அருக்கி மெத்தெனச் சிரித்து உருக்கி இட்டு உ(ள்)ளக் கருத்து அழித்து அறக் கறுத்த கண் பயிலாலே
அழைத்து அகப் படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்து அபத்தம் உற்று
வித்தகர் போலத் தரிக்கும் வித்தரிக்கும்
மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் சமைத்து உரைத்து
இமைப்பினில் சடக்கெனப் படுத்து எழச் சறுக்கும் இப் பிறப்பு பெற்றிடலாமோ
பொருக்கு எழக் கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்பு உற
பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் புடைத்து இடித்து அடல் கரத்து உறப் பிடித்த
கற்பகப் புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா
திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த
மைக் குறத்தியைத் தினைப் புனக் கிரித் தலத்து இடை தோயும்
சிவத்த குக்குடக் கொடிச் செருக்க உற்பலச் சுனைச் சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே.
சுருக்கமாகவும், அமைதியுடனும் சிரித்து, காண்பவர்களின் மனதை உருக்கி உள்ளக் கருத்தை அழித்து, மிகவும் கருநிறமுள்ள கண்களின் குறிப்புகளால், அழைத்து தம் வலைக்குள் அகப்பட வைத்து, ஒன்றையும் விடாமல் பொருளைப் பறிக்கும் வேசியர்களிடம் செல்கின்ற தவறைச் செய்தும், அறிவாளி போல் நடித்தும், விரிவாகப் பேசியும், மேலான உண்மைகளை எடுத்துப் பேசும் கீர்த்தி (தன்னைப் போல்) எந்த ஊரிலும் வேறு யார்க்கும் கிடையாது என்று சொல்லும்படி ஞானப் பேச்சுகளை புதிதாகப் படைத்துப் பேசியும், ஒரு இமைப் பொழுதில் வேகத்துடன் படுத்து எழுதல் போல நழுவி ஒழியும் இந்த நிலையாப் பிறவியைப் பெற்றிடல் நன்றோ? வறண்டு உலர்ந்த காட்சி எழும்படி கடல் வற்றவும், அசுரர்களின் கூட்டம் மடிந்து ஒழியவும், கிரெளஞ்ச மலையில் நிரம்ப இருந்த மாயம் உடைந்து அழியவும், வலிமையான திருக்கரத்தில் தங்கும்படி பிடித்த (வேலனே), கற்பக புரியாகிய தேவநாட்டின் மீது அருள் வைத்த அழகிய கதிர் வேலனே, செப்பிய முத்தமிழ்ப் பாடலுக்கு ஒப்பற்றவனாய் நிற்பவனே, மை தீட்டிய கண்களை உடைய வள்ளியை தினைப் புனம் உள்ள வள்ளிமலை நாட்டில் அணைந்தவனே, சிவப்பு நிறம் கொண்ட சேவற்கொடி பெருமிதம் அடைய, நீலோற்பலம் மலர்கின்ற சுனையை உடைய சிறப்புள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
அருக்கி மெத்தெனச் சிரித்து உருக்கி இட்டு உ(ள்)ளக் கருத்து அழித்து அறக் கறுத்த கண் பயிலாலே ... சுருக்கமாகவும், அமைதியுடனும் சிரித்து, காண்பவர்களின் மனதை உருக்கி உள்ளக் கருத்தை அழித்து, மிகவும் கருநிறமுள்ள கண்களின் குறிப்புகளால், அழைத்து அகப் படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்து அபத்தம் உற்று ... அழைத்து தம் வலைக்குள் அகப்பட வைத்து, ஒன்றையும் விடாமல் பொருளைப் பறிக்கும் வேசியர்களிடம் செல்கின்ற தவறைச் செய்தும், வித்தகர் போலத் தரிக்கும் வித்தரிக்கும் ... அறிவாளி போல் நடித்தும், விரிவாகப் பேசியும், மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் சமைத்து உரைத்து ... மேலான உண்மைகளை எடுத்துப் பேசும் கீர்த்தி (தன்னைப் போல்) எந்த ஊரிலும் வேறு யார்க்கும் கிடையாது என்று சொல்லும்படி ஞானப் பேச்சுகளை புதிதாகப் படைத்துப் பேசியும், இமைப்பினில் சடக்கெனப் படுத்து எழச் சறுக்கும் இப் பிறப்பு பெற்றிடலாமோ ... ஒரு இமைப் பொழுதில் வேகத்துடன் படுத்து எழுதல் போல நழுவி ஒழியும் இந்த நிலையாப் பிறவியைப் பெற்றிடல் நன்றோ? பொருக்கு எழக் கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்பு உற ... வறண்டு உலர்ந்த காட்சி எழும்படி கடல் வற்றவும், அசுரர்களின் கூட்டம் மடிந்து ஒழியவும், பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் புடைத்து இடித்து அடல் கரத்து உறப் பிடித்த ... கிரெளஞ்ச மலையில் நிரம்ப இருந்த மாயம் உடைந்து அழியவும், வலிமையான திருக்கரத்தில் தங்கும்படி பிடித்த (வேலனே), கற்பகப் புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா ... கற்பக புரியாகிய தேவநாட்டின் மீது அருள் வைத்த அழகிய கதிர் வேலனே, திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த ... செப்பிய முத்தமிழ்ப் பாடலுக்கு ஒப்பற்றவனாய் நிற்பவனே, மைக் குறத்தியைத் தினைப் புனக் கிரித் தலத்து இடை தோயும் ... மை தீட்டிய கண்களை உடைய வள்ளியை தினைப் புனம் உள்ள வள்ளிமலை நாட்டில் அணைந்தவனே, சிவத்த குக்குடக் கொடிச் செருக்க உற்பலச் சுனைச் சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே. ... சிவப்பு நிறம் கொண்ட சேவற்கொடி பெருமிதம் அடைய, நீலோற்பலம் மலர்கின்ற சுனையை உடைய சிறப்புள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.