மோது மறலி ஒரு கோடி வேல் படை
கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட
மோகம் உடைய வெகு மாதர் கூட்டமும் அயலாரும்
மூளும் அளவில் விசை மேல் விழா
பரிதாபமுடனும் விழி நீர் கொளா
கொடு மோக வினையில் நெடு நாளின் மூத்தவர் இளையோர்கள்
ஏது கருமம் இவர் சாவு என
சிலர் கூடி நடவும் இடு காடு எனா
கடிது ஏழு நரகின் இடை வீழ்ம் எனா
பொறியறு பாவி (எனா)
ஏழு புவனம் மிகு வான நாட்டவர்
சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே
சூது பொரு தருமன் நாடு தோற்று
இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று
இயல் தோகை உடனுமெ விராடராச்சியம் உறை நாளில்
சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர்
ஆளும் உரிமை தருமாறு கேட்டு
ஒருதூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என மீள
வாது சமர் திருதரானராட்டிர ராஜ குமரர் துரியோதனால் பிறர் மாள
மாள நிருபரொடு சேனை தூட்பட
வரி சாப வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை
முடுகு நெடு மால் பராக்ரம மாயன் மருக
அமர் நாடர் பார்த்திப பெருமாளே.
தாக்குகின்ற யமன் தனது ஒப்பற்ற கூரிய வேற்படையுடன் வேகமாக வந்து எனது உயிரை (உடலினின்றும்) பிரிக்க, (என் மேல்) ஆசை கொண்டிருந்த பல மாதர்களின் கூட்டமும், பிறரும், துக்கம் மூண்டு மிகவும் வேகமாக மேலே விழுந்து, இரக்கத்துடனே கண்களில் நீர் கொண்டு நிற்க, கொடிய மோக மயக்கத்தில் நீண்ட நாட்கள் இருந்த மூத்தவர்களும், இளமையானவர்களும், இவர் இறந்ததற்கு என்ன காரணம் என்று விசாரிக்கவும், பிணத்துக்குப் பின் சிலர் கூடி சுடு காட்டுக்கு நடவுங்கள் என்று மற்றவர் கூறவும், (இவனை) விரைவாக ஏழு நரகினிடையே வீழ்த்துங்கள் என்று சிலர் கூறவும், இவன் புலன்களை நல்ல வழியில் செலுத்தாத பாவி எனச் சிலர் கூறவும் (இடம் கொடுக்காமல்), ஏழு உலகங்களில் உள்ளவர்களும், சிறந்த தேவ நாட்டவரும், சூழ்ந்துள்ள முனிவர் கூட்டங்களும் போற்றி நிற்க, சிவபெருமான் அருளிய குமரனே, வேதம் ஒலித்து எழ, நீ எழுந்தருள்வயாக. சூதுப்போர் செய்த தருமபுத்திரன் தன் நாட்டைச் சூதில் இழந்து, பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழும் வாழ்க்கையை பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டு வசித்தபின், கற்பியல் உடைய மயில் போன்ற மனைவி திரெளபதியுடன் விராட நாட்டில் (ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசம் செய்து) காலம் கழித்து வந்த நாளில், பசுக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு விராட நாட்டிலிருந்து துரியோதனாதியர் செல்ல, அப்பசுக்களை எதிர்ச் சென்று மீட்டுவந்து, அரசாட்சி உரிமையைத் தரும்படி கேட்பதற்காக, ஒப்பற்ற தூதனாகக் கண்ணணை அனுப்ப, போருக்கு உரிய வலிய ஆண்மையோடு தாக்குவேன் (ஆனால் அரசுரிமையைத் தரமாட்டேன்) என்று துரியோதனன் கூற, தூதினின்றும் வெற்றியின்றி கண்ணன் மீண்டும் வரவும், வலிய வாது பேசிப் போருக்கு வந்த திருதராஷ்டிர ராஜனுடைய குமாரர்களும், துரியோதனன் காரணமாகப் போரிட்ட மற்றவர்களும் இறக்க, பிற அரசர்களோடும் சேனைகள் எல்லாம் தூள்பட்டு அழிய, வரிகள் பொருந்திய காண்டீபம் என்ற வில்லினால் வெற்றியைக் கொண்ட அர்ச்சுனனுடைய வலிய குதிரைகள் பூட்டிய ரதத்தை வேகமாகச் செலுத்திய பெரிய திருமால், வல்லமை பொருந்திய மாயோனின் மருகனே, விண்ணுலகத்தோருக்குச் சக்ரவர்த்தியாகிய பெருமாளே.
மோது மறலி ஒரு கோடி வேல் படை ... தாக்குகின்ற யமன் தனது ஒப்பற்ற கூரிய வேற்படையுடன் கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட ... வேகமாக வந்து எனது உயிரை (உடலினின்றும்) பிரிக்க, மோகம் உடைய வெகு மாதர் கூட்டமும் அயலாரும் ... (என் மேல்) ஆசை கொண்டிருந்த பல மாதர்களின் கூட்டமும், பிறரும், மூளும் அளவில் விசை மேல் விழா ... துக்கம் மூண்டு மிகவும் வேகமாக மேலே விழுந்து, பரிதாபமுடனும் விழி நீர் கொளா ... இரக்கத்துடனே கண்களில் நீர் கொண்டு நிற்க, கொடு மோக வினையில் நெடு நாளின் மூத்தவர் இளையோர்கள் ... கொடிய மோக மயக்கத்தில் நீண்ட நாட்கள் இருந்த மூத்தவர்களும், இளமையானவர்களும், ஏது கருமம் இவர் சாவு என ... இவர் இறந்ததற்கு என்ன காரணம் என்று விசாரிக்கவும், சிலர் கூடி நடவும் இடு காடு எனா ... பிணத்துக்குப் பின் சிலர் கூடி சுடு காட்டுக்கு நடவுங்கள் என்று மற்றவர் கூறவும், கடிது ஏழு நரகின் இடை வீழ்ம் எனா ... (இவனை) விரைவாக ஏழு நரகினிடையே வீழ்த்துங்கள் என்று சிலர் கூறவும், பொறியறு பாவி (எனா) ... இவன் புலன்களை நல்ல வழியில் செலுத்தாத பாவி எனச் சிலர் கூறவும் (இடம் கொடுக்காமல்), ஏழு புவனம் மிகு வான நாட்டவர் ... ஏழு உலகங்களில் உள்ளவர்களும், சிறந்த தேவ நாட்டவரும், சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட ... சூழ்ந்துள்ள முனிவர் கூட்டங்களும் போற்றி நிற்க, ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே ... சிவபெருமான் அருளிய குமரனே, வேதம் ஒலித்து எழ, நீ எழுந்தருள்வயாக. சூது பொரு தருமன் நாடு தோற்று ... சூதுப்போர் செய்த தருமபுத்திரன் தன் நாட்டைச் சூதில் இழந்து, இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று ... பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழும் வாழ்க்கையை பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டு வசித்தபின், இயல் தோகை உடனுமெ விராடராச்சியம் உறை நாளில் ... கற்பியல் உடைய மயில் போன்ற மனைவி திரெளபதியுடன் விராட நாட்டில் (ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசம் செய்து) காலம் கழித்து வந்த நாளில், சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர் ... பசுக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு விராட நாட்டிலிருந்து துரியோதனாதியர் செல்ல, அப்பசுக்களை எதிர்ச் சென்று மீட்டுவந்து, ஆளும் உரிமை தருமாறு கேட்டு ... அரசாட்சி உரிமையைத் தரும்படி கேட்பதற்காக, ஒருதூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என மீள ... ஒப்பற்ற தூதனாகக் கண்ணணை அனுப்ப, போருக்கு உரிய வலிய ஆண்மையோடு தாக்குவேன் (ஆனால் அரசுரிமையைத் தரமாட்டேன்) என்று துரியோதனன் கூற, தூதினின்றும் வெற்றியின்றி கண்ணன் மீண்டும் வரவும், வாது சமர் திருதரானராட்டிர ராஜ குமரர் துரியோதனால் பிறர் மாள ... வலிய வாது பேசிப் போருக்கு வந்த திருதராஷ்டிர ராஜனுடைய குமாரர்களும், துரியோதனன் காரணமாகப் போரிட்ட மற்றவர்களும் இறக்க, மாள நிருபரொடு சேனை தூட்பட ... பிற அரசர்களோடும் சேனைகள் எல்லாம் தூள்பட்டு அழிய, வரி சாப வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை ... வரிகள் பொருந்திய காண்டீபம் என்ற வில்லினால் வெற்றியைக் கொண்ட அர்ச்சுனனுடைய வலிய குதிரைகள் பூட்டிய ரதத்தை முடுகு நெடு மால் பராக்ரம மாயன் மருக ... வேகமாகச் செலுத்திய பெரிய திருமால், வல்லமை பொருந்திய மாயோனின் மருகனே, அமர் நாடர் பார்த்திப பெருமாளே. ... விண்ணுலகத்தோருக்குச் சக்ரவர்த்தியாகிய பெருமாளே.