சிந்துர கூர மருப்புச் செம் சரி செம் கை குலாவ நடித்துத் தென்புற செண்பக மாலை முடித்துப் பண்புள தெருவூடே சிந்துகள் பாடி முழக்கி செம் கயல் அம்புகள் போல விழித்துச் சிங்கியில் செம் பவள ஆடை துலக்கிப் பொன் பறி விலை மாதர் வந்தவர் ஆர் என அழைத்துக் கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்திக் கண் பட மஞ்சள் நிர் ஆடி மினுக்கிப் பஞ்சு அணை தனில் ஏறி மந்திர மோகம் எழுப்பிக் கெஞ்சிட முன் தலை வாயில் அடைத்துச் சிங்கி கொள் மங்கையர் ஆசை விலக்கிப் பொன் பதம் அருள்வாயே இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள் எண்படு சூரை அழித்துக் கொண்டு அருள் ஒரு பேடி இன்கன தேரை நடத்தி செம் குரு மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர் இன்புறு தோழ்மை உடைக் கத்தன் திரு மருகோனே சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தம் இல் வாழ்வு அது பெற்றுத் தங்கிய சங்கரனார் செவி புக்கப் பண்பு அருள் குரு நாதா சம்ப்ரமம் ஆன குறத்திக்கு இன்பு உறு கொங்கையின் மேவு சமர்த்தச் சுந்தர தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய பெருமாளே.
யானையின் கூரிய தந்தம் போன்ற தனங்களும், செம்மையாக சரிந்துள்ள வளைகள் அணிந்துள்ள சிவந்த கரங்களும் குலுங்குமாறு நடனமாடி, உற்சாகத்துடன் செண்பகப் பூமாலை முடித்து, அழகிய தெரு வழியில் சிந்து என்னும் இசைப்பா வகையில் பாடல்களைப் பாடி முழக்கமிட்டு, செவ்விய கயல் மீன் போன்ற கண்களை விழித்து சிங்கத்தின் இடை போன்ற இடையில் சிவந்த பவளம் போன்ற ஆடையை உடுத்து, பொருளைப் பறிக்கின்ற பொது மகளிர். வந்தவர்கள் யார் என விசாரித்து தனங்களை அன்புடன் மூடியும், (கச்சுக் கட்டைத்) தளர்த்தியும், கண்ணில் தெரியும்படி மஞ்சள் நீராடி மினுக்கியும், பஞ்சணை மீதில் ஏறி மந்திர சக்தி போல் விரைவில் ஆசையை உண்டாக்கி (வந்தவரைக்) கெஞ்சும்படி வைத்து, முன் புறத்தில் உள்ள வாயிற் கதவை அடைத்து நாணம் இன்மையைக் கொண்ட மாதர்கள் மீது எனக்குள்ள ஆசையை விலக்கி, உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக. இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில் (இருந்த அரக்கர்களை எரி ஊட்டியும்), செவ்விய பூமி முதல் அண்ட கோளத்தில் இருந்தவர்களை (அவுணர்களின் துன்புறுத்தலிலிருந்தும்) காப்பாற்றியும், தேவர்களின் எண்ணத் தக்க துன்பத்தை நீக்கி, அவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும், ஒப்பற்ற பேடியாகிய அர்ச்சுனனுடைய அழகிய தேரை (சாரதியாய்) நடத்தியும், செம்மையான குரு மண்டல நாட்டைப் பாண்டவர்களுக்குத் தந்து அப்பாண்டவர் ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவனான திருமாலின் அழகிய மருகனே, சந்திரனும் சூரியனும், திக்குகள் எட்டு இவை யாவும் புகழும் முடிவு இல்லா வாழ்வைப் பெற்று விளங்கும் சிவ பெருமானின் திருச்செவியில் புகும்படி பிரணவத்தை உபதேசித்தருளிய குரு மூர்த்தியே, சிறப்பு மிக்க குறத்தியாகிய வள்ளியின் இன்பம் பொலியும் மார்பகத்தை விரும்பி மேவும் சாமர்த்திய அழகனே, தண்ணிய தமிழ் வழங்கும் பழனி மலையில் தங்கி வீற்றிருக்கும் பெருமாளே.
