மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும்
வாரி துயிலா அதற்கும் வசையே சொல் மாய மடவார் தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும்
வாயும் இள வாடையிற்கும் அதனாலே வேறுபடி பாயலுக்குமே
எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே
வேடர் குல மாதினுக்கும் வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும்
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறு முகனே குறத்தி மணவாளா
ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி ஆலும் மயில் ஏறி நிற்கும் இளையோனே
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா
சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர் சிறை மீள விட்ட பெருமாளே.
பகைமையுடன் சண்டை செய்யும் யமனை நிகர்த்து ஆகாயத்தில் எழுகின்ற அழகிய சந்திரனுக்கும், கடல் தூக்கம் கொள்ளாது (அலை ஒலித்துக் கொண்டே) இருக்கும் அந்த நிலைக்கும், வசை மொழிகளையே பேசிக் கொண்டிருக்கும் வஞ்சனை கொண்டுள்ள மாதர்களுக்கும், இடையர் குழல் ஊதும் இசைக்கும், வாய்ந்துள்ள இளம் வாடைக் காற்றுக்கும், அதனாலே படுக்கை வேறுபடுவதற்கும் (தனித்திருப்பதற்கும்), (இவைகள் காரணமாக) எனது பேதைப் பெண் இளைத்து நிறம் மாறி போன உடல் கொஞ்சமும் கெடாதவாறு, வேடப் பெண்ணாகிய வள்ளியின் பொருட்டு காம நோய் தீரும்படி திருவிளையாடல்களைச் செய்து விளங்கும் உன் இரண்டு திருவடிகளுடன் பொருந்தி (இப்பேதையிடமும்) நீ வர வேண்டும். ஆறு வகைக் கெட்ட குணங்கள் நிறைந்தவர்களும், வாட்படை ஏந்தியவர்களும் ஆகிய அசுரர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்திய ஆறுமுகப்பிரானே, குறப் பெண் வள்ளியின் கணவனே. கடலால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் அடக்கி, வாசுகிப் பாம்பின் வாயை அடக்கிக் கூச்சலிடும் மயில் மீது ஏறி விளங்கும் இளையோனே, மிக்க சினத்துடன் மேருமலையை பொடியாகும்படி கோபித்த சேவற் கொடியோனே, கடப்பமாலையை நெருக்கமாய் அணிந்த திரண்ட தோளனே, கூடியுள்ள வலிமையால் வெற்றி மிக்குள்ள சூரர்கள் கொண்டு போய் அடைத்த தேவர்களின் சிறையை நீக்கிய பெருமாளே.
மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும் ... பகைமையுடன் சண்டை செய்யும் யமனை நிகர்த்து ஆகாயத்தில் எழுகின்ற அழகிய சந்திரனுக்கும், வாரி துயிலா அதற்கும் வசையே சொல் மாய மடவார் தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும் ... கடல் தூக்கம் கொள்ளாது (அலை ஒலித்துக் கொண்டே) இருக்கும் அந்த நிலைக்கும், வசை மொழிகளையே பேசிக் கொண்டிருக்கும் வஞ்சனை கொண்டுள்ள மாதர்களுக்கும், இடையர் குழல் ஊதும் இசைக்கும், வாயும் இள வாடையிற்கும் அதனாலே வேறுபடி பாயலுக்குமே ... வாய்ந்துள்ள இளம் வாடைக் காற்றுக்கும், அதனாலே படுக்கை வேறுபடுவதற்கும் (தனித்திருப்பதற்கும்), எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே ... (இவைகள் காரணமாக) எனது பேதைப் பெண் இளைத்து நிறம் மாறி போன உடல் கொஞ்சமும் கெடாதவாறு, வேடர் குல மாதினுக்கும் வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும் ... வேடப் பெண்ணாகிய வள்ளியின் பொருட்டு காம நோய் தீரும்படி திருவிளையாடல்களைச் செய்து விளங்கும் உன் இரண்டு திருவடிகளுடன் பொருந்தி (இப்பேதையிடமும்) நீ வர வேண்டும். ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறு முகனே குறத்தி மணவாளா ... ஆறு வகைக் கெட்ட குணங்கள் நிறைந்தவர்களும், வாட்படை ஏந்தியவர்களும் ஆகிய அசுரர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்திய ஆறுமுகப்பிரானே, குறப் பெண் வள்ளியின் கணவனே. ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி ஆலும் மயில் ஏறி நிற்கும் இளையோனே ... கடலால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் அடக்கி, வாசுகிப் பாம்பின் வாயை அடக்கிக் கூச்சலிடும் மயில் மீது ஏறி விளங்கும் இளையோனே, சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா ... மிக்க சினத்துடன் மேருமலையை பொடியாகும்படி கோபித்த சேவற் கொடியோனே, கடப்பமாலையை நெருக்கமாய் அணிந்த திரண்ட தோளனே, சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர் சிறை மீள விட்ட பெருமாளே. ... கூடியுள்ள வலிமையால் வெற்றி மிக்குள்ள சூரர்கள் கொண்டு போய் அடைத்த தேவர்களின் சிறையை நீக்கிய பெருமாளே.