தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத
செம் தழல் ஒன்று வெம் தழல் சிந்து திங்களும் வந்து துணை ஏய
அன்றிலும் அன்றி துன்று சரங்கள் ஐந்தும் என் நெஞ்சம் அழியாதே
அந்தியில் என்றன் வெம் துயர் அஞ்ச அன்போடு அலங்கல் தர வேணும்
வென்றி விளங்கு(ம்) குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை புணர் மார்பா
வெண் தரளங்கள் தண்டை சதங்கை மின் கொடு இலங்கு கழலோனே
கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா
குன்றி(ட்) ட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே.
தென்றல் காற்று மட்டுமன்றி, இன்றைய தினத்தில் அலை பொங்கி வலிய கடல் ஒன்றும் மிகப் பலமாக என்னைத் தாக்க, பொங்கி எழும் நெருப்பு என்று சொல்லும்படி கொடிய கனலைத் தூவுகின்ற சந்திரனும் வந்து (அவைகளுக்குத்) துணையாகப் பொருந்த, அன்றில் பறவையும், அதனுடன் நெருங்கி வந்த (மன்மதனின்) ஐந்து மலர்ப் பாணங்களும் என்னுடைய உள்ளத்தை அழித்து விடாமல், அந்திப் பொழுதில் வந்து, என்னுடைய கொடிய துயர் அஞ்சி நீங்க அன்புடன் உன் மாலையைத் தந்து அருள வேண்டும். வெற்றி விளங்கும் வேடர்களின் பெண்ணாகிய வள்ளியின் மேலோங்கு மார்பகங்களை அணைந்த மார்பனே, வெண்மையான முத்துக்களால் ஆன தண்டையும், சதங்கையும் மின்னலைப்போல் ஒளி வீசும் கழலை உடையவனே, கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் அன்று உன்னை வணங்க, அவருக்கு உபதேசம் செய்ய வந்த குமரேசனே, மனம் வேதனையால் குன்றி இருந்த தேவர்கள் அன்று பிழைக்கும்படி வெற்றி பெற்று, கிரெளஞ்ச மலையைப் பிளந்தெறிந்த பெருமாளே.
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத ... தென்றல் காற்று மட்டுமன்றி, இன்றைய தினத்தில் அலை பொங்கி வலிய கடல் ஒன்றும் மிகப் பலமாக என்னைத் தாக்க, செம் தழல் ஒன்று வெம் தழல் சிந்து திங்களும் வந்து துணை ஏய ... பொங்கி எழும் நெருப்பு என்று சொல்லும்படி கொடிய கனலைத் தூவுகின்ற சந்திரனும் வந்து (அவைகளுக்குத்) துணையாகப் பொருந்த, அன்றிலும் அன்றி துன்று சரங்கள் ஐந்தும் என் நெஞ்சம் அழியாதே ... அன்றில் பறவையும், அதனுடன் நெருங்கி வந்த (மன்மதனின்) ஐந்து மலர்ப் பாணங்களும் என்னுடைய உள்ளத்தை அழித்து விடாமல், அந்தியில் என்றன் வெம் துயர் அஞ்ச அன்போடு அலங்கல் தர வேணும் ... அந்திப் பொழுதில் வந்து, என்னுடைய கொடிய துயர் அஞ்சி நீங்க அன்புடன் உன் மாலையைத் தந்து அருள வேண்டும். வென்றி விளங்கு(ம்) குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை புணர் மார்பா ... வெற்றி விளங்கும் வேடர்களின் பெண்ணாகிய வள்ளியின் மேலோங்கு மார்பகங்களை அணைந்த மார்பனே, வெண் தரளங்கள் தண்டை சதங்கை மின் கொடு இலங்கு கழலோனே ... வெண்மையான முத்துக்களால் ஆன தண்டையும், சதங்கையும் மின்னலைப்போல் ஒளி வீசும் கழலை உடையவனே, கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா ... கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் அன்று உன்னை வணங்க, அவருக்கு உபதேசம் செய்ய வந்த குமரேசனே, குன்றி(ட்) ட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே. ... மனம் வேதனையால் குன்றி இருந்த தேவர்கள் அன்று பிழைக்கும்படி வெற்றி பெற்று, கிரெளஞ்ச மலையைப் பிளந்தெறிந்த பெருமாளே.