ரத்தம், மலம், நீர், இவை ஒழுகுகின்ற மனிதக் குடலையும், சிறிய புழுக்கள் நெளியக்கூடிய உடலையும் கொண்டு, மதம் கொண்ட விகார வடிவம் கொண்டவனாய், கொழுப்பு, சதை, ஊறி எழும் சேறு போன்ற சளி இவை உடலினுள்ளே குடியிருப்பவர்கள் போல உரிமையுடன் பலவும் குடிகொண்டு, வலியதான கண்ட வலி (ஒருவகை வலிப்பு நோய்), தலைவலி, வயிற்றுவலி என்று கொடுமையான நோய்கள் செய்யும் வேதனை மிகுந்த இந்த உடலை, மிகவும் விரும்பிய யான், மாதருடன் கலந்து, பொறாமையால் மன்மதனின் உள்ளமும் கரிந்து போகும்படியாக, புளகாங்கிதமும், மணிகளும் பூண்ட, மலை போன்ற, பல நகைகளை அணிந்த, மலர்களைப் புனைந்த, மதன நூல்களில் கூறியபடி, பெருமலையன்ன மார்பகங்களில் மயக்கம் கொள்ளாமல், மனத்தின் துன்பங்கள் ஒழியவும், வினைகள் சிதறிப் போகவும், காமநோயும் காம சாஸ்திரமும் விலகி நீங்கவும், என் மனம் பக்குவப்படவும், எனது தலையில் உனது திருவடிகளைச் சூட்டி அருள்வாயாக. அசுரர்கள் அழிந்து பொடியாகுமாறும், தேவர்கள் தங்கள் அமராவதிப் பதியைப் பெறுமாறும், கூர்மையான நாகாஸ்திரம், சக்ராயுதம் என்ற பாணங்களின் நுனிகள் சிதறுமாறும், மலைகள் நெறிந்து பொடிபடவும், கடல்கள் தீப்பற்றி எரியவும், செலுத்திய ஒளிமிகுந்த வேலாயுதத்தை உடையவனே, நிரம்பவும் மலர்களைப் பொழிந்து தேவர்களும் முநிவர்களும், அரசனே, குருநாதனே, குமரனே, சரணம் என்று பணிய, பெரிய மேகத்தின் உடலைக் கிழித்துக் கொண்டு ஊடுருவி வருகின்ற மயிலை வாகனமாகக் கொண்டவனே, சூரியன், சந்திரன், அக்கினி இவற்றை விழியாகக் கொண்ட சிவபிரானின் இடப்பக்கத்தில் இருப்பவளும், ஒப்பற்ற மலையரசனான ஹிமவானின் திருமகளாக வந்தவளும், தன் வடிவம் மேகம்போல் கருத்த திருமாலின் தங்கையானவளுமான பார்வதி தேவி அருளிய குழந்தையே, பரம் பொருளாகிய கணபதி அருகில் மதயானை உருவம் எடுத்து வர, உடனிருந்த குறமகள் வள்ளி அபயம் என அடைக்கலம் புகுந்து தழுவ, பழநியில் வசிக்கின்ற பெருமாளே.