மதன் ஏவிய கணையால் இரு வினையால்
புவி கடல் சாரமும் வடிவாய் உடல்
நடமாடுக முடியாதேன்
மன மாயையோடு இரு காழ் வினை அற
மூதுடை மலம் வேர் அற
மகிழ் ஞானக அநுபூதியின் அருள் மேவி
பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக
அடியேன் மு(ன்)னெ பரிபூரண கிருபாகரம் உடன்
ஞானப்பரி மேல் அழகுடன் ஏறி
வி(ண்)ணவர் பூ மழை அடி மேல் விட
பல கோடி வெண் மதி போலவெ வருவாயே
சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா
முழு சசி சூரியர் சுடராம் என
ஒரு கோடி சடை மா முடி முநிவோர் சரண் என
வேதியர் மறை ஓதுக
சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா
விதி ஆனவன் இளையாள் எனது உ(ள்)ளம் மேவிய வ(ள்)ளி நாயகி
வெகு மால் உற தனம் மேல் அணை முருகோனே
வெளி ஆசையோடு அடை பூவணர் மருகா
மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா
தமிழ் பெருமாளே.
மன்மதன் செலுத்திய மலர் அம்புகளால் பட்டும், நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளால் பட்டும், மண், நீர் முதலிய பஞ்ச பூதங்களின் இயக்கங்களில் பட்டும் வடிவமான இந்த உடலுடன், இந்த உலகில் நடமாட முடியாதவனாகிய நான் மனத்திலுள்ள மாயையும், நல்வினை தீவினை என்ற இரு முற்றிய வினைகளும் ஒழிய, பழமையாக வரும் ஆணவம் என்ற மலம் வேரோடு அற்று வீழ, மகிழத்தக்க, உள்ளத்தில் விளங்கும், அனுபவ ஞானம் ஆகிய அருளை அடைந்து, உன் திருவடியை அடைந்த அடியார்களுடன் நானும் சேர்ந்து விளையாட, அடியேன் எதிரில் நிறைந்த கருணையுடன் ஞானம் என்னும் குதிரையாகிய மயில் மீது அழகுடன் ஏறி, தேவர்கள் பூமாரியை உன் திருவடிகளின் மேல் பொழிய பல கோடிக்கணக்கான வெண்ணிலவின் ஒளி வீச நீ வருவாயாக. நூறு கோடி வெண்ணிற மாதர்கள் கடல் அலைகளைப் போல் சாமரங்கள் வீச, பூரண சந்திரனும், சூரியனும் தீப ஒளியாய்ச் சுடர் வீச, ஒரு கோடிக்கணக்கான, சடைமுடி தாங்கிய முநிவர்கள் சரணம் என்று வணங்க, வேதியர்கள் வேதங்களை ஓதிட, தாளத்துடன் கூடிய நடனத்தை ஆடிய ஜடாமுடி தாங்கும் (நடராஜராம்) சிவபெருமான் அருளிய குழந்தையே, உயிர்களுக்கு எல்லாம் ஆயுளை விதிக்கும் பிரமனின் தங்கை, என் உள்ளத்தில் வீற்றிருக்கும் வள்ளிநாயகி மிக்க ஆசைப்படும்படி அவளின் மார்பினை அணைந்த முருகனே, ஆகாயம், திசைகள் எல்லாம் நிறைந்துள்ள, காயாம்பூ போன்ற நீலவண்ணத்து திருமாலின் மருகனே, ரத்தினம், செம்மை முதிர்ந்த பொன் ஆகியவற்றின் ஒளி கலந்து வீசுகின்ற அழகனே, தமிழர்களின் பெருமாளே.
மதன் ஏவிய கணையால் இரு வினையால் ... மன்மதன் செலுத்திய மலர் அம்புகளால் பட்டும், நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளால் பட்டும், புவி கடல் சாரமும் வடிவாய் உடல் ... மண், நீர் முதலிய பஞ்ச பூதங்களின் இயக்கங்களில் பட்டும் வடிவமான இந்த உடலுடன், நடமாடுக முடியாதேன் ... இந்த உலகில் நடமாட முடியாதவனாகிய நான் மன மாயையோடு இரு காழ் வினை அற ... மனத்திலுள்ள மாயையும், நல்வினை தீவினை என்ற இரு முற்றிய வினைகளும் ஒழிய, மூதுடை மலம் வேர் அற ... பழமையாக வரும் ஆணவம் என்ற மலம் வேரோடு அற்று வீழ, மகிழ் ஞானக அநுபூதியின் அருள் மேவி ... மகிழத்தக்க, உள்ளத்தில் விளங்கும், அனுபவ ஞானம் ஆகிய அருளை அடைந்து, பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக ... உன் திருவடியை அடைந்த அடியார்களுடன் நானும் சேர்ந்து விளையாட, அடியேன் மு(ன்)னெ பரிபூரண கிருபாகரம் உடன் ... அடியேன் எதிரில் நிறைந்த கருணையுடன் ஞானப்பரி மேல் அழகுடன் ஏறி ... ஞானம் என்னும் குதிரையாகிய மயில் மீது அழகுடன் ஏறி, வி(ண்)ணவர் பூ மழை அடி மேல் விட ... தேவர்கள் பூமாரியை உன் திருவடிகளின் மேல் பொழிய பல கோடி வெண் மதி போலவெ வருவாயே ... பல கோடிக்கணக்கான வெண்ணிலவின் ஒளி வீச நீ வருவாயாக. சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா ... நூறு கோடி வெண்ணிற மாதர்கள் கடல் அலைகளைப் போல் சாமரங்கள் வீச, முழு சசி சூரியர் சுடராம் என ... பூரண சந்திரனும், சூரியனும் தீப ஒளியாய்ச் சுடர் வீச, ஒரு கோடி சடை மா முடி முநிவோர் சரண் என ... ஒரு கோடிக்கணக்கான, சடைமுடி தாங்கிய முநிவர்கள் சரணம் என்று வணங்க, வேதியர் மறை ஓதுக ... வேதியர்கள் வேதங்களை ஓதிட, சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா ... தாளத்துடன் கூடிய நடனத்தை ஆடிய ஜடாமுடி தாங்கும் (நடராஜராம்) சிவபெருமான் அருளிய குழந்தையே, விதி ஆனவன் இளையாள் எனது உ(ள்)ளம் மேவிய வ(ள்)ளி நாயகி ... உயிர்களுக்கு எல்லாம் ஆயுளை விதிக்கும் பிரமனின் தங்கை, என் உள்ளத்தில் வீற்றிருக்கும் வள்ளிநாயகி வெகு மால் உற தனம் மேல் அணை முருகோனே ... மிக்க ஆசைப்படும்படி அவளின் மார்பினை அணைந்த முருகனே, வெளி ஆசையோடு அடை பூவணர் மருகா ... ஆகாயம், திசைகள் எல்லாம் நிறைந்துள்ள, காயாம்பூ போன்ற நீலவண்ணத்து திருமாலின் மருகனே, மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா ... ரத்தினம், செம்மை முதிர்ந்த பொன் ஆகியவற்றின் ஒளி கலந்து வீசுகின்ற அழகனே, தமிழ் பெருமாளே. ... தமிழர்களின் பெருமாளே.