வாசனைபொருந்திய அழகிய பூங்கொத்துக்களின் மீது தெந்தனம் தெந்தனம் என்று ரீங்காரம் செய்து கொண்டு வண்டுக் கூட்டங்கள் தேனை உண்ணப்பார்த்து தொடரும்படியான கூந்தலையுடைய பெண்களது நெருக்கமாய் உள்ள கொவ்வைக்கனி போன்ற இதழ் அமிர்தத்தைப் பருகிக் கொண்டு, ஆசை மிகும்படி கச்சணிந்த பெருத்த மார்பில் பொருந்த, அம்பை நிகர்த்த விழிகள் சோர்ந்து போக, சரீரம் மோகவசத்தால் குழைந்து போக, வயிறு என்னும் மடுவில் விழுகின்ற அடியேனை சிலம்பும், பொன்னால் ஆன தண்டையும், கிண்கிணியையும், அழகிய கடப்ப மலரையும் அணியும் உன் திருவடிகளில் சேர்ப்பாய். பன்றியின் அழகிய கொம்பையும், ஆமை ஓட்டையும், பாம்பையும், தேவர்களது பழைய எலும்புகளையும் தரிக்கும் சிவபிரானின் பாலனே, கூட்டில் இருந்துகொண்டு கொஞ்சுகின்ற கிளிப்பிள்ளைகள் கூட்டின் முகப்பில் மீண்டும் மீண்டும் வந்து ஐங்கரன் விநாயகனாம் ஞான பண்டிதனின் தம்பியே என்று கூறி அழைக்கின்ற, வயலூர் தலத்தில் வாசம் செய்யும் முருகனே, குன்றுகளில் வசிப்பவர்களாகிய வேடுவர்கள் முன்னாளில் கொடுத்த வள்ளிநாயகியாகிய பெண்ணை மணந்து கொண்டு வளர்ந்து ஓங்கிய செண்பக மரங்களின் பசும்பொன்னை ஒத்த மலர்கள் மிகுந்த சோலைகளால் சூழப்பெற்றதும், சந்திரனும், செஞ்சூரியனும், மேகமும் தங்கும்படி உயர்ந்ததும் ஆகிய அழகிய திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே.