செழும் தாது பார் மாது
அரும்பு ஆதி ரூபோடு
சிறந்து யாதிலும் ஆசை ஒழியாத
திறம் பூத வேதாளன்
அரும் பாவமே கோடி செ(ய்)யும் காய நோயாளன்
நரகு ஏழில் விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி
ஆவி விடும் காலமே நாயேன்
வினை பாவம் விரைந்து ஏகவே
வாசி துரந்து ஓடியே
ஞான விளம்பு ஓசையே பேசி வர வேணும்
அழும் கோடி தேவர்கள் அமர்ந்து ஆர வான் நீடி
அழன்று ஏகி மா சீத நெடு வேலை அதிர்ந்து ஓடவே
காலன் விழுந்து ஓடவே
கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே
கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு
குருந்து ஏறு மால் மாயன் மருகோனே
குறம் பாடுவார் சேரி புகுந்து
ஆசை மாதோடு குணம் கூடியே வாழு(ம்) பெருமாளே.
செழுமையான பொன், மண், பெண் (என்னும் மூவாசைகளும்) முதலில் அரும்பு விட்டுப் பின்னர் வளருவது போன்ற உருவத்துடன், மேலும் மேலும் விளங்கி எதிலுமே ஆசை நீங்காத கோட்பாட்டினை உடைய பேய் பிசாசு (நான்). கொடிய பாவங்களைக் கோடிக் கணக்கில் செய்யும் உடலில் நோய் கொண்டவன். ஏழு நரகங்களிலும் விழுந்து ஆழ்ந்து முழுகும்படி தள்ளுகின்ற யமன் என்னை அணுக, நான் உயிர் விடும் காலத்தில் அடியேனுடைய வினை பாவம் ஆகியவை அதி வேகத்தில் என்னை விட்டு அகலும்படி, குதிரையாகிய மயிலை வேகமாகச் செலுத்தி, ஞான மொழிகளைச் சொல்லும் ஒலியே எனக்குக் கேட்கும்படியாக பேசி வந்தருள வேண்டும். அழுத கோடிக் கணக்கான தேவர்கள் விண்ணில் நீண்ட காலம் அமர்ந்து வாழ்ந்திருக்கும்படியாக, கொதிப்புடன் கோபித்துச்சென்று, மிகவும் குளிர்ச்சியான பெரிய கடல் அதிர்ச்சி அடையும்படி நீ வேகமாகப் பாய்ந்து செல்ல, யமன் (அசுரர்களின் உயிரைக் கவர) விழுந்து அடித்துக்கொண்டு (போர் முனைக்கு) ஓடவே, கூர்மையான, அலங்காரம் உள்ள வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, செழிப்பான காட்டிலே பெண்களின் நல்ல ஆடைகளை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் ஏறி (ஆடைகளை மறைத்த) மாயக் கண்ணனாகிய திருமாலின் மருகோனே, குறம் என்னும் பாடல் வகையைப் பாடுபவர்களாகிய குறவர்களின் சேரியில் புகுந்து, உன் ஆசைக்கு உகந்த வள்ளியுடன், அவள் குணத்துக்கு மகிழ்ந்து, பிறகு அவளுடன் கூடியே வாழ்கின்ற பெருமாளே.
செழும் தாது பார் மாது ... செழுமையான பொன், மண், பெண் (என்னும் மூவாசைகளும்) அரும்பு ஆதி ரூபோடு ... முதலில் அரும்பு விட்டுப் பின்னர் வளருவது போன்ற உருவத்துடன், சிறந்து யாதிலும் ஆசை ஒழியாத ... மேலும் மேலும் விளங்கி எதிலுமே ஆசை நீங்காத திறம் பூத வேதாளன் ... கோட்பாட்டினை உடைய பேய் பிசாசு (நான்). அரும் பாவமே கோடி செ(ய்)யும் காய நோயாளன் ... கொடிய பாவங்களைக் கோடிக் கணக்கில் செய்யும் உடலில் நோய் கொண்டவன். நரகு ஏழில் விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ... ஏழு நரகங்களிலும் விழுந்து ஆழ்ந்து முழுகும்படி தள்ளுகின்ற யமன் என்னை அணுக, ஆவி விடும் காலமே நாயேன் ... நான் உயிர் விடும் காலத்தில் அடியேனுடைய வினை பாவம் விரைந்து ஏகவே ... வினை பாவம் ஆகியவை அதி வேகத்தில் என்னை விட்டு அகலும்படி, வாசி துரந்து ஓடியே ... குதிரையாகிய மயிலை வேகமாகச் செலுத்தி, ஞான விளம்பு ஓசையே பேசி வர வேணும் ... ஞான மொழிகளைச் சொல்லும் ஒலியே எனக்குக் கேட்கும்படியாக பேசி வந்தருள வேண்டும். அழும் கோடி தேவர்கள் அமர்ந்து ஆர வான் நீடி ... அழுத கோடிக் கணக்கான தேவர்கள் விண்ணில் நீண்ட காலம் அமர்ந்து வாழ்ந்திருக்கும்படியாக, அழன்று ஏகி மா சீத நெடு வேலை அதிர்ந்து ஓடவே ... கொதிப்புடன் கோபித்துச்சென்று, மிகவும் குளிர்ச்சியான பெரிய கடல் அதிர்ச்சி அடையும்படி நீ வேகமாகப் பாய்ந்து செல்ல, காலன் விழுந்து ஓடவே ... யமன் (அசுரர்களின் உயிரைக் கவர) விழுந்து அடித்துக்கொண்டு (போர் முனைக்கு) ஓடவே, கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே ... கூர்மையான, அலங்காரம் உள்ள வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு ... செழிப்பான காட்டிலே பெண்களின் நல்ல ஆடைகளை எடுத்துக் கொண்டு குருந்து ஏறு மால் மாயன் மருகோனே ... குருந்த மரத்தில் ஏறி (ஆடைகளை மறைத்த) மாயக் கண்ணனாகிய திருமாலின் மருகோனே, குறம் பாடுவார் சேரி புகுந்து ... குறம் என்னும் பாடல் வகையைப் பாடுபவர்களாகிய குறவர்களின் சேரியில் புகுந்து, ஆசை மாதோடு குணம் கூடியே வாழு(ம்) பெருமாளே. ... உன் ஆசைக்கு உகந்த வள்ளியுடன், அவள் குணத்துக்கு மகிழ்ந்து, பிறகு அவளுடன் கூடியே வாழ்கின்ற பெருமாளே.