கோமள வெற்பினை ஒத்த தனத்தியர் காமனை ஒப்பவர் சித்தம் உருக்கிகள் கோவை இதழ்க் கனி நித்தமும் விற்பவர்
மயில் காடை கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணியப் புள் வகைக் குரல் கற்று இகல் கோல விழிக் கடை இட்டு மருட்டிகள்
விரகாலே தூம மலர்ப் ப(ள்)ளி மெத்தை படுப்பவர் யாரையும் எத்தி மனைக்குள் அழைப்பவர் சோலை வனக் கிளி ஒத்த மொழிச்சியர்
நெறி கூடா தூசு நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர் காசு பறிக்க மறித்த முயக்கிகள் தோதக வித்தை படித்து நடிப்பவர் உறவாமோ
மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி நிணக் குடலைக் கொடி வாரண மெச்ச அளித்த அயில் குக
கதிர் காம மா மலையில் பழநிப்பதியில் தனி மா கிரியில் தணிகைக் கிரியில் பர மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில்
ஏம வெயில் பல வெற்பினில் நல்பதினாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள் ஏது நினைத்தது மெத்த அளித்து அருள் இளையோனே
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மலைப் பதி மெச்சிய சித்த
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே.
அழகிய மலை போன்ற மார்பகங்களை உடையவர். காம இச்சை எழுப்புவதில் மன்மதனைப் போன்றவர். மனத்தை உருக்குபவர்கள். கொவ்வைப் பழம் போன்ற வாயிதழை தினந்தோறும் விற்பவர்கள். மயில், காடை என்னும் பறவை, குயில், அழகிய புறாவுடன், கோழி, காட்டுப் பறவைகளின் வகை வகையான குரல்களைக் கற்று அவ்வொலிகளை வெளிப்படுத்தி, பகைமையைக் காட்டும் அழகிய விழி அம்பைச் செலுத்தி உள்ளத்தை மயக்குபவர்கள். தந்திரத்துடன் நறும் அகில் மணம் கொண்ட மலர்ப் படுக்கையில் மெத்தையில் படுப்பவர்கள். எவரையும் ஏமாற்றி வீட்டுக்குள் அழைப்பவர்கள். சோலையிலுள்ள அழகிய கிளி போன்ற பேச்சினை உடையவர்கள். நன்னெறி பொருந்தாத வகையில் (தமது) ஆடையைத் தளர்த்தி பிறகு இடுப்பில் சுற்றியும் உடுப்பவர். தம்மிடம் வருவோர் பொருளை அபகரிக்க (பல விதத்தில்) இடையிலே விழுந்து சேர்பவர்கள். வஞ்சக வித்தைகளைக் கற்று நடிப்பவர்களாகிய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமோ? மாமர வடிவைக் கொண்டு கடலுக்குள் நெருக்கி நின்ற சூரனை வெட்டி அழித்து அவனுடைய மாமிசக் குடலை தனது கொடியிலுள்ள அக்கினி மகிழும்படி கொடுத்த வேலை ஏந்திய குகனே, கதிர்காமம் என்ற சிறந்த மலையிலும், பழனியிலும், தனிச்சயம் என்னும் தலத்திலும், திருத்தணி மலையிலும், திருப்பரங் குன்றம் என்னும் சிறந்த மலையிலும், அலைகள் சூழ்ந்து வளைந்துள்ள அலைவாய் என்கின்ற திருச் செந்தூரிலும், இன்பம் தரும் ஒளி வீசும் பல வேறு மலைகளிலும், நல்ல பதிநான்கு உலகங்களிலும் பொருந்தி இருக்கின்ற பக்தர்கள் எது நினைத்தாலும் அவற்றை நிரம்பக் கொடுத்து அருளும் இளையவனே, திருவேரகம் என்று சொல்லப்படும் அற்புதம் நிறைந்த சுவாமி மலை என்னும் ஊரில் விரும்பி இருக்கின்ற சித்த மூர்த்தியே, ராஜத குணம் நிறைந்தவளாகிய பார்வதி ஈன்றருளின பெருமாளே.
கோமள வெற்பினை ஒத்த தனத்தியர் காமனை ஒப்பவர் சித்தம் உருக்கிகள் கோவை இதழ்க் கனி நித்தமும் விற்பவர் ... அழகிய மலை போன்ற மார்பகங்களை உடையவர். காம இச்சை எழுப்புவதில் மன்மதனைப் போன்றவர். மனத்தை உருக்குபவர்கள். கொவ்வைப் பழம் போன்ற வாயிதழை தினந்தோறும் விற்பவர்கள். மயில் காடை கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணியப் புள் வகைக் குரல் கற்று இகல் கோல விழிக் கடை இட்டு மருட்டிகள் ... மயில், காடை என்னும் பறவை, குயில், அழகிய புறாவுடன், கோழி, காட்டுப் பறவைகளின் வகை வகையான குரல்களைக் கற்று அவ்வொலிகளை வெளிப்படுத்தி, பகைமையைக் காட்டும் அழகிய விழி அம்பைச் செலுத்தி உள்ளத்தை மயக்குபவர்கள். விரகாலே தூம மலர்ப் ப(ள்)ளி மெத்தை படுப்பவர் யாரையும் எத்தி மனைக்குள் அழைப்பவர் சோலை வனக் கிளி ஒத்த மொழிச்சியர் ... தந்திரத்துடன் நறும் அகில் மணம் கொண்ட மலர்ப் படுக்கையில் மெத்தையில் படுப்பவர்கள். எவரையும் ஏமாற்றி வீட்டுக்குள் அழைப்பவர்கள். சோலையிலுள்ள அழகிய கிளி போன்ற பேச்சினை உடையவர்கள். நெறி கூடா தூசு நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர் காசு பறிக்க மறித்த முயக்கிகள் தோதக வித்தை படித்து நடிப்பவர் உறவாமோ ... நன்னெறி பொருந்தாத வகையில் (தமது) ஆடையைத் தளர்த்தி பிறகு இடுப்பில் சுற்றியும் உடுப்பவர். தம்மிடம் வருவோர் பொருளை அபகரிக்க (பல விதத்தில்) இடையிலே விழுந்து சேர்பவர்கள். வஞ்சக வித்தைகளைக் கற்று நடிப்பவர்களாகிய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமோ? மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி நிணக் குடலைக் கொடி வாரண மெச்ச அளித்த அயில் குக ... மாமர வடிவைக் கொண்டு கடலுக்குள் நெருக்கி நின்ற சூரனை வெட்டி அழித்து அவனுடைய மாமிசக் குடலை தனது கொடியிலுள்ள அக்கினி மகிழும்படி கொடுத்த வேலை ஏந்திய குகனே, கதிர் காம மா மலையில் பழநிப்பதியில் தனி மா கிரியில் தணிகைக் கிரியில் பர மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில் ... கதிர்காமம் என்ற சிறந்த மலையிலும், பழனியிலும், தனிச்சயம் என்னும் தலத்திலும், திருத்தணி மலையிலும், திருப்பரங் குன்றம் என்னும் சிறந்த மலையிலும், அலைகள் சூழ்ந்து வளைந்துள்ள அலைவாய் என்கின்ற திருச் செந்தூரிலும், ஏம வெயில் பல வெற்பினில் நல்பதினாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள் ஏது நினைத்தது மெத்த அளித்து அருள் இளையோனே ... இன்பம் தரும் ஒளி வீசும் பல வேறு மலைகளிலும், நல்ல பதிநான்கு உலகங்களிலும் பொருந்தி இருக்கின்ற பக்தர்கள் எது நினைத்தாலும் அவற்றை நிரம்பக் கொடுத்து அருளும் இளையவனே, ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மலைப் பதி மெச்சிய சித்த ... திருவேரகம் என்று சொல்லப்படும் அற்புதம் நிறைந்த சுவாமி மலை என்னும் ஊரில் விரும்பி இருக்கின்ற சித்த மூர்த்தியே, இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே. ... ராஜத குணம் நிறைந்தவளாகிய பார்வதி ஈன்றருளின பெருமாளே.