பூங்கொத்துக்களால் நிறைந்த குராமரத்து அடியிலும், அடியார்களின் இதயத் தாமரையின் நடுவிலும், பல நெறிகளைக் கொண்ட வேதத்தின் நல்ல முடிவிலும், விளங்குகின்ற குருநாதனே, கொங்கு நாட்டில் அழகு நிறைந்த பழனியில் ஆறுமுகனாக எழுந்தருளியவனே, திருச்செந்தூரில் காவற்காரனாக விளங்குபவனே, திருத்தணிகையில் இணையில்லாதவனாக விளங்குபவனே, கூட்டமாக இரைச்சலுடன் தர்க்கித்து வருகின்ற, அநேக யுக்திகளைக்கொண்டு கொண்டு விரோதிக்கின்ற, சமயவாதிகளால் பெறுவதற்கு அரிதானதும், அன்னியர்களால் சந்திக்க முடியாததும், தனக்கே உரிய ஓர் ஒப்பற்ற பரம்பரையாக வருவதும், இதுவே என்று எனக்கு உபதேசித்து, வாசனை பொருந்திய கடம்பமாலை அணிந்ததும், வண்டினம் ஒலிப்பதும், பொன்னால் ஆன சிறுசலங்கைகளைத் தரித்ததுமான, சுகம் தரும் இரு திருவடித் தாமரைகளைத் தந்த பெரிய கிருபையை கனவிலும் நனவிலும் மறவேன். நதியையும் (கங்கை), ஆத்திமலரையும், கொன்றையையும், இளமையும் புதுமையும் உடைய பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்துள்ள சிவந்த சடையுடைய சிவபெருமானது அழகிய குழந்தையாக அவதரித்த முருகனே, செண்பகமரங்கள் நிறை வனத்திலும், பரண்மீதும், உயரமான சந்தன மரக் காட்டிலும் வாசம் செய்த குறமகள் வள்ளியின் செம்பொன் சிலம்பை அணிந்த தாமரை போன்ற பாதங்களையும், வளையல் அணிந்த இளம் மூங்கில் போன்ற கரங்களையும், சந்திரனை ஒத்த ஒளிமிக்க முகத் தாமரையையும், கஸ்தூரியும் குங்குமமும் தரித்த மார்பையும், இனிமையான யாழ் போன்றதும் அமிர்தம் போன்றதுமான வசனத்தையும், இளநகையையும், வசீகரிக்கும் (இந்த்ரகோபம் என்ற சிவந்த பூச்சி போன்ற) சிவப்பான அதரங்களையும், மரகதப் பச்சை வடிவத்தையும், வானவில் போன்ற புருவங்களையும், இரு குண்டலங்களோடு போர்புரிவது போல காதுவரை நீண்ட கண்களின் நீலமணிகளையும், மடல் ஏட்டில் எழுதி வர்ணித்த பெருமாளே.