மதன தனு நிகர் இடைக்கே மனம் உருக வரு பிடி நடைக்கே இரு வனச பரிபுர மலர்க்கே
மதுகரம் வாழும் வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அ(ன்)ன குழைக்கே மட மகளிர் முகுளித முலைக்கே
கடல் அமுது ஊறும் அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவும் அளவிய விழிக்கே தளவு அனையது ஒரு சிறு நகைக்கே
பனி மதி போலும் அழகு திகழ் தரு நுதற்கே அநவரதம் அவயவம் அனைத்தூடினும் அவசம் உறும் மயல் தவிர்த்து ஆள்வதும் ஒரு நாளே
உததி புதைபட அடைத்து ஆதவன் நிகர் இல் இரதமும் விடுக்கா நகர் ஒரு நொடியில் வெயில் எழச் சாநகி துயர் தீர
உபய ஒரு பது வரைத் தோள்களு(ம்) நிசிசரர்கள் பதி தச க்ரீவமும் உருள ஒரு கணை தெரித்தானு(ம்)
மவுன ஞான திதம் இல் அவுணர் தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர திலத(ம்) குலகிரி வளைத்தானும் மகிழ
வானோர் திருவ நகர் குடி புக சீகர(ம்) மகர(ம்) சலம் முறை இடச் சூரொடு சிகர கிரி பொடிபடச் சாடிய பெருமாளே.
மன்மதனுடைய உடலுக்கு ஒப்பான (உருவம் இல்லாத) இடுப்பின் மீதும், மனம் உருகும்படியாக வருகின்ற பெண் யானையின் நடையின் மீதும், இரண்டு தாமரை மலர் போன்ற, சிலம்பு அணிந்த மலரடிகள் மீதும், வண்டுகள் வாழ்கின்றதும் மகிழம் பூவும் கஸ்தூரியும் அணிந்துள்ளதுமான, மேகம் போன்ற நீண்ட கூந்தலின் மீதும், ரத்தினங்கள் பதித்த மகர மீன் போன்ற குண்டல அணியின் மீதும், இள மகளிர்களின் மலர் மொட்டுப் போலக் குவிந்துள்ள மார்பகத்தின் மீதும், பாற்கடல் அமுது போல் இனித்து ஊறும் வாயிதழ் ஊறலின் மீதும், இனிய பேச்சின் மீதும், குண்டலங்கள் வரைக்கும் நீண்டுள்ள கண்களின் மீதும், முல்லை மலர் போன்ற ஒப்பற்ற புன்னகையின் மீதும், குளிர்ந்த பிறைச் சந்திரன் போன்று அழகு விளங்கும் நெற்றியின் மீதும், எப்போதும் இவ்வாறு எல்லா அவயவங்களின் மீதும் மயக்கம் கொள்ளும் காமப் பித்தை ஒழித்து, என்னை நீ ஆட்கொள்ளுவதும் ஆகிய ஒரு நாள் கிட்டுமோ? கடல் புதைபடும்படி அடைத்து, சூரியனுடைய ஒப்பற்ற தேரும் வரக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்த நகரமாகிய இலங்கையில், ஒரு நொடிப் பொழுதில் சூரியன் ஒளி வரும்படிச் செய்து, சீதையின் துயரம் தீரும்படி, இருபது மலை போன்ற தோள்களும், அரக்கர்களுடைய தலைவனாகிய ராவணனுடைய பத்து கழுத்தும் உருண்டு மாண்டு விழ ஒப்பற்ற அம்பை விட்டவனாகிய (ராமனாகிய) திருமாலும், மவுன ஞான, நிலை இல்லாத அவுணர்களுடைய இருப்பிடமாயிருந்த திரிபுரங்களும் எரிபட்டு அழியும்படி, மலைகளுள் முதன்மை வாய்ந்ததும், நெற்றித் திலகம் போல சிறப்பான மேரு மலையை (வில்லாக) வளைத்த சிவபெருமானும் மகிழ்ச்சி கொள்ளும்படியும், தேவர்கள் செல்வம் நிறைந்த பொன்னுலகுக்கு குடி போகும்படியும், அலைகளும், மகர மீன்களும் கொண்ட கடல் முறையிட்டு ஓலமிடும்படியும், சூரனுடன், உச்சிகளை உடைய எழு கிரிகளும் பொடிபட்டு அழிய வேல் கொண்டு மோதிய பெருமாளே.
