கனத்த அறப் பணைத்த பொன் கழைப் புயத் தனக் கிரி
கனத்தை ஒத்து மொய்த்த மைக் குழலார் தம்
கறுத்த மைக் க(ண்)ணில் கருத்து வைத்து
ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே
இனப் பிணிக் கணத்தினுக்கு இருப்பு எனத் துருத்தி ஒத்து இசைத்து
அசைத்து அ(ச்) சுக்கிலம் தசை தோலால் எடுத்த பொய்க் கடத்தினைப் பொறுக்கும்
இப் பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியைத் தரவேணும்
பனைக் கரச் சினத்து இபத்தனைத் துரத்து அரக்கனைப் பயத்தினில் பயப்படப் பொரும் வேலா
பருப்பதச் செருக்கு அறத் துகைக்கும் முள் பதத்தினைப் படைத்த குக்குடக் கொடிக் குமரேசா
தினைப் புனப் பருப்பதத்தினில் குடிக் குறத்தியைச் செருக்கு உறத் திருப் புயத்து அணைவோனே
திருப் புரப் புறத்து இயல் திருத் தகுத் து நித்தல
திருத் திசைத் திருத்தணிப் பெருமாளே.
திண்ணியதாய் மிகப் பருமையுடைய அழகிய மூங்கில் போன்ற மென்மையான தோள்களிலும், மலைகள் போன்ற மார்பகங்களிலும், மேகத்தை ஒத்து அடர்ந்த கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய (விலை) மாதர்களின் கறுத்த மை தீட்டிய கயல்மீன் போன்ற கண்களிலும் (எனது) எண்ணங்களை வைத்து, ஒப்பற்ற உனது கழல் அணிந்த திருவடிகளைச் சேர்வதற்கு அறியாமல், தொகுதியான நோய்களின் கூட்டத்துக்கு இருப்பிடம் என்று சொல்லும்படி, உலை ஊது கருவி போல் ஒலி செய்து (மேலும் மேலும் பெருமூச்சு விட்டு), கட்டுண்ணும் அந்த இந்திரியங்கள், ஊன், தோல் இவைகளால் எடுக்கப்பட்ட நிலையில்லாத உடம்பைச் சுமக்கின்ற இந்தப் பிறப்பை ஒழித்து, எனக்கு அழியாத முத்தியைத் தந்தருள வேண்டும். பனை மரம் போன்ற துதிக்கையையும் கோபமும் கொண்ட வெள்ளை யானையாகிய ஐராவதத்தை உடைய இந்திரனைத் துரத்தி ஓட்டிய சூரனை, (சமுத்திரமாகிய) கடல் நீரில் பயப்படும்படி ஓட்டிச் சண்டை செய்த வேலனே, மலைகளின் கர்வம் அடங்கி ஒழியும்படி மிதித்துச் சவட்டும் முள் போன்ற நுனிகள் உடைய கால்களைக் கொண்ட கோழியைக் கொடியாகக் கொண்ட குமரேசனே, தினைப் புனம் உள்ள (வள்ளி) மலையில் குடிகொண்டிருந்த குறப்பெண்ணாகிய வள்ளியை மகிழ்ச்சியுடன் அழகிய புயங்களில் அணைபவனே, அழகிய ஊரின் வெளிப்புறப் பகுதிகளில் (உள்ள வயல்களில்) லக்ஷ்மிகரம் பொருந்திய, பரிசுத்தமான முத்துக்கள் விளங்கும் புண்ணிய திசையாகிய (தமிழ்நாட்டுக்கு) வடக்கில் உள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
கனத்த அறப் பணைத்த பொன் கழைப் புயத் தனக் கிரி ... திண்ணியதாய் மிகப் பருமையுடைய அழகிய மூங்கில் போன்ற மென்மையான தோள்களிலும், மலைகள் போன்ற மார்பகங்களிலும், கனத்தை ஒத்து மொய்த்த மைக் குழலார் தம் ... மேகத்தை ஒத்து அடர்ந்த கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய (விலை) மாதர்களின் கறுத்த மைக் க(ண்)ணில் கருத்து வைத்து ... கறுத்த மை தீட்டிய கயல்மீன் போன்ற கண்களிலும் (எனது) எண்ணங்களை வைத்து, ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே ... ஒப்பற்ற உனது கழல் அணிந்த திருவடிகளைச் சேர்வதற்கு அறியாமல், இனப் பிணிக் கணத்தினுக்கு இருப்பு எனத் துருத்தி ஒத்து இசைத்து ... தொகுதியான நோய்களின் கூட்டத்துக்கு இருப்பிடம் என்று சொல்லும்படி, உலை ஊது கருவி போல் ஒலி செய்து (மேலும் மேலும் பெருமூச்சு விட்டு), அசைத்து அ(ச்) சுக்கிலம் தசை தோலால் எடுத்த பொய்க் கடத்தினைப் பொறுக்கும் ... கட்டுண்ணும் அந்த இந்திரியங்கள், ஊன், தோல் இவைகளால் எடுக்கப்பட்ட நிலையில்லாத உடம்பைச் சுமக்கின்ற இப் பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியைத் தரவேணும் ... இந்தப் பிறப்பை ஒழித்து, எனக்கு அழியாத முத்தியைத் தந்தருள வேண்டும். பனைக் கரச் சினத்து இபத்தனைத் துரத்து அரக்கனைப் பயத்தினில் பயப்படப் பொரும் வேலா ... பனை மரம் போன்ற துதிக்கையையும் கோபமும் கொண்ட வெள்ளை யானையாகிய ஐராவதத்தை உடைய இந்திரனைத் துரத்தி ஓட்டிய சூரனை, (சமுத்திரமாகிய) கடல் நீரில் பயப்படும்படி ஓட்டிச் சண்டை செய்த வேலனே, பருப்பதச் செருக்கு அறத் துகைக்கும் முள் பதத்தினைப் படைத்த குக்குடக் கொடிக் குமரேசா ... மலைகளின் கர்வம் அடங்கி ஒழியும்படி மிதித்துச் சவட்டும் முள் போன்ற நுனிகள் உடைய கால்களைக் கொண்ட கோழியைக் கொடியாகக் கொண்ட குமரேசனே, தினைப் புனப் பருப்பதத்தினில் குடிக் குறத்தியைச் செருக்கு உறத் திருப் புயத்து அணைவோனே ... தினைப் புனம் உள்ள (வள்ளி) மலையில் குடிகொண்டிருந்த குறப்பெண்ணாகிய வள்ளியை மகிழ்ச்சியுடன் அழகிய புயங்களில் அணைபவனே, திருப் புரப் புறத்து இயல் திருத் தகுத் து நித்தல ... அழகிய ஊரின் வெளிப்புறப் பகுதிகளில் (உள்ள வயல்களில்) லக்ஷ்மிகரம் பொருந்திய, பரிசுத்தமான முத்துக்கள் விளங்கும் திருத் திசைத் திருத்தணிப் பெருமாளே. ... புண்ணிய திசையாகிய (தமிழ்நாட்டுக்கு) வடக்கில் உள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.