண்பகம் இவைகள் கொண்டு மோகத்தால அழகு செய்யப்பட்ட மலை போன்ற மார்பகங்களின் மேலே முழுகிய காமப் பற்று என்னும் ஆசையாகிய கடலைத் தாண்டி கரை ஏறாதவன் நான். நானா பேத அநேக தந்த்ர க்ரியா வேத ஆகம கலை ஆய ஆழியும் கரை காணேன் நூபுர பாத பங்கயம் ஓதேன் நேசிலன் ... பலவிதப்பட்ட அனேகமான சாஸ்திர மந்திரங்களைக் கூறும் வேத ஆகம கலைகளாகிய கடலின் கரையையும் காணாதவன். உனது சிலம்பணிந்த தாமரைத் திருவடிகள் ஓதிப் போற்றுகின்றேன் இல்லை. அன்பு சிறிதும் இல்லாதவன். ஆயினும் குரு நாதா நீ அருள் புரிவாயே ... இருந்த போதிலும் குரு நாதனே, நீ அருள் புரிவாயாக. வாசவன் பதி பாழாகாமல் நிசாசரன் குலம் வாழாதே அடி மாள வன் கிரி கூறாய் ... இந்திரனுடைய தலைநகர் (அமராவதி) பாழாகாதபடியும், அசுரர்கள் கூட்டம் வாழாமல் அடியோடு மாண்டு போகவும், வலிமை வாய்ந்த கிரவுஞ்ச மலை இரண்டாய் பிளவுபடவும், நீறு எழு நெடு நேமி மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோ கோ என மா முறிந்திட நீள் வேல் ஏவிய இளையோனே ... நீண்ட சக்ரவாள கிரி பொடிபடவும், திருமால் பெற்ற பிரமனும் அலைகள் வீசும் தெளிந்த கடலும் கோகோகோ என்று அஞ்சி அரற்றவும், (சூரனாகிய) மாமரம் முறிந்திடவும், நீண்ட வேலாயுதத்தைச் செலுத்திய இளையவனே, வீசு தென்றலும் வேள் பூ வாளியும் மீறுகின்றமை ஆமோ காம விடாய் கெடும்படி காவாய் ஆவியை என ... வீசுகின்ற தென்றல் காற்றும் மன்மத வேளின் மலர்ப் பாணங்களும் என் பொறுமைக்கு அப்பாற்பட்டு வாட்டுதல் நன்றோ? இந்தக் காம தாகம் ஒழியும்படி என்னுடைய ஆவியைக் காத்தருள்க என்று கூறிக்கொண்டு, ஏனல் மீது சென்று உறவாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால் கொடு வேடை கொண்ட பிரானே வானவர் பெருமாளே. ... தினைப் புனம் உள்ள அந்த இடத்துக்குச் சென்று (வள்ளியுடன்) உறவாடி, வேடர்கள் மகளாகிய அவளது மார்பின் மேல் மோகம் பூண்டு விருப்பம் கொண்டவனே, தேவர்களின் பெருமாளே.