எந்தத் திசையிலும், மலையிலும், கடலின் கரையில் உள்ள எந்தப் பூமியிலும், வீட்டுக் கூரையிலும், வசிக்கும் பலவகையான எந்த உயிரோடு சார்ந்த பிறப்புக்களிலும் நான் மீண்டும் உழன்று திரியாமல், இந்த உடலில் இருக்கும்பொழுதே என் உயிர் நிலைபெறுவதற்காக, தாமரை போன்ற அழகிய உனது திருவடிகளில் மணமுள்ள மலர் கொண்டு, என் சித்தமும், மனமும் உருகி சிறந்த வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி உன்னைச் சந்தித்து, ஹரஹர, சிவசிவ, சரணம் என்று நான் கும்பிட்டு, உன் இணை அடிகள் என் தலைமிசை பொருந்த, என் உடல் புளகாங்கிதம் அடைய, என் இரு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் அருவி போல் குதித்துப் பாய, மின்னற் கொடி போன்ற இடையுடைய தேவதையாம் தேவயானையின் அழகு முன்னே விளங்க, திரு நடனம் இடும் உன் திருவடிகள் அழகுடன் பொலிய, இந்த அழகான சபையில் எனது உள்ளம் உருகுமாறு வந்தருள்வாயாக. தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம என்ற தாளத்துக்கு உயர்ந்த திசைகளும், மலைகளும், கடல்களும் கலங்கும்படியாக சல்லரியும் (ஜாலரா), பேரி என்ற கொட்டும் நெருங்கி ஒலிக்க, முழங்கும் மணி கலகல கலினென சப்திக்க, தேவர்கள் மலர் மாரி பொழிய, பிரமன் வேதம் ஓதிப் புகழ, அசுரர்கள் துன்பம் அடைந்து யமன் உலகை அடையுமாறு செலுத்திய கூரிய வேலாயுதனே, வாசமிக்க ஜடாமுடியையும், நெருப்புப் போன்ற நிறமுள்ள உருவத்தையும், வெற்றியையும் கொண்ட எம் தந்தையாம் சிவபிரானுக்கு உயிர் போன்ற மலைமகள், மரகதப் பச்சை வடிவழகி, சந்தன மணம் வீசு மார்பினை உடையவளாகிய உமாதேவி அருளிய இளையவனே, தாமரை மலர்ப் பீடத்தில் ஏறி அமர்ந்துள்ள திருமகள், குலமகள், அழகிய பொற்கொடி போன்ற இடையை உடைய லக்ஷ்மி தேவியை மணந்துள்ள திருமாலின் மருகனே, நறுமணம் வீசும் சோலைகள் விளங்கும் குருமலை என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
எந்தத் திகையினு மலையினும் உவரியின் எந்தப் படியினும் ... எந்தத் திசையிலும், மலையிலும், கடலின் கரையில் உள்ள எந்தப் பூமியிலும், முகடினும் உளபல எந்தச் சடலமும் உயிரியை பிறவியின் உழலாதே ... வீட்டுக் கூரையிலும், வசிக்கும் பலவகையான எந்த உயிரோடு சார்ந்த பிறப்புக்களிலும் நான் மீண்டும் உழன்று திரியாமல், இந்தச் சடமுடன் உயிர்நிலை பெற ... இந்த உடலில் இருக்கும்பொழுதே என் உயிர் நிலைபெறுவதற்காக, நளினம்பொற் கழலிணைகளில் மருமலர்கொடு ... தாமரை போன்ற அழகிய உனது திருவடிகளில் மணமுள்ள மலர் கொண்டு, என்சித் தமுமனமு உருகிநல் சுருதியின் முறையோடே ... என் சித்தமும், மனமும் உருகி சிறந்த வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி சந்தித்து அரஹர சிவசிவ சரணென ... உன்னைச் சந்தித்து, ஹரஹர, சிவசிவ, சரணம் என்று நான் கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்க ... கும்பிட்டு, உன் இணை அடிகள் என் தலைமிசை பொருந்த, புளகித மெழஇரு விழிபுனல் குதிபாய ... என் உடல் புளகாங்கிதம் அடைய, என் இரு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் அருவி போல் குதித்துப் பாய, சம்பைக் கொடியிடை விபுதையின் அழகுமுன் ... மின்னற் கொடி போன்ற இடையுடைய தேவதையாம் தேவயானையின் அழகு முன்னே விளங்க, அந்தத் திருநடமிடு சரண் அழகுற ... திரு நடனம் இடும் உன் திருவடிகள் அழகுடன் பொலிய, சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே ... இந்த அழகான சபையில் எனது உள்ளம் உருகுமாறு வந்தருள்வாயாக. தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம ... தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம என்ற தாளத்துக்கு துங்கத் திசைமலை யுவரியு மறுக சலரி பேரி துன்ற ... உயர்ந்த திசைகளும், மலைகளும், கடல்களும் கலங்கும்படியாக சல்லரியும் (ஜாலரா), பேரி என்ற கொட்டும் நெருங்கி ஒலிக்க, சிலைமணி கலகல கலினென ... முழங்கும் மணி கலகல கலினென சப்திக்க, சிந்தச் சுரர்மலர் அயன்மறை புகழ்தர ... தேவர்கள் மலர் மாரி பொழிய, பிரமன் வேதம் ஓதிப் புகழ, துன்புற்று அவுணர்கள் நமனுலகு உற விடும் அயில்வேலா ... அசுரர்கள் துன்பம் அடைந்து யமன் உலகை அடையுமாறு செலுத்திய கூரிய வேலாயுதனே, கந்தச் சடைமுடி கனல்வடிவு அடலணி ... வாசமிக்க ஜடாமுடியையும், நெருப்புப் போன்ற நிறமுள்ள உருவத்தையும், வெற்றியையும் கொண்ட எந்தைக்கு உயிரெனு மலைமகள் ... எம் தந்தையாம் சிவபிரானுக்கு உயிர் போன்ற மலைமகள், மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையருள் இளையோனே ... மரகதப் பச்சை வடிவழகி, சந்தன மணம் வீசு மார்பினை உடையவளாகிய உமாதேவி அருளிய இளையவனே, கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள் ... தாமரை மலர்ப் பீடத்தில் ஏறி அமர்ந்துள்ள திருமகள், குலமகள், அம்பொற் கொடியிடை புணர் அரி மருக ... அழகிய பொற்கொடி போன்ற இடையை உடைய லக்ஷ்மி தேவியை மணந்துள்ள திருமாலின் மருகனே, நல் கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய பெருமாளே. ... நறுமணம் வீசும் சோலைகள் விளங்கும் குருமலை என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.