அருக்கி மெத்த தோள் திருத்தி உற்று மார்பு அசைத்து
உவக்கும் மால் இளைஞோரை அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது அணைத்து
மெத்த மால் அது கூர உருக்கி உட்கொள் மாதருக்கு உள் எய்த்து நா உலற்றி உட்கு நாணுடன் மேவி
உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்தி பால் உற அக்குணத்த தாள் அருள்வாயே
சுருக்கம் உற்ற மால் தனக்கும் எட்டிடாது ஒருத்தர் மிக்க மா நடமாடும்
சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே
பெருக்க வெற்றி கூர் திருக் கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன் பெலத்தை முட்டி மார் தொளைத்து
நட்டு உ(ள்)ளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே.
அருமை பாராட்டி நன்றாகத் தோள்களை ஒழுங்கு படுத்தியும், மார்பை அசைத்தும், தம்மைக் கண்டு மகிழ்ந்து மோகம் கொண்ட இளைஞர்களை அழைத்து, நிரம்பப் பணத்தை அவர்கள் தரச்செய்து, மெத்தையின் மீது அணைத்து, நிரம்பக் காமம் மிகும்படி அவர்கள் மனதை உருக்கி தம் வசப்படுத்தும் விலைமாதர்களுக்கு நான் இளைப்புற்று, நா வறண்டு, அஞ்சி, நாணம் கொண்டவனாக இருந்து, காலம் தள்ளுவதை நீ ஒழித்து அருள, முக்தி வீட்டை நான் அடைய, அந்த மேன்மை தங்கிய திருவடியைத் தந்து அருள்வாயாக. குறள் வடிவத்தில் வாமனராக வந்த (பின் வானளவு உயர்ந்த) திருமாலாலும் அளவிட முடியாத ஒப்பற்ற பெருமான், மிகச் சிறந்த நடனம் ஆடும் இன்பம் கொண்ட சிவபெருமானுக்கு மிக்க பக்தி முதிர்ந்து பெருக ஞானத்தை (மூலப் பொருளை) உபதேசித்து அருளியவனே, நிரம்ப வெற்றியே மிக்க அழகிய கரத்தில் வீர வேல் கொண்டு, குற்றங்கள் நிறைந்த ஒப்பற்ற சூரனுடைய பலத்தைத் தாக்கி, அவனது மார்பைத் தொளைத்து, நட்புடைய தேவர்கள் பிழைக்க அந்த வேலைச் செலுத்திய ஒப்பற்ற பெருமாளே.
அருக்கி மெத்த தோள் திருத்தி உற்று மார்பு அசைத்து ... அருமை பாராட்டி நன்றாகத் தோள்களை ஒழுங்கு படுத்தியும், மார்பை அசைத்தும், உவக்கும் மால் இளைஞோரை அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது அணைத்து ... தம்மைக் கண்டு மகிழ்ந்து மோகம் கொண்ட இளைஞர்களை அழைத்து, நிரம்பப் பணத்தை அவர்கள் தரச்செய்து, மெத்தையின் மீது அணைத்து, மெத்த மால் அது கூர உருக்கி உட்கொள் மாதருக்கு உள் எய்த்து நா உலற்றி உட்கு நாணுடன் மேவி ... நிரம்பக் காமம் மிகும்படி அவர்கள் மனதை உருக்கி தம் வசப்படுத்தும் விலைமாதர்களுக்கு நான் இளைப்புற்று, நா வறண்டு, அஞ்சி, நாணம் கொண்டவனாக இருந்து, உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்தி பால் உற அக்குணத்த தாள் அருள்வாயே ... காலம் தள்ளுவதை நீ ஒழித்து அருள, முக்தி வீட்டை நான் அடைய, அந்த மேன்மை தங்கிய திருவடியைத் தந்து அருள்வாயாக. சுருக்கம் உற்ற மால் தனக்கும் எட்டிடாது ஒருத்தர் மிக்க மா நடமாடும் ... குறள் வடிவத்தில் வாமனராக வந்த (பின் வானளவு உயர்ந்த) திருமாலாலும் அளவிட முடியாத ஒப்பற்ற பெருமான், மிகச் சிறந்த நடனம் ஆடும் சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே ... இன்பம் கொண்ட சிவபெருமானுக்கு மிக்க பக்தி முதிர்ந்து பெருக ஞானத்தை (மூலப் பொருளை) உபதேசித்து அருளியவனே, பெருக்க வெற்றி கூர் திருக் கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன் பெலத்தை முட்டி மார் தொளைத்து ... நிரம்ப வெற்றியே மிக்க அழகிய கரத்தில் வீர வேல் கொண்டு, குற்றங்கள் நிறைந்த ஒப்பற்ற சூரனுடைய பலத்தைத் தாக்கி, அவனது மார்பைத் தொளைத்து, நட்டு உ(ள்)ளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே. ... நட்புடைய தேவர்கள் பிழைக்க அந்த வேலைச் செலுத்திய ஒப்பற்ற பெருமாளே.