குருவி எனப் பல கழுகு நரித் திரள் அரிய வனத்து இடை மிருகம் எனப் புழு குறவை எனக் கரி மரமும் எனத் திரி உறவு ஆகா
குமரி கலித் துறை முழுகி மனத்துயர் கொடுமை எனப் பிணி கலகமிட
திரி குலையன் எனப் புலை கலியன் எனப் பலர் நகையாமல்
மருவு புயத்து இடை பணிகள் அ(ண்)ணப் பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து
ஒரு மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன்
வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பதச் சரண்
மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே
விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனக் குகு என வெகு தாளம்வெருவ முகிழ்த்து
இசை உரகன் முடித் தலை நெறு நெறு என
திசை அதிர அடைத்திட மிகுதி கெடப் பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா
அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடித் தலை உரியும் மழுக் கையன்
அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் அருள்சேயே
அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே.
குருவி போலவும், பல கழுகுகள் நரிகள் கூட்டம் போலவும், அரிய காட்டில் உள்ள விலங்குகள் போலவும், புழு, குறவை மீன் போலவும், யானை போலவும், மரம் போலவும் திரிபவர்களுடைய நட்பு கூடாது. குமரிப் பெண்களால் வரும் மனக் கவலை தரும் செயல்களில் படிந்து, மனத்துயரும் கொடுமைகளும் நோய்களும் வருத்த, அலைந்து திரிகின்ற நிலை கெட்டவன் இவன் என்றும், இழிவானவன், தரித்திரன் இவன் என்றும் என்னைப் பலரும் பரிகாசம் செய்யாமல், பொருந்திய தோள்களில் அணிகலன்கள் நெருங்கி விளங்கவும், பல யானைகள், குதிரைகள் சூழ்ந்து வர, பட்டு ஆடைகளை உடுத்தி, ஒப்பற்ற மன்மதனின் வியாபாரப் பண்டம் இவன் என்று (கண்டோர் வியக்க), பொன்னாலாகிய பல்லக்கில் செல்லும் பெருமையை நான் தேட மாட்டேன். இசைப் பாக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப்பெருக்கு பெருகும் இடமாக அமைய வேண்டிய இடம் அடைக்கலம் தரும் உன் திருவடியே ஆகும். (ஆதலால் அத்திருவடியைச்) சேருதற்குரிய திருப்புகழ் பாக்களை நான் பாட எனக்கு அருள் புரிவாயாக. வெற்றி முழக்கமாக, தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனவும், குகு என்றும் பல தாளங்கள் அச்சம் தரும்படியாக ஒலித்து, புகழ் பெற்ற ஆதிசேஷனுடைய மணிமுடித் தலைகள் நெறுநெறு என்று இடிபட, திசைகள் அதிர்ச்சி கொள்ளும்படி நெருங்கி அடைபட, தங்கள் கூட்டம் அழியும்படி சண்டை செய்த அசுரர்கள் சிதறுண்டு முறிய செலுத்திய வேலனே, அரிய திரி புரங்கள் எரிந்து விழ (நெற்றிக் கண்ணால்) விழித்தவனும், பிரமனது முடித்தலையை அரிந்த மழுவை ஏந்திய கையை உடையவனும், எல்லா உலகங்களையும் உயிர்களையும் காப்பவனுமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, (திருஞான சம்பந்தராக வந்து) சமணர்களின் உடல் அழிய அவர்களைக் கழுவில் ஏறச்செய்தவனே, விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் போற்றி வளர்த்த மங்கையாகிய தேவயானை, குற மகளாகிய வள்ளி இவர்களுடன் அழகு வாய்ந்த திருத்தணி மலையில் நடனம் புரிந்தருளும் பெருமாளே.
குருவி எனப் பல கழுகு நரித் திரள் அரிய வனத்து இடை மிருகம் எனப் புழு குறவை எனக் கரி மரமும் எனத் திரி உறவு ஆகா ... குருவி போலவும், பல கழுகுகள் நரிகள் கூட்டம் போலவும், அரிய காட்டில் உள்ள விலங்குகள் போலவும், புழு, குறவை மீன் போலவும், யானை போலவும், மரம் போலவும் திரிபவர்களுடைய நட்பு கூடாது. குமரி கலித் துறை முழுகி மனத்துயர் கொடுமை எனப் பிணி கலகமிட ... குமரிப் பெண்களால் வரும் மனக் கவலை தரும் செயல்களில் படிந்து, மனத்துயரும் கொடுமைகளும் நோய்களும் வருத்த, திரி குலையன் எனப் புலை கலியன் எனப் பலர் நகையாமல் ... அலைந்து திரிகின்ற நிலை கெட்டவன் இவன் என்றும், இழிவானவன், தரித்திரன் இவன் என்றும் என்னைப் பலரும் பரிகாசம் செய்யாமல், மருவு புயத்து இடை பணிகள் அ(ண்)ணப் பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ... பொருந்திய தோள்களில் அணிகலன்கள் நெருங்கி விளங்கவும், பல யானைகள், குதிரைகள் சூழ்ந்து வர, பட்டு ஆடைகளை உடுத்தி, ஒரு மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன் ... ஒப்பற்ற மன்மதனின் வியாபாரப் பண்டம் இவன் என்று (கண்டோர் வியக்க), பொன்னாலாகிய பல்லக்கில் செல்லும் பெருமையை நான் தேட மாட்டேன். வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பதச் சரண் ... இசைப் பாக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப்பெருக்கு பெருகும் இடமாக அமைய வேண்டிய இடம் அடைக்கலம் தரும் உன் திருவடியே ஆகும். மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே ... (ஆதலால் அத்திருவடியைச்) சேருதற்குரிய திருப்புகழ் பாக்களை நான் பாட எனக்கு அருள் புரிவாயாக. விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனக் குகு என வெகு தாளம்வெருவ முகிழ்த்து ... வெற்றி முழக்கமாக, தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனவும், குகு என்றும் பல தாளங்கள் அச்சம் தரும்படியாக ஒலித்து, இசை உரகன் முடித் தலை நெறு நெறு என ... புகழ் பெற்ற ஆதிசேஷனுடைய மணிமுடித் தலைகள் நெறுநெறு என்று இடிபட, திசை அதிர அடைத்திட மிகுதி கெடப் பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா ... திசைகள் அதிர்ச்சி கொள்ளும்படி நெருங்கி அடைபட, தங்கள் கூட்டம் அழியும்படி சண்டை செய்த அசுரர்கள் சிதறுண்டு முறிய செலுத்திய வேலனே, அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடித் தலை உரியும் மழுக் கையன் ... அரிய திரி புரங்கள் எரிந்து விழ (நெற்றிக் கண்ணால்) விழித்தவனும், பிரமனது முடித்தலையை அரிந்த மழுவை ஏந்திய கையை உடையவனும், அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் அருள்சேயே ... எல்லா உலகங்களையும் உயிர்களையும் காப்பவனுமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு ... (திருஞான சம்பந்தராக வந்து) சமணர்களின் உடல் அழிய அவர்களைக் கழுவில் ஏறச்செய்தவனே, விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் போற்றி வளர்த்த மங்கையாகிய தேவயானை, குற மகளாகிய வள்ளி இவர்களுடன் அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே. ... அழகு வாய்ந்த திருத்தணி மலையில் நடனம் புரிந்தருளும் பெருமாளே.