எலும்பு, நாடிகள், நீருடனும், ரத்தத்துடனும், அழுக்குகள், மூளைகள், தகுதியின்றி உள்ளிருக்கும் புழுக்கள், இவையாவும் நிறைந்திருக்கும் வீடு இந்த உடல். அத்தகைய வீட்டில் எத்தனை குணத்து மோசக்காரர்கள், அக்கிரமக்காரர்கள், சூதான உள்ளத்து மக்கள், தம் வறட்டுப் பேச்சால் ஊரையே ஏமாற்றுபவர்கள், பூமியில் தோன்றி, பிறந்த பிறப்புடன் முன்னேற்றம் இன்றி இருப்பவர்கள், வீடுகள் பலவற்றைக் கட்டி மிகவும் அலட்டிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றதைப் பேசித் திரிபவர், மோகவலையில் விழுந்து கிடக்கும் துஷ்டர்கள், பெரிய தவநிலையைப்பற்றி சற்றேனும் நினைத்துப் பார்க்காமல் அழிப்பவர்கள், யாவரையும் கெடுப்பவர்கள், நண்பர்களுக்கும் வஞ்சனை செய்பவர்கள், கொலைகாரர்கள், செருக்கு மிகுந்தவர்கள், கோள் சொல்பவர்கள் முதலியோருடன் சேர்ந்து திரிந்து திருட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள், கோப நெஞ்சினர் ஆகியோரையும், எத்தனை வியாதிகள் உண்டோ அத்தனையையும், வெற்றி பெற உழலும் இத்தகைய உடலாகிய வீட்டை நான் ஆசைப்பட்டு எடுத்து இந்த உலகில் அலைந்து திரிவேனோ? ஒலிக்கின்ற பல முரசு வாத்தியங்கள் முழங்கும் கடுமையான போர்க்களத்தில் எதிர்த்துவந்த அசுர வீரர்களை வெட்டி அழித்து, மாயை சூழ்ந்த கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்து, தேவர்களும் சித்தர்களும் வணங்கும்படியாகச் செலுத்திய வேலை உடையவனே, காமாந்தகனான ராவணனைச் சிரம் அற்று விழ அவனை வதைத்தவனும், (தன் பாதத்தை அவன் தலைமேல் வைத்து) மகாபலியைப் பாதாளத்தில் தள்ளிச் சிறை வைத்தவனும், இரும்பு உலக்கையைப் பொடிப்பொடியாக்கி நடுக்கடலில் கரைத்தவனும் ஆகிய திருமாலின் மருகனே, வலி உண்டாகும்படியாக வேதப் பிரமனை சிரங்களில் குட்டினவனே, நடனம் செய்து ஒப்பற்ற உலகத்தை ஈன்ற தாயான பச்சை நிறப் பார்வதியை மணந்த தந்தையாகிய பரப்பிரம்மப் பொருளான சிவபிரானுக்கு உபதேசித்து அருளிய குருநாதனே, காட்டிலே வாழும் மயிலினம் போன்ற அழகியான குறத்தியாகிய வள்ளிதேவியை மயக்கி அணைத்து, மனமகிழ்ச்சியுடன் திருத்தணித்தலத்தில் பற்றுடன் வீற்றிருக்கும் பெருமாளே.