கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால் அழைத்து மலர் அணை மீதே
கோபா இதழ்ப் பருக மார்போடு அணைத்து க(ண்)ணை கோல் போல் சுழற்றி இடை உடை நாணக் கார் போல் குழல் சரியவே
வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும் காமா மயக்கியர்கள் ஊடே களித்து நம(ன்) கான் ஊர் உறைக் கலகம் ஒழியாதோ
வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேத ஆகமத்து ஒலிகள் கடல் போல வீறாய் முழக்க வரு(ம்) சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே
மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா போதகத்தை அருள் குரு நாதா
மாலோன் அளித்த வ(ள்)ளியார் மால் களிப்ப வெகு மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே.
கூர்மையான வேலாயுதத்தைப் பழித்து வென்ற கண்களாலே வருபவரை மயக்குவித்து, மலை போன்ற மார்பால் வரவழைத்து, மலர்ப் படுக்கை மேல் தம்பலப் பூச்சி போலச் சிவந்த வாயிதழ் ஊறலை உண்ணும்படி மார்புறத் தழுவி, கண்ணை அம்பு போலச் சுழற்றி, இடையில் உள்ள ஆடை நெகிழவும், மேகம் போல் கருப்பான கூந்தல் சரியவும், வாய் அதட்டும் சொற்களைப் பேசவும், இரண்டு காதுகளில் உள்ள ஓலைகளும் கழன்று விழவும், லீலைகளைச் செய்து காம மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மகளிருடன் மகிழ்வுற்று, யமனுடைய நரகில் சேர்ந்து இருக்கும்படியான குழப்பம் என்னை விட்டு அகலாதோ? வீராணம் என்னும் பெரிய பறை, வெற்றி முரசாகிய ஜய பேரிகை, மேள வகை, திமிலை என்ற பறை, வேதாகம ஒலிகள் இவையெல்லாம் கடல் போல மிக்க சிறப்புடன் முழக்கம் செய்ய, எதிர்த்து வந்த சூரர்கள் இறக்கும்படி செலுத்திய வேலாயுதனே, திருத்தணிகைப் பதியில் வீற்றிருப்பவனே, மன்மதன் இறக்கும்படி சிரித்த தந்தையின் காதுகளில் சிறந்த ஞானோபதேசத்தை அருளிய குரு நாதனே, திருமால் பெற்ற வள்ளி அம்மை மிக்க மகிழ்ச்சிகொள்ள, அதிக ஆசையுடன் அவளை அணைத்து மகிழ்ந்த பெருமாளே.
கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால் அழைத்து மலர் அணை மீதே ... கூர்மையான வேலாயுதத்தைப் பழித்து வென்ற கண்களாலே வருபவரை மயக்குவித்து, மலை போன்ற மார்பால் வரவழைத்து, மலர்ப் படுக்கை மேல் கோபா இதழ்ப் பருக மார்போடு அணைத்து க(ண்)ணை கோல் போல் சுழற்றி இடை உடை நாணக் கார் போல் குழல் சரியவே ... தம்பலப் பூச்சி போலச் சிவந்த வாயிதழ் ஊறலை உண்ணும்படி மார்புறத் தழுவி, கண்ணை அம்பு போலச் சுழற்றி, இடையில் உள்ள ஆடை நெகிழவும், மேகம் போல் கருப்பான கூந்தல் சரியவும், வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும் காமா மயக்கியர்கள் ஊடே களித்து நம(ன்) கான் ஊர் உறைக் கலகம் ஒழியாதோ ... வாய் அதட்டும் சொற்களைப் பேசவும், இரண்டு காதுகளில் உள்ள ஓலைகளும் கழன்று விழவும், லீலைகளைச் செய்து காம மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மகளிருடன் மகிழ்வுற்று, யமனுடைய நரகில் சேர்ந்து இருக்கும்படியான குழப்பம் என்னை விட்டு அகலாதோ? வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேத ஆகமத்து ஒலிகள் கடல் போல வீறாய் முழக்க வரு(ம்) சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே ... வீராணம் என்னும் பெரிய பறை, வெற்றி முரசாகிய ஜய பேரிகை, மேள வகை, திமிலை என்ற பறை, வேதாகம ஒலிகள் இவையெல்லாம் கடல் போல மிக்க சிறப்புடன் முழக்கம் செய்ய, எதிர்த்து வந்த சூரர்கள் இறக்கும்படி செலுத்திய வேலாயுதனே, திருத்தணிகைப் பதியில் வீற்றிருப்பவனே, மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா போதகத்தை அருள் குரு நாதா ... மன்மதன் இறக்கும்படி சிரித்த தந்தையின் காதுகளில் சிறந்த ஞானோபதேசத்தை அருளிய குரு நாதனே, மாலோன் அளித்த வ(ள்)ளியார் மால் களிப்ப வெகு மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே. ... திருமால் பெற்ற வள்ளி அம்மை மிக்க மகிழ்ச்சிகொள்ள, அதிக ஆசையுடன் அவளை அணைத்து மகிழ்ந்த பெருமாளே.