மதன தனு நிகர் இடைக்கே மனம் உருக வரு பிடி நடைக்கே இரு வனச பரிபுர மலர்க்கே ... மன்மதனுடைய உடலுக்கு ஒப்பான (உருவம் இல்லாத) இடுப்பின் மீதும், மனம் உருகும்படியாக வருகின்ற பெண் யானையின் நடையின் மீதும், இரண்டு தாமரை மலர் போன்ற, சிலம்பு அணிந்த மலரடிகள் மீதும், மதுகரம் வாழும் வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அ(ன்)ன குழைக்கே மட மகளிர் முகுளித முலைக்கே ... வண்டுகள் வாழ்கின்றதும் மகிழம் பூவும் கஸ்தூரியும் அணிந்துள்ளதுமான, மேகம் போன்ற நீண்ட கூந்தலின் மீதும், ரத்தினங்கள் பதித்த மகர மீன் போன்ற குண்டல அணியின் மீதும், இள மகளிர்களின் மலர் மொட்டுப் போலக் குவிந்துள்ள மார்பகத்தின் மீதும், கடல் அமுது ஊறும் அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவும் அளவிய விழிக்கே தளவு அனையது ஒரு சிறு நகைக்கே ... பாற்கடல் அமுது போல் இனித்து ஊறும் வாயிதழ் ஊறலின் மீதும், இனிய பேச்சின் மீதும், குண்டலங்கள் வரைக்கும் நீண்டுள்ள கண்களின் மீதும், முல்லை மலர் போன்ற ஒப்பற்ற புன்னகையின் மீதும், பனி மதி போலும் அழகு திகழ் தரு நுதற்கே அநவரதம் அவயவம் அனைத்தூடினும் அவசம் உறும் மயல் தவிர்த்து ஆள்வதும் ஒரு நாளே ... குளிர்ந்த பிறைச் சந்திரன் போன்று அழகு விளங்கும் நெற்றியின் மீதும், எப்போதும் இவ்வாறு எல்லா அவயவங்களின் மீதும் மயக்கம் கொள்ளும் காமப் பித்தை ஒழித்து, என்னை நீ ஆட்கொள்ளுவதும் ஆகிய ஒரு நாள் கிட்டுமோ? உததி புதைபட அடைத்து ஆதவன் நிகர் இல் இரதமும் விடுக்கா நகர் ஒரு நொடியில் வெயில் எழச் சாநகி துயர் தீர ... கடல் புதைபடும்படி அடைத்து, சூரியனுடைய ஒப்பற்ற தேரும் வரக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்த நகரமாகிய இலங்கையில், ஒரு நொடிப் பொழுதில் சூரியன் ஒளி வரும்படிச் செய்து, சீதையின் துயரம் தீரும்படி, உபய ஒரு பது வரைத் தோள்களு(ம்) நிசிசரர்கள் பதி தச க்ரீவமும் உருள ஒரு கணை தெரித்தானு(ம்) ... இருபது மலை போன்ற தோள்களும், அரக்கர்களுடைய தலைவனாகிய ராவணனுடைய பத்து கழுத்தும் உருண்டு மாண்டு விழ ஒப்பற்ற அம்பை விட்டவனாகிய (ராமனாகிய) திருமாலும், மவுன ஞான திதம் இல் அவுணர் தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர திலத(ம்) குலகிரி வளைத்தானும் மகிழ ... மவுன ஞான, நிலை இல்லாத அவுணர்களுடைய இருப்பிடமாயிருந்த திரிபுரங்களும் எரிபட்டு அழியும்படி, மலைகளுள் முதன்மை வாய்ந்ததும், நெற்றித் திலகம் போல சிறப்பான மேரு மலையை (வில்லாக) வளைத்த சிவபெருமானும் மகிழ்ச்சி கொள்ளும்படியும், வானோர் திருவ நகர் குடி புக சீகர(ம்) மகர(ம்) சலம் முறை இடச் சூரொடு சிகர கிரி பொடிபடச் சாடிய பெருமாளே. ... தேவர்கள் செல்வம் நிறைந்த பொன்னுலகுக்கு குடி போகும்படியும், அலைகளும், மகர மீன்களும் கொண்ட கடல் முறையிட்டு ஓலமிடும்படியும், சூரனுடன், உச்சிகளை உடைய எழு கிரிகளும் பொடிபட்டு அழிய வேல் கொண்டு மோதிய பெருமாளே.