கலக வாள் விழி வேலோ சேலோ மதுர வாய் மொழி தேனோ பாலோ கரிய வார் குழல் காரோ கானோ துவரோ வாய் களமும் நீள் கமுகோ தோள் வேயோ உதரமானது மால் ஏர் பாயோ களப வார் முலை மேரோ கோடோ இடை தானும் இழையதோ மலர் வேதாவானோன் எழுதினான் இலையோ வாய் பேசீர் இது என மோனம் மினாரே பாரீர் என மாதர் இரு கண் மாயையிலே மூழ்காதே உனது காவிய நூல் ஆராய்வேன் இடர் படாது அருள் வாழ்வே நீயே தர வேணும் அலைவு இலாது உயர் வானோர் ஆனோர் நிலைமையே குறி வேலா சீலா அடியவர் பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா தாழ்வார் அயல் உலாவிய சீலா கோலாகல வீரா வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா< நாள் ஆர் வனச மேல் வரு தேவா மூவா மயில் வாழ்வே மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா மயுர வாகன தேவா வானோர் பெருமாளே.
கலகத்தை விளைவிக்கின்ற ஒளி பெற்ற கண்கள் வேலாயுதமோ, சேல் மீனோ? இனிய வாய்ச் சொல் தேனோ, பாலோ? கரு நிறமான நீண்ட கூந்தல் மேகமோ, காடோ? வாய் பவளமோ? கழுத்து நீண்ட பாக்கு மரமோ? தோள் மூங்கிலோ? வயிறானது திருமால் பள்ளி கொண்ட அழகிய ஆல் இலையோ? சந்தனக் கலவை பூசிய கச்சணிந்த மார்பகம் மேரு மலையோ, யானைத் தந்தமோ? இடைதான் நூலோ, தாமரை மேல் வீற்றிருக்கும் பிரம தேவன் இடையை எழுதவில்லையோ? வாய் திறந்து பேசுங்கள். இது என்ன மெளனம் சாதிக்கின்றீர்கள், மின் போன்ற பெண்மணிகளே பாருங்கள், என்று பேசி விலைமாதர்களுடைய இரண்டு கண்கள் என்னும் மாயைக் கடலில் முழுகாமல், உன்னுடைய பிரபந்த நூல்களை ஆராய்வேன். இடர்கள் எவையும் என்னைப் பீடிக்காத வகையில் உனது திருவருள் நிறைந்த வாழ்வைத் தந்தருள வேண்டும். அலைச்சல் இல்லாத வண்ணம், உயர்வு பெற்ற தேவர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் வேலனே, ஒழுக்கம் நிறைந்தவனே, அடியார்களுக்குத் திருவருள் பாலிப்பவனே, கடப்ப மாலை அணிந்த அழகிய மார்பனே, அழகு பொலியும் முருகக் கடவுளே, கம்பீரம் நிறைந்த (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட மின்னலை ஒத்த தேவயானை மகிழ்கின்ற கணவனே, உன்னைப் பணிந்து தாழ்பவர்களுடைய அருகிலே உலாவும் சீலனே, ஆடம்பர வீரனே, வல்லபையின் கணவராகிய விநாயகருடைய தம்பியே, காட்டில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, புதிய தாமரை மீது எழுந்தருளி உள்ள தேவனே, முதுமை இல்லாத மயிலின் செல்வமே, இனிய ஞான வழிகளில் பொழுது போக்கும் நாதனே, பழனி மலையில் வீற்றிருக்கும் குமாரனே, தீரனே, மயில் வாகன தேவனே, தேவர்களின் பெருமாளே.
கலக வாள் விழி வேலோ சேலோ ... கலகத்தை விளைவிக்கின்ற ஒளி பெற்ற கண்கள் வேலாயுதமோ, சேல் மீனோ? மதுர வாய் மொழி தேனோ பாலோ ... இனிய வாய்ச் சொல் தேனோ, பாலோ? கரிய வார் குழல் காரோ கானோ துவரோ வாய் ... கரு நிறமான நீண்ட கூந்தல் மேகமோ, காடோ? வாய் பவளமோ? களமும் நீள் கமுகோ தோள் வேயோ ... கழுத்து நீண்ட பாக்கு மரமோ? தோள் மூங்கிலோ? உதரமானது மால் ஏர் பாயோ ... வயிறானது திருமால் பள்ளி கொண்ட அழகிய ஆல் இலையோ? களப வார் முலை மேரோ கோடோ ... சந்தனக் கலவை பூசிய கச்சணிந்த மார்பகம் மேரு மலையோ, யானைத் தந்தமோ? இடை தானும் இழையதோ மலர் வேதாவானோன் எழுதினான் இலையோ வாய் பேசீர் ... இடைதான் நூலோ, தாமரை மேல் வீற்றிருக்கும் பிரம தேவன் இடையை எழுதவில்லையோ? வாய் திறந்து பேசுங்கள். இது என மோனம் மினாரே பாரீர் என மாதர் ... இது என்ன மெளனம் சாதிக்கின்றீர்கள், மின் போன்ற பெண்மணிகளே பாருங்கள், என்று பேசி விலைமாதர்களுடைய இரு கண் மாயையிலே மூழ்காதே உனது காவிய நூல் ஆராய்வேன் ... இரண்டு கண்கள் என்னும் மாயைக் கடலில் முழுகாமல், உன்னுடைய பிரபந்த நூல்களை ஆராய்வேன். இடர் படாது அருள் வாழ்வே நீயே தர வேணும் ... இடர்கள் எவையும் என்னைப் பீடிக்காத வகையில் உனது திருவருள் நிறைந்த வாழ்வைத் தந்தருள வேண்டும். அலைவு இலாது உயர் வானோர் ஆனோர் நிலைமையே குறி வேலா சீலா ... அலைச்சல் இல்லாத வண்ணம், உயர்வு பெற்ற தேவர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் வேலனே, ஒழுக்கம் நிறைந்தவனே, அடியவர் பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா ... அடியார்களுக்குத் திருவருள் பாலிப்பவனே, கடப்ப மாலை அணிந்த அழகிய மார்பனே, அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா ... அழகு பொலியும் முருகக் கடவுளே, கம்பீரம் நிறைந்த (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட மின்னலை ஒத்த தேவயானை மகிழ்கின்ற கணவனே, தாழ்வார் அயல் உலாவிய சீலா கோலாகல வீரா ... உன்னைப் பணிந்து தாழ்பவர்களுடைய அருகிலே உலாவும் சீலனே, ஆடம்பர வீரனே, வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா ... வல்லபையின் கணவராகிய விநாயகருடைய தம்பியே, காட்டில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, நாள் ஆர் வனச மேல் வரு தேவா மூவா மயில் வாழ்வே ... புதிய தாமரை மீது எழுந்தருளி உள்ள தேவனே, முதுமை இல்லாத மயிலின் செல்வமே, மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா ... இனிய ஞான வழிகளில் பொழுது போக்கும் நாதனே, பழனி மலையில் வீற்றிருக்கும் குமாரனே, தீரனே, மயுர வாகன தேவா வானோர் பெருமாளே. ... மயில் வாகன தேவனே, தேவர்களின் பெருமாளே.