பொங்கும் கொடிய கூற்றனும் நஞ்சும் பொதுவில் நோக்கிய
பொங்கும் புதிய நேத்திர வலை வீசி
பொன்கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு
உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர
கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி
கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண குன்றம் கதிரை
பூப் பரம் முன் துன்று அமரர் போற்றிய குன்றம்
பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே
எங்கும் பகரமாயக் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு
வேட்டுவர் சரண் ஆர விந்தம் பணிய வாய்த்து அருள்
அம் தண் புவன(ம்) நோற்பவை
மென் குங்கும குயாத்திரி பிரியாதே
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை
என்றென்றும் அவசமாயத் தொழுது என்றும் புதிய கூட்டமொடு
என்றும் பொழுது போக்கிய பெருமாளே.
சீறி எழும் பொல்லாத யமனையும் விஷத்தையும் (தம் இரு கண்களிலும் கொண்டு) வித்தியாசம் இன்றி யாரிடத்தும் விருப்பத்துடன் பார்க்கும், ஆசை பொங்கும் புதுமை வாய்ந்த கண்ணாகிய வலையை எறிந்து, பொற்காசுகளைப் பார்த்து மன நெகிழ்ச்சி கொள்ளும் நடனமாடும் கணிகையரின் துன்பத்தைத் தரும் புணர்ச்சியை விரும்பி, உயிர் புண்பட்டு மனம் உருகி அந்த விலைமாதர்களுக்கு ஆளாகின்ற காம மயக்கம் ஒழிய, கொங்கு நாட்டில் உள்ள பாம்பு மலையாகிய திருச் செங்கோட்டையும், (தரிசித்தோர்களின்) பாவங்களைப் போக்கும் ஆய்க்குடி என்னும் தலத்தையும், வாசனையுடன் தினமும் நீலோற்பல மலர் பூக்கின்ற திருத்தணிகை மலையையும், சோணாசலம் என்ற திருவண்ணாமலையையும், கதிர்காமத்தையும், அழகிய பரம் என்னும் சொல் முன்னே வருகின்றதும், தேவர்கள் போற்றுவதுமான திருப்பரங்குன்றத்தையும், பிற தலங்களையும் போற்றி வாழ்த்தக்கூடிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? எவ்விடத்தும் ஒளிர்வதும், வல்லமை மேம்பட்டு விளங்கும் அம்புகளையும், கட்டப்பட்டுள்ள கொடிய வில்லையும் கொண்ட வேடர்கள் (உனது) திருவடிகளை வணங்க, உனது அருள் வாய்த்த காரணத்தால், அழகிய குளிர்ந்த இவ்வுலகு செய்த தவப் பயனாய் உதித்த மென்மையான குங்குமம் பூசிய மார்பகங்களாகிய மலைகளை உடையவளும், எல்லாவிடத்தும் கான்யாறு பாய்ந்து ஒலித்து எழவும், எங்கும் வேதங்களின் ஒலி பெருகவும் (விளங்கிய வள்ளிமலைத் தினைப் புனத்தில்) குருவிகளைக் கவண் கல்லைக் கட்டி ஓட்டிய அழகிய மான் போன்றவளுமான வள்ளியை, நீ திரு என்றும், மான் என்றும் தன் வசம் இழந்து வணங்க, நாள்தோறும் புதிதாகச் சந்திப்பது போன்ற மகிழ்ச்சியோடு தினமும் உல்லாசமாகக் காலம் கழித்த பெருமாளே.
பொங்கும் கொடிய கூற்றனும் நஞ்சும் பொதுவில் நோக்கிய ... சீறி எழும் பொல்லாத யமனையும் விஷத்தையும் (தம் இரு கண்களிலும் கொண்டு) வித்தியாசம் இன்றி யாரிடத்தும் விருப்பத்துடன் பார்க்கும், பொங்கும் புதிய நேத்திர வலை வீசி ... ஆசை பொங்கும் புதுமை வாய்ந்த கண்ணாகிய வலையை எறிந்து, பொன்கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு ... பொற்காசுகளைப் பார்த்து மன நெகிழ்ச்சி கொள்ளும் நடனமாடும் கணிகையரின் துன்பத்தைத் தரும் புணர்ச்சியை விரும்பி, உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர ... உயிர் புண்பட்டு மனம் உருகி அந்த விலைமாதர்களுக்கு ஆளாகின்ற காம மயக்கம் ஒழிய, கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி ... கொங்கு நாட்டில் உள்ள பாம்பு மலையாகிய திருச் செங்கோட்டையும், (தரிசித்தோர்களின்) பாவங்களைப் போக்கும் ஆய்க்குடி என்னும் தலத்தையும், கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண குன்றம் கதிரை ... வாசனையுடன் தினமும் நீலோற்பல மலர் பூக்கின்ற திருத்தணிகை மலையையும், சோணாசலம் என்ற திருவண்ணாமலையையும், கதிர்காமத்தையும், பூப் பரம் முன் துன்று அமரர் போற்றிய குன்றம் ... அழகிய பரம் என்னும் சொல் முன்னே வருகின்றதும், தேவர்கள் போற்றுவதுமான திருப்பரங்குன்றத்தையும், பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே ... பிற தலங்களையும் போற்றி வாழ்த்தக்கூடிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? எங்கும் பகரமாயக் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு ... எவ்விடத்தும் ஒளிர்வதும், வல்லமை மேம்பட்டு விளங்கும் அம்புகளையும், கட்டப்பட்டுள்ள கொடிய வில்லையும் கொண்ட வேட்டுவர் சரண் ஆர விந்தம் பணிய வாய்த்து அருள் ... வேடர்கள் (உனது) திருவடிகளை வணங்க, உனது அருள் வாய்த்த காரணத்தால், அம் தண் புவன(ம்) நோற்பவை ... அழகிய குளிர்ந்த இவ்வுலகு செய்த தவப் பயனாய் உதித்த மென் குங்கும குயாத்திரி பிரியாதே ... மென்மையான குங்குமம் பூசிய மார்பகங்களாகிய மலைகளை உடையவளும், எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை ... எல்லாவிடத்தும் கான்யாறு பாய்ந்து ஒலித்து எழவும், எங்கும் வேதங்களின் ஒலி பெருகவும் (விளங்கிய வள்ளிமலைத் தினைப் புனத்தில்) குருவிகளைக் கவண் கல்லைக் கட்டி ஓட்டிய அழகிய மான் போன்றவளுமான வள்ளியை, என்றென்றும் அவசமாயத் தொழுது என்றும் புதிய கூட்டமொடு ... நீ திரு என்றும், மான் என்றும் தன் வசம் இழந்து வணங்க, நாள்தோறும் புதிதாகச் சந்திப்பது போன்ற மகிழ்ச்சியோடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே. ... தினமும் உல்லாசமாகக் காலம் கழித்த பெருமாளே.