வார் குழல் விரித்துத் தூக்கி வேல் விழி சுழற்றிப் பார்த்து வா என நகைத்துத் தோட்டு குழை ஆட வாசகம் உரைத்துச் சூத்ர பாவை என உறுப்பை காட்டி
வாசனை முலைக் கச்சு ஆட்டி அழகாகச் சீர் கலை நெகிழ்த்துப் போர்த்து நூல் இடை நெளித்துக் காட்டி தீ தெய நடித்துப் பாட்டு குயில் போல
சேர் உற அழைத்துப் பார்த்து சார்வு உற மருத்து இட்டு ஆட்டி சீர் பொருள் பறிப் பொய்க் கூத்தர் உறவு ஆமோ
சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி சூர் கிரி கொளுத்தி கூற்று உ(ஊ)ர் இடும் வேலா
தூ மொழி நகைத்துக் கூற்றை மாளிட உதைத்துக் கோத்த தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி திரிவோனே
ஏர் அணி சடைச்சிப் பால் சொல் ஆரணி சிறக்கப் போற்றும் ஏர் எழில் நிறத்துக் கூர்த்த மகவோனே
ஏடு அணி குழைச்சித் தூர்த்த ஆடகி குறத்திக்கு ஏற்ற ஏரக பொருப்பில் பூத்த பெருமாளே.
நீண்ட கூந்தலை விரித்தும், தூக்கி முடித்தும், வேல் போன்ற கண்களை சுழற்றிப் பார்த்தும், வா என்று அழைத்துச் சிரித்தும், தோடும் குண்டலமும் ஆட பேச்சுக்கள் பேசியும், இயந்திரப் பொம்மை என்று சொல்லும்படி பல அங்கங்களையும் காட்டியும், மணமுள்ள மார்பகங்களின் மேல் உள்ள கச்சை ஆட்டியும், அழகாக சீரான ஆடையை தளர்த்திப் போர்த்தும், நூல் போல் நுண்ணிய இடையை நெளித்துக் காட்டியும், தீ தெய்ய என்ற தாள வரிசைகளுடன் நடனம் செய்தும், பாடல்களைக் குயில் போல் பாடியும், தம்மைச் சேரும்படி அழைத்தும், தம்மையே சார்ந்திருக்கும்படி மருந்து வகைகளைத் தந்தும், தம் விருப்பப்படி ஆட்டி வைத்தும், சீரான பொருளைப் பறிக்கின்ற பொய்யான வேசையரது உறவு நல்லதாகுமோ? (ஆகாது என்றபடி), அசுரர்கள் பதைக்கவும், தேர்களையும் யானைகளையும் அழியும்படி தாக்கி, சூரனையும் அவனுடைய எழு கிரிகளையும் சுட்டெரித்து யம லோகத்துக்கு அனுப்பிய வேலனே, பரிசுத்தமான மொழியுடன் சிரித்து, (மார்க்கண்டருக்காக) யமனை இறக்கும்படி உதைத்து, உரித்து எடுத்த தோலை உடையாகக் கொண்ட என் தந்தையாகிய சிவபெருமானுக்கு (உபதேச மொழியை) இத்தலத்தில் உரைத்துப் போந்தவனே, அழகிய சடையை உடையவள், பால் போல் இனிய சொல்லை உடைய தேவி பார்வதி விசேஷமாகப் போற்றுகின்ற மிக்க அழகிய நிறம் விளங்குகின்ற குழந்தையே, பனை ஓலை இதழைக் குழையாகக் கொண்டவள், மண்ணால் மூடப்பட்ட பொன் போன்ற நிறத்தவள், (திருமாலின் மகள் சுந்தரவல்லியாகிய) குறப் பெண் வள்ளி நாயகிக்கு பொருத்தமானவனே, சுவாமி மலையில் விளங்கும் பெருமாளே.
வார் குழல் விரித்துத் தூக்கி வேல் விழி சுழற்றிப் பார்த்து வா என நகைத்துத் தோட்டு குழை ஆட வாசகம் உரைத்துச் சூத்ர பாவை என உறுப்பை காட்டி ... நீண்ட கூந்தலை விரித்தும், தூக்கி முடித்தும், வேல் போன்ற கண்களை சுழற்றிப் பார்த்தும், வா என்று அழைத்துச் சிரித்தும், தோடும் குண்டலமும் ஆட பேச்சுக்கள் பேசியும், இயந்திரப் பொம்மை என்று சொல்லும்படி பல அங்கங்களையும் காட்டியும், வாசனை முலைக் கச்சு ஆட்டி அழகாகச் சீர் கலை நெகிழ்த்துப் போர்த்து நூல் இடை நெளித்துக் காட்டி தீ தெய நடித்துப் பாட்டு குயில் போல ... மணமுள்ள மார்பகங்களின் மேல் உள்ள கச்சை ஆட்டியும், அழகாக சீரான ஆடையை தளர்த்திப் போர்த்தும், நூல் போல் நுண்ணிய இடையை நெளித்துக் காட்டியும், தீ தெய்ய என்ற தாள வரிசைகளுடன் நடனம் செய்தும், பாடல்களைக் குயில் போல் பாடியும், சேர் உற அழைத்துப் பார்த்து சார்வு உற மருத்து இட்டு ஆட்டி சீர் பொருள் பறிப் பொய்க் கூத்தர் உறவு ஆமோ ... தம்மைச் சேரும்படி அழைத்தும், தம்மையே சார்ந்திருக்கும்படி மருந்து வகைகளைத் தந்தும், தம் விருப்பப்படி ஆட்டி வைத்தும், சீரான பொருளைப் பறிக்கின்ற பொய்யான வேசையரது உறவு நல்லதாகுமோ? (ஆகாது என்றபடி), சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி சூர் கிரி கொளுத்தி கூற்று உ(ஊ)ர் இடும் வேலா ... அசுரர்கள் பதைக்கவும், தேர்களையும் யானைகளையும் அழியும்படி தாக்கி, சூரனையும் அவனுடைய எழு கிரிகளையும் சுட்டெரித்து யம லோகத்துக்கு அனுப்பிய வேலனே, தூ மொழி நகைத்துக் கூற்றை மாளிட உதைத்துக் கோத்த தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி திரிவோனே ... பரிசுத்தமான மொழியுடன் சிரித்து, (மார்க்கண்டருக்காக) யமனை இறக்கும்படி உதைத்து, உரித்து எடுத்த தோலை உடையாகக் கொண்ட என் தந்தையாகிய சிவபெருமானுக்கு (உபதேச மொழியை) இத்தலத்தில் உரைத்துப் போந்தவனே, ஏர் அணி சடைச்சிப் பால் சொல் ஆரணி சிறக்கப் போற்றும் ஏர் எழில் நிறத்துக் கூர்த்த மகவோனே ... அழகிய சடையை உடையவள், பால் போல் இனிய சொல்லை உடைய தேவி பார்வதி விசேஷமாகப் போற்றுகின்ற மிக்க அழகிய நிறம் விளங்குகின்ற குழந்தையே, ஏடு அணி குழைச்சித் தூர்த்த ஆடகி குறத்திக்கு ஏற்ற ஏரக பொருப்பில் பூத்த பெருமாளே. ... பனை ஓலை இதழைக் குழையாகக் கொண்டவள், மண்ணால் மூடப்பட்ட பொன் போன்ற நிறத்தவள், (திருமாலின் மகள் சுந்தரவல்லியாகிய) குறப் பெண் வள்ளி நாயகிக்கு பொருத்தமானவனே, சுவாமி மலையில் விளங்கும் பெருமாளே.