மின்னினில் நடுக்கம் உற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில்
வட்டம் ஒத்து அழகு ஆர விம்மி இளகிக் கதித்த கொம்மை முலையில்
குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில்
கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் கண் அழிவு வைத்த புத்தி
ஷண்முக நினைக்க வைத்த கன்ம வசம் எப்படிக்கு மறவேனே
அன்ன நடையைப் பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவிப் புனத்தில் விளையாடும் அன்னை
இறுகப் பிணித்த பன்னிரு திருப் புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையு(ம்) மாள பொன்னுலகினைப் புரக்கும் மன்ன
நல் வ்ரதத்தை விட்ட புன்மையர் புர த்ரய அத்தர் பொடியாக
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே.
மின்னலைப் போல் நடுங்குகின்ற மெலிந்த இடையிலும், முத்துப் போன்ற வெண்மை நிறம் கொண்ட பற்களிலும், வட்ட வடிவு கொண்டு அழகு நிரம்பி, பூரித்து, நெகிழ்ந்து, எழுந்து, திரண்ட மார்பகங்களிலும், வளைவு கொண்ட, வில்லைப் போன்ற நெற்றியில் அணிந்துள்ள பொட்டிலும், விலைமாதர்களுடைய கரும்பு போல் இனிக்கும் பேச்சிலும், சிறப்புற்ற அன்னத்தைப் போன்ற நடையிலும், கறுப்பு நிறம் கொண்ட இரு கண்களிலும், சிவந்த (கொவ்வைக்) கனி போன்ற வாயிலும், தனித்தனி தோய்ந்து வியப்புற்றுக் கிடந்த என் புத்தி மாறி, (உனது) ஆறு முகங்களையும் நினைக்குமாறு செய்த புண்ணியப் பயனை எந்தக் காரணத்தையும் கொண்டு மறக்க முடியுமா? அன்னத்தின் நடையைப் பழிக்க வல்ல மயிலைப் போன்றவள், மலையில் வளர்ந்த குறமங்கையாகிய தேவி, காட்டிலும் தினைப் புனத்திலும் விளையாடிய தாய் ஆகிய வள்ளி நாயகி, அழுத்தி அணைத்த பன்னிரண்டு திருப்புயங்களால் அயலாராய் மாறுபட்டிருந்த அசுரர்கள் அனைவர்களும் இறக்கும்படிச் செய்து, (தேவர்களின்) பொன்னுலகத்தைக்காத்தளித்த அரசே, நல்ல விரத அனுஷ்டானங்களைக் கைவிட்ட இழி குணத்தோராய் முப்புரங்களில் வாழ்ந்திருந்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி மேருவை வில்லாக வளைத்து எரித்த நெற்றிக் கண்ணராகிய சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கும் ஒப்பற்ற புண்ணியவதியாகிய பார்வதி தேவி பெற்றெடுத்த பெருமாளே.
மின்னினில் நடுக்கம் உற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் ... மின்னலைப் போல் நடுங்குகின்ற மெலிந்த இடையிலும், முத்துப் போன்ற வெண்மை நிறம் கொண்ட பற்களிலும், வட்டம் ஒத்து அழகு ஆர விம்மி இளகிக் கதித்த கொம்மை முலையில் ... வட்ட வடிவு கொண்டு அழகு நிரம்பி, பூரித்து, நெகிழ்ந்து, எழுந்து, திரண்ட மார்பகங்களிலும், குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் ... வளைவு கொண்ட, வில்லைப் போன்ற நெற்றியில் அணிந்துள்ள பொட்டிலும், விலைமாதர்களுடைய கரும்பு போல் இனிக்கும் பேச்சிலும், சிறப்புற்ற அன்னத்தைப் போன்ற நடையிலும், கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் கண் அழிவு வைத்த புத்தி ... கறுப்பு நிறம் கொண்ட இரு கண்களிலும், சிவந்த (கொவ்வைக்) கனி போன்ற வாயிலும், தனித்தனி தோய்ந்து வியப்புற்றுக் கிடந்த என் புத்தி மாறி, ஷண்முக நினைக்க வைத்த கன்ம வசம் எப்படிக்கு மறவேனே ... (உனது) ஆறு முகங்களையும் நினைக்குமாறு செய்த புண்ணியப் பயனை எந்தக் காரணத்தையும் கொண்டு மறக்க முடியுமா? அன்ன நடையைப் பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவிப் புனத்தில் விளையாடும் அன்னை ... அன்னத்தின் நடையைப் பழிக்க வல்ல மயிலைப் போன்றவள், மலையில் வளர்ந்த குறமங்கையாகிய தேவி, காட்டிலும் தினைப் புனத்திலும் விளையாடிய தாய் ஆகிய வள்ளி நாயகி, இறுகப் பிணித்த பன்னிரு திருப் புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையு(ம்) மாள பொன்னுலகினைப் புரக்கும் மன்ன ... அழுத்தி அணைத்த பன்னிரண்டு திருப்புயங்களால் அயலாராய் மாறுபட்டிருந்த அசுரர்கள் அனைவர்களும் இறக்கும்படிச் செய்து, (தேவர்களின்) பொன்னுலகத்தைக்காத்தளித்த அரசே, நல் வ்ரதத்தை விட்ட புன்மையர் புர த்ரய அத்தர் பொடியாக ... நல்ல விரத அனுஷ்டானங்களைக் கைவிட்ட இழி குணத்தோராய் முப்புரங்களில் வாழ்ந்திருந்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே. ... மேருவை வில்லாக வளைத்து எரித்த நெற்றிக் கண்ணராகிய சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கும் ஒப்பற்ற புண்ணியவதியாகிய பார்வதி தேவி பெற்றெடுத்த பெருமாளே.