சிந்துர கூர மருப்புச் செம் சரி செம் கை குலாவ நடித்துத் தென்புற செண்பக மாலை முடித்துப் பண்புள தெருவூடே சிந்துகள் பாடி முழக்கி ... யானையின் கூரிய தந்தம் போன்ற தனங்களும், செம்மையாக சரிந்துள்ள வளைகள் அணிந்துள்ள சிவந்த கரங்களும் குலுங்குமாறு நடனமாடி, உற்சாகத்துடன் செண்பகப் பூமாலை முடித்து, அழகிய தெரு வழியில் சிந்து என்னும் இசைப்பா வகையில் பாடல்களைப் பாடி முழக்கமிட்டு, செம் கயல் அம்புகள் போல விழித்துச் சிங்கியில் செம் பவள ஆடை துலக்கிப் பொன் பறி விலை மாதர் ... செவ்விய கயல் மீன் போன்ற கண்களை விழித்து சிங்கத்தின் இடை போன்ற இடையில் சிவந்த பவளம் போன்ற ஆடையை உடுத்து, பொருளைப் பறிக்கின்ற பொது மகளிர். வந்தவர் ஆர் என அழைத்துக் கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்திக் கண் பட மஞ்சள் நிர் ஆடி மினுக்கிப் பஞ்சு அணை தனில் ஏறி மந்திர மோகம் எழுப்பிக் கெஞ்சிட ... வந்தவர்கள் யார் என விசாரித்து தனங்களை அன்புடன் மூடியும், (கச்சுக் கட்டைத்) தளர்த்தியும், கண்ணில் தெரியும்படி மஞ்சள் நீராடி மினுக்கியும், பஞ்சணை மீதில் ஏறி மந்திர சக்தி போல் விரைவில் ஆசையை உண்டாக்கி (வந்தவரைக்) கெஞ்சும்படி வைத்து, முன் தலை வாயில் அடைத்துச் சிங்கி கொள் மங்கையர் ஆசை விலக்கிப் பொன் பதம் அருள்வாயே ... முன் புறத்தில் உள்ள வாயிற் கதவை அடைத்து நாணம் இன்மையைக் கொண்ட மாதர்கள் மீது எனக்குள்ள ஆசையை விலக்கி, உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக. இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள் எண்படு சூரை அழித்துக் கொண்டு அருள் ஒரு பேடி இன்கன தேரை நடத்தி ... இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில் (இருந்த அரக்கர்களை எரி ஊட்டியும்), செவ்விய பூமி முதல் அண்ட கோளத்தில் இருந்தவர்களை (அவுணர்களின் துன்புறுத்தலிலிருந்தும்) காப்பாற்றியும், தேவர்களின் எண்ணத் தக்க துன்பத்தை நீக்கி, அவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும், ஒப்பற்ற பேடியாகிய அர்ச்சுனனுடைய அழகிய தேரை (சாரதியாய்) நடத்தியும், செம் குரு மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர் இன்புறு தோழ்மை உடைக் கத்தன் திரு மருகோனே ... செம்மையான குரு மண்டல நாட்டைப் பாண்டவர்களுக்குத் தந்து அப்பாண்டவர் ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவனான திருமாலின் அழகிய மருகனே, சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தம் இல் வாழ்வு அது பெற்றுத் தங்கிய சங்கரனார் செவி புக்கப் பண்பு அருள் குரு நாதா ... சந்திரனும் சூரியனும், திக்குகள் எட்டு இவை யாவும் புகழும் முடிவு இல்லா வாழ்வைப் பெற்று விளங்கும் சிவ பெருமானின் திருச்செவியில் புகும்படி பிரணவத்தை உபதேசித்தருளிய குரு மூர்த்தியே, சம்ப்ரமம் ஆன குறத்திக்கு இன்பு உறு கொங்கையின் மேவு சமர்த்தச் சுந்தர தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய பெருமாளே. ... சிறப்பு மிக்க குறத்தியாகிய வள்ளியின் இன்பம் பொலியும் மார்பகத்தை விரும்பி மேவும் சாமர்த்திய அழகனே, தண்ணிய தமிழ் வழங்கும் பழனி மலையில் தங்கி வீற்றிருக்கும் பெருமாளே.