பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய
பிணக்கிடும் சண்டிகள் வஞ்சமாதர்
புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு
வண் செம் துவர் தந்து போகம்
அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அறச் சிவந்த
அம் கையில் அன்பு மேவும்
அவர்க்கு உழன்று அங்கமும் அறத் தளர்ந்து என் பயன் அருள்
பதம் பங்கயம் அன்பு உறாதோ
மிருத்து அணும் பங்கயன் அலரக் க(ண்)ணன் சங்கரர்
விதித்து எணும் கும்பிடு(ம்) கந்த வேளே
மிகுத்திடும் வன் சமணரைப் பெரும் திண் கழு மிசைக்கு
இடும் செம் தமிழ் அங்க வாயா
பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கோடு திறல் செழும்
சந்து அகில் துன்றி நீடும்
தினைப் புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை
திருப்பரம் குன்று உறை தம்பிரானே.
மலை போன்ற மார்பினர், பொருளை அபகரித்து அதனால் உண்டாகும் (பண விஷயமாக) பிணக்கம் செய்யும் கொடியவர், வஞ்சகம் மிக்க விலைமாதர்கள், மேகம் போன்ற கூந்தல் சுருண்டுள்ளதாய், அழகியதாய், மணம் வீசுவதாய், கருமணற் கூட்டம் போல தங்கி விளங்கி, முருக்கிதழ் போன்று வளங் கொண்டு, செவ்விய பவளம் போன்ற இதழ்களால் போகத்தைத் தந்து, (கரண்டியால்) ஊட்டுகின்ற விஷம் போன்றவர்கள், வாது செய்து, செவ்விய கயல் மீன் போன்ற கண்கள் மிகச் சிவந்து, அழகிய கைப்பொருள் மீது ஆசை வைத்துள்ள அத்தகைய பொது மகளிர் பால் நான் உழன்று, உடலும் மிகத் தளர்வதால் என்ன பயன்? உனது திருவடித் தாமரை (என் மீது) அன்பு கொள்ளாதோ? இறத்தலோடு கூடிய பிரமன், மலர்ந்த கண்களை உடைய திருமால், சிவ பெருமான் (இம்மூவரும்) முறைப்படி எப்போதும் வணங்கும் கந்தப் பெருமானே, மிக்கு வந்த, வலிய சமணர்களை பெரிய திண்ணிய கழுவின் மேல் ஏற வைத்த, செந்தமிழ் (ஓதிய) வேதாங்க வாயனாகிய (தேவாரம் பாடிய) திருஞானசம்பந்தனே, பெருகிக் குளிர்ந்துள்ள சண்பகக் காட்டில் வாசனையோடு கூடிய, திண்ணியதாயச் செழித்த சந்தனமும் அகிலும் நெருங்கி வளர்ந்துள்ள தினைப் புனத்தில் பசுங் கொடி போன்ற வள்ளியை மார்புறச் சென்று தழுவுகின்றவனே, திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே.
பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய பிணக்கிடும் சண்டிகள் வஞ்சமாதர் ... மலை போன்ற மார்பினர், பொருளை அபகரித்து அதனால் உண்டாகும் (பண விஷயமாக) பிணக்கம் செய்யும் கொடியவர், வஞ்சகம் மிக்க விலைமாதர்கள், புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் ... மேகம் போன்ற கூந்தல் சுருண்டுள்ளதாய், அழகியதாய், மணம் வீசுவதாய், கருமணற் கூட்டம் போல தங்கி விளங்கி, முருக்கிதழ் போன்று வளங் கொண்டு, செவ்விய பவளம் போன்ற இதழ்களால் போகத்தைத் தந்து, அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அறச் சிவந்த அம் கையில் அன்பு மேவும் ... (கரண்டியால்) ஊட்டுகின்ற விஷம் போன்றவர்கள், வாது செய்து, செவ்விய கயல் மீன் போன்ற கண்கள் மிகச் சிவந்து, அழகிய கைப்பொருள் மீது ஆசை வைத்துள்ள அவர்க்கு உழன்று அங்கமும் அறத் தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்பு உறாதோ ... அத்தகைய பொது மகளிர் பால் நான் உழன்று, உடலும் மிகத் தளர்வதால் என்ன பயன்? உனது திருவடித் தாமரை (என் மீது) அன்பு கொள்ளாதோ? மிருத்து அணும் பங்கயன் அலரக் க(ண்)ணன் சங்கரர் விதித்து எணும் கும்பிடு(ம்) கந்த வேளே ... இறத்தலோடு கூடிய பிரமன், மலர்ந்த கண்களை உடைய திருமால், சிவ பெருமான் (இம்மூவரும்) முறைப்படி எப்போதும் வணங்கும் கந்தப் பெருமானே, மிகுத்திடும் வன் சமணரைப் பெரும் திண் கழு மிசைக்கு இடும் செம் தமிழ் அங்க வாயா ... மிக்கு வந்த, வலிய சமணர்களை பெரிய திண்ணிய கழுவின் மேல் ஏற வைத்த, செந்தமிழ் (ஓதிய) வேதாங்க வாயனாகிய (தேவாரம் பாடிய) திருஞானசம்பந்தனே, பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கோடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் ... பெருகிக் குளிர்ந்துள்ள சண்பகக் காட்டில் வாசனையோடு கூடிய, திண்ணியதாயச் செழித்த சந்தனமும் அகிலும் நெருங்கி வளர்ந்துள்ள தினைப் புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை ... தினைப் புனத்தில் பசுங் கொடி போன்ற வள்ளியை மார்புறச் சென்று தழுவுகின்றவனே, திருப்பரம் குன்று உறை தம்பிரானே. ... திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே.