பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான பணிகள் உலாவிட
இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே
நிர வரியோடு இயல் குழல்களின் நாண் மலர் நிரை தரும் மூரலின் நகை மீது
நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல் நிலை எழவே அலைவது ஆமோ
அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இட பாகமது உறை சோதி
அமை உமை டாகினி திரி புரை நாரணி அழகிய மாது அருள் புதல்வோனே
குரவு அணி பூஷண சரவண தேசிக குக கருணா நிதி அமரேசா
குற மகள் ஆனை மின் மருவிய பூரண குரு கிரி மேவிய பெருமாளே.
வணங்கிப் போற்றுதற்கு அரியதான மலை என்னும்படி பரந்துள்ள பெரிய மார்பகங்களின் மேல் அலங்காரமான அணிகலன்கள் விளங்க, நூல் போன்ற இடை சாயும்படி நடை பழகுபவருடைய ஒளி விளங்கும் அம்பு போன்ற கண்கள் மீதும், விரைந்து வரும் வண்டுகளோடு கூடியுள்ள கூந்தல்களின் புது மலர் மீதும், வரிசையாய் விளங்கி புன்சிரிப்பைக் காட்டும் பற்கள் மீதும், சந்திரனைப் போன்ற முகத்தின் மீதும் எழுகின்ற அதிக மோகம், நிலை பெற்று என் மனத்தில் தோன்றுவதால் என் நெஞ்சம் அலைபாயலாமோ? பாம்பைப் பொருந்திய குண்டலமாக உடைய பரம சிவன், வேதம் போற்றும் அரன் (எனப்படும் பெருமானுடைய) இடப் பாகத்தில் உறைகின்ற ஜோதி, அம்மை, உமாவாகிய பார்வதி, தேவி, திரி புரத்தை எரித்தவள், துர்க்கை, அழகிய மாதாகிய பார்வதி அருளிய மகனே, குரா மலரை அணிகின்ற ஆபரணமாகக் கொண்டவனே, சரவணனே, குரு மூர்த்தியே, குகனே, கருணை நிதியே, தேவர்களுக்கு ஈசனே, குறப் பெண்ணாகிய வள்ளி, (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட மின்னல் போன்ற தேவயானை (ஆகிய இருவரும்) சேர்ந்துள்ள முழுப் பொருளே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான பணிகள் உலாவிட ... வணங்கிப் போற்றுதற்கு அரியதான மலை என்னும்படி பரந்துள்ள பெரிய மார்பகங்களின் மேல் அலங்காரமான அணிகலன்கள் விளங்க, இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே ... நூல் போன்ற இடை சாயும்படி நடை பழகுபவருடைய ஒளி விளங்கும் அம்பு போன்ற கண்கள் மீதும், நிர வரியோடு இயல் குழல்களின் நாண் மலர் நிரை தரும் மூரலின் நகை மீது ... விரைந்து வரும் வண்டுகளோடு கூடியுள்ள கூந்தல்களின் புது மலர் மீதும், வரிசையாய் விளங்கி புன்சிரிப்பைக் காட்டும் பற்கள் மீதும், நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல் நிலை எழவே அலைவது ஆமோ ... சந்திரனைப் போன்ற முகத்தின் மீதும் எழுகின்ற அதிக மோகம், நிலை பெற்று என் மனத்தில் தோன்றுவதால் என் நெஞ்சம் அலைபாயலாமோ? அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இட பாகமது உறை சோதி ... பாம்பைப் பொருந்திய குண்டலமாக உடைய பரம சிவன், வேதம் போற்றும் அரன் (எனப்படும் பெருமானுடைய) இடப் பாகத்தில் உறைகின்ற ஜோதி, அமை உமை டாகினி திரி புரை நாரணி அழகிய மாது அருள் புதல்வோனே ... அம்மை, உமாவாகிய பார்வதி, தேவி, திரி புரத்தை எரித்தவள், துர்க்கை, அழகிய மாதாகிய பார்வதி அருளிய மகனே, குரவு அணி பூஷண சரவண தேசிக குக கருணா நிதி அமரேசா ... குரா மலரை அணிகின்ற ஆபரணமாகக் கொண்டவனே, சரவணனே, குரு மூர்த்தியே, குகனே, கருணை நிதியே, தேவர்களுக்கு ஈசனே, குற மகள் ஆனை மின் மருவிய பூரண குரு கிரி மேவிய பெருமாளே. ... குறப் பெண்ணாகிய வள்ளி, (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட மின்னல் போன்ற தேவயானை (ஆகிய இருவரும்) சேர்ந்துள்ள முழுப் பொருளே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.