உன் அகன்ற கை தாமரை போன்றது, கொடை வன்மையில் நீ மேகம் போன்றவன், தமிழ்ப் புலவர்க்கு நீயே புகலிடம் என்று கூறி உலகத்தவரைத் தவிப்புடன் நாடி யாசித்து மனம் நொந்து புண்ணாகி தளர்வுற்றுப் பம்பரம் போன்று சுழல்வேனை, உள்ளிருக்கும் பண்டம் ஊசிப்போன மண் சட்டியை, துன்பம் நிறைந்த மண்ணாலான இந்த உடலை, அழிந்துபோகும் இந்தப் பாண்டத்தை, ஐம்பொறிகளால் ஆட்டிவைக்கப்படும் இந்த வாழ்வை, நொடியில் வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி, வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்கு தொண்டு செய்ய என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக. படைக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரைமலர் மேவும் பிரமன், அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன், காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள் மணாளன் திருமால் என்று தத்தம் தொழில்களை நியமித்து அளித்து, அவரவர் பயங்களைப் போக்கி, எப்போதும் பராகாசத்தில் மேலான நிலையிலே நிற்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே, மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றத்தில் தங்கும், உயர்குல நதியாம் கங்கையின் குழந்தாய், குறக்குலத்து அழகிய கொடியாம் வள்ளியை முன்பு தினைப்புனத்தில் நின் செவ்விய கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